இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19-20ஆம் திகதி வரையில் இரண்டு நாள் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோக பூர்வமான விஜயமானது, வெறும் சம்பிரதாயபூர்வமான அரசமுறைப் பயணமாக அமையாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மீள்வரைவு செய்யும் முக்கிய நகர்வாக அமைந்திருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த உயர்மட்ட விஜயம், இந்தியாவின் 'அயலகத்திற்கு முதலிடம்'என்ற கொள்கையின் வலுவான நீட்சியாகவும், இலங்கையின் புதிய நிர்வாகத்துடன் நம்பிக்கையானதொரு பயணத்தைத் தொடங்குவதற்கான ஆக்கப்பூர்வமான சமிக்ஞையாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் மிக முக்கியமான அரசியல் அம்சமாக ஜே.வி.பி தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள முதிர்ச்சியான மாற்றம் என்பதைக் கொள்ள முடியும். 

வரலாற்று ரீதியாக ஜே.வி.பி, 'இந்திய விஸ்தரிப்புவாதம்' என்ற கோஷத்தை முன்வைத்து தீவிரமான இந்திய எதிர்ப்பு கொள்கையைக் கொண்டிருந்த ஒரு இயக்கமாகும்.

குறிப்பாக 1980களில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது, அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் வரலாற்றுப் பதிவுகள் இருப்பினும், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம், அந்தப் பழைய கொள்கைகளில் இருந்து விலகி, யதார்த்தமான பூகோள அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்திய துணை ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார காட்டிய ஆர்வம் மற்றும் வரவேற்பு, ஜே.வி.பி தனது கடந்தகால இந்திய எதிர்ப்புப் பிம்பத்தை உடைத்து, இந்தியாவை தவிர்க்க முடியாத மூலோபாய பங்காளியாக அங்கீகரித்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடனான சந்திப்புகளின் போது, இருதரப்பு உறவுகளின் எதிர்காலப் பாதை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது ஆழமான இணக்கம் காணப்பட்டது.

குறிப்பாக, தொழில்நுட்ப ரீதியாக இந்தியா அடைந்துள்ள பாரிய வெற்றிகளைப் பகிர்ந்து கொள்ள இலங்கை காட்டிய ஆர்வம் மிக முக்கியமானது. இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதிலும், மனிதவள மேம்பாட்டிலும் இந்தியாவின் தொழில்நுட்பப் பாய்ச்சலைப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்திருப்பது, ஒரு நவீன இலங்கையை நோக்கிய பயணத்தில் இந்தியா ஒரு மூலோபாயப் பங்காளியாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

'தித்வா' சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும், பொருளாதார நெருக்கடி நிலவிய மிகக் கடினமான தருணங்களிலும் இந்தியா வழங்கிய உடனடி உதவிகள் குறித்து இச்சந்திப்புகளில் நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.

குறிப்பாக, எரிசக்தி நெருக்கடியின் போது வழங்கப்பட்ட 38,000 மெற்றிக் தொன் எரிபொருள் மற்றும் டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதி ஆகியவை, இரு நாடுகளுக்கும் இடையிலான 'உற்ற நண்பன்' என்ற பிணைப்பை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டது போல, இந்தியாவின் இந்த ஆதரவு வெறும் பொருளாதார உதவி மட்டுமல்ல, அது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் அடையாளமாகும்.

இந்த விஜயத்தின் மிக முக்கியமான மனிதாபிமான மைல்கல்லாக, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு வழங்கப்பட்ட தீர்வுகளைக் குறிப்பிடலாம்.

பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற புலம்பெயர் இந்தியர்களின் விசேட நிகழ்வில் உரையாற்றிய துணை ஜனாதிபதி, இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை வழங்கும் திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.

இது மலையக மக்களின் அடையாளச் சிக்கல்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்வாகும். 'ஊட்டி முதல் ஹட்டன் வரை, மதுரையில் இருந்து மஸ்கெலியா வரை எமது தொப்புள்கொடி உறவு வியாபித்துள்ளது' என அவர் உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டது, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஆழமான கலாசார ஒருமைப்பாட்டைப் பிரதிபலித்தது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களின் கீழ், மூன்றாம் கட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட 145 வீடுகளை அவர் வைபவரீதியாகக் கையளித்தார்.

இதுவரை 50,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்ற உறுதிமொழி, மலையக மக்களின் வாழ்வில் இந்தியா கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியது.

அதேபோல், இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை ஊடாக வழங்கப்பட்டு வரும் கல்விப் புலமைப்பரிசில் நிதியுதவியை உயர்த்துவதற்கும், அதன் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வருடமும் அதிகரிப்பதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானம், எதிர்காலத் தலைமுறையினரின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் இந்தியாவின் நீண்டகாலப் பார்வையைக் காட்டியது

அரசியல் ரீதியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து அவர் கலந்துரையாடினார். இது இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு தேசமாக இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள நிலையான மற்றும் சமநிலையான உறவை வெளிப்படுத்தியது.

மேலும், நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் அவர் மேற்கொண்ட வழிபாடு, இரு நாடுகளையும் இணைக்கும் இதிகாச காலத்து ஆன்மீகப் பாலத்தை மீண்டும் நினைவூட்டியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலில் சீதையம்மன் கோயில் புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவு, கலாசார ராஜதந்திரத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.

மீனவர் பிரச்சினை போன்ற சிக்கலான விவகாரங்களுக்கு இரு தரப்பினரும் இணைந்து ஒரு நீண்டகால நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியமை, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பில் இந்தியாவின் பொறுப்புணர்வைக் காட்டியது.

பொருளாதார ரீதியாக இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சியின் பயன்கள், அதன் அண்டை நாடான இலங்கையையும் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதிப்பாடு, 'இணைவோம், வளர்வோம்' என்ற தாரக மந்திரத்தை வெறும் சொல்லாக அல்லாமல் செயலாக மாற்றும் முயற்சியாகும்.

இந்திய துணை ஜனாதிபதியின் இந்த விஜயம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புகளைத் தாண்டி, சாதாரண மக்களின் உணர்வுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த ஒரு 'சகோதரத்துவ இராஜதந்திரத்தை' மீண்டும் ஒருமுறை ஆழமாக வேரூன்றச் செய்துள்ளது.

ஜே.வி.பி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்தியாவின் கரம் கோர்த்திருப்பது, பிராந்திய அரசியலில் ஒரு புதிய முதிர்ச்சியின் அடையாளமாகும். இலங்கையின் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் உற்ற நண்பனாகவும் மூத்த சகோதரனாகவும் இந்தியா இருக்கும் என்ற அவரது வரிகள், இரு தேசங்களுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

இது பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைவதுடன், எதிர்காலத்தில் தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் முன்மாதிரியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

உத்தியோகபூர்வ சந்திப்புகள் முதல் ஆன்மீகப் பயணங்கள் வரை அனைத்தும் இந்த விஜயத்தை முழுமையான வெற்றியாக்கியுள்ளன. அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது.