2027க்குள் ஜேர்மனியை பின்தள்ளி நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக அதிகமாக உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.
குறிப்பாக இந்தியாவின் நெருங்கிய தோழராகவும், புவியியல் ரீதியாக பக்கத்திலேயே உள்ள நாட்டாகவும் உள்ள இலங்கை, இந்த வளர்ச்சியோடு இணைந்து பயணிப்பது அவசியமாகிறது. அது தவிர்க்க முடியாதவொரு விடயமும் கூடவாகும். அதனை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காண்பித்துள்ளனர்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையானது, சவால்கள் நிறைந்ததாக இருக்கின்றது. என்றாலும், இலங்கை அந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்ளெழுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2024 இல் இலங்கை சிறிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2024 இல் இலங்கையின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியானது 1.7சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்புகள் ஏறத்தாழ 4.4 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்களுக்கும் அதிமாக நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
இருநாட்டுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவருகின்றன. 2022–2023ஆம் ஆண்டில் இருநாட்டுக்கிடையிலான மொத்த வர்த்தக மதிப்பு 5.45 பில்லியன் டொலர்களையும் கடந்துள்ளது.
இதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி 1.2 பில்லியன் டொலர்கள் என்றும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி 4.25 பில்லியன் டொலர்கள் என்றும் பதிவாகியுள்ளது.
இந்தியா, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், இலங்கையில் அதிக முதலீடு செய்து வரும் வெளிநாட்டு நாடுகளிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கையில் முதலீட்டு ரீதியாகவும் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. 2023 வரை இலங்கையில் இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீடு 1.8 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
அதானி குழுமம், டாட்டா ஹவுசிங், லங்கா ஐ.ஓ.சி, ஏயார் டெல், அசோக் லேலாண்ட் போன்ற முக்கிய இந்திய நிறுவனங்கள் இலங்கையில் துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் நிரப்பும் நிலையங்கள், மற்றும் தங்குமிடங்கள் போன்ற பல துறைகளில் முதலீடு செய்து வருகின்றன.
இத்தகைய முதலீடுகள் நாட்டிற்குள் வேலைவாய்ப்புக்களையும், தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. தற்போதைய கணிப்புகளின்படி, இலங்கையில் இந்திய நிறுவனங்கள் சுமார் 25,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டிலும் இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக உள்ளது. இந்திய அரசின் சர்வதேச புலமைப்பரிசில் உதவித்தொகைகளின் கீழ் 2023–2024ஆம் ஆண்டில் 340க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
முக்கியமாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இலங்கை மாணவர்கள் இந்தியாவில் உயர் கல்வி பயின்றுவருகின்றனர். மேலும், ‘இந்தியா, இலங்கை திறன்விருத்தி’ நடவடிக்கையின் கீழ் 2023இல் 3,000 இளைஞர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுள்ளனர்.
சுற்றுலாவும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியத் துறையாக மாறியுள்ளது. 2023இல் இலங்கையை வந்தடைந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 302,844ஆக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் அது 416,394ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் 2025இல் முதல் நான்கு மாதங்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 157,059ஆக காணப்படுகின்றது.
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப்பயணிகளில் ஒருவர் சராசரியாக 450 டொலர்கள் வரை செலவிடுகின்றனர் என்பதும் சுற்றுலாத்துறையின் ஊடான வருமானத்தில் முக்கிய தாக்கம் செலுத்துவதாக உள்ளது.
குறிப்பாக, இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் சுற்றுலாத்துறையின் வருமானத்தினையே அதிகளவில் நம்பியிருக்கின்றது. ஏனென்றால் அமெரிக்காவின் தீர்வை வரி விவகாரம் ஆடைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதிகளவு சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
அதேநேரம், தேயிலை,இறப்பர் உள்ளிட்ட பணப்பயிர்களினால் இலங்கை அடைந்துகொள்ளும் வருமானம் போதியளவில் போதாமையாக இருக்கின்றமையும் இங்கு முக்கியமானதொரு விடயமாகின்றது. ஆகவே சுற்றுலாத்துறை இலங்கையின் மீளெழுச்சியில் கைகொடுக்கின்ற பிரதான விடயமாகும்.
இதேவெளை, பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு போன்று நவீன துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து செயற்படுகின்றன. இந்தியாவின் ‘சகர்’ கொள்கையின் கீழ், இலங்கை கடல்சார் பாதுகாப்புப் பயிற்சிகளில் பங்கேற்று வருகிறது. கொழும்பு மேற்கு துறைமுகத்தில் ‘அதானி போட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, 2.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான நவீன செயற்றிறன் கொண்ட கொள்கலன் முனையத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இதேவேளை, அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வர்த்தகம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உட்பட ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகின்றது.
இதனைவிடவும், இந்தியாவுடன் சேபா போன்ற வர்த்தக ஒப்பந்தங்களை மீண்டும் தொடங்கும் முயற்சிகள் தொடர்பிலான பேச்சுக்களும் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது. அதேநேரம், இந்தப்பேச்சுக்கள் இருநாடுகளுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று இந்தியா, மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான திட்டத்தின் கீழ் இலங்கை ஒரு ‘துணைமையஇடமாக’ விரைவில் அடையாளம் பெறும் வாய்ப்பும் உள்ளது. இது வர்த்தக, போக்குவரத்து, தகவல் தொடர்பு, மற்றும் சுற்றுச்சூழல் உறவுகளுக்கு புதிய உந்துசக்தியாக அமையும்.
மேலும், இந்தியா தனது வளர்ச்சியின் உச்சத்தில் செல்லும் தருணத்தில், இலங்கை தனக்கு அண்மித்துள்ள பிராந்திய சக்தியுடன் இணைந்து பயணிக்காமல் இருந்தால் அது பெரும் தவறாகும். இலங்கை, தனது கேந்திர ஸ்தானம், திறமையான மனிதவளம் மற்றும் இந்தியா வழங்கும் பலதரப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி, தன்னிறைவு நோக்கி முன்னேற வேண்டும்.
இது ஒரேநேரத்தில் இலங்கையின் பொருளாதார மேம்பாடையும், அரசியல் நிலைப்பாட்டையும் உறுதி செய்யும். அதற்காக தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தமது கடந்தகால இந்திய எதிர்ப்பு மையவாத சிந்தனையில் இருந்து விடுபட வேண்டியது அவசியமாகின்றது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!