திருகோணமலை, கன்னியாவில் தொல்பொருள் திணைக்களத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்டுமானப் பணியானது, தமிழ் மக்களுக்கு எதிரான அதன் நீண்டகால இனவாத நிலைப்பாட்டையும் அதிகார வரம்புமீறலையும் மீண்டும் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
கன்னியாவில் மடத்தடி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான நிலத்தில், கடந்த வாரம் இந்த சந்தேகத்திற்குரிய கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தை 2002ஆம் ஆண்டு புனரமைப்பு செய்ய முயன்ற போது பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தொல்பொருள் திணைக்களம் அப் பகுதியைத் தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தி அறிவித்தல் வெளியிட்டதுடன், அங்கு மேற்கொள்ளப்படவிருந்த கட்டுமானங்களுக்கும் உடனடித் தடை விதித்தது.
இதற்கு எதிராக ஆலய நிர்வாகத்தினால் தொடரப்பட்ட வழக்கை விரிவாக விசாரித்த திருகோணமலை மேல்நீதிமன்றம், 2019 ஆம் ஆண்டில் குறித்த இடத்தில் எந்தவொரு மதக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்து உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்றத்தின் அந்தத் தெளிவான தடையை மீறியே தொல்பொருள் திணைக்களம் தற்போது புதிய கட்டுமானப் பணிகளைத் தன்னிச்சையாக ஆரம்பித்திருக்கிறது.
கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் சிதைந்து கிடக்கும் சோழர் காலத்தில் பௌத்தம் கற்பிக்கப்பட்ட சைத்தியவின் கட்டுமானப் பகுதியை பாதுகாக்கும் நடவடிக்கையே இதுவென தொல்பொருள் திணைக்களம் நியாயப்படுத்த முற்படுகிறது.
இருப்பினும், குறித்த நிலம் மடத்தடி முத்துமாரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமானது என்பதற்கான சட்டப்பூர்வ உறுதிகள் ஆலய நிர்வாகத்திடம் இருப்பதோடு, அது ஏற்கனவே நீதிமன்றிலும் உறுதிப்படுத்தப்பட்டவொரு உண்மையாகும்.
ஆலயத்திற்கு வேறு இடம் வழங்கி, அந்த நிலத்தை தொல்லியல் பிரதேசமாக மட்டுமே பாதுகாப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அதற்கமைய அங்கு தொல்பொருள் திணைக்களம் அகழாய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது திடீரென பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான நிலத்திலேயே புதிய கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அங்கே அமைக்கப்படுவது ஆலயமா, விகாரையா அல்லது வேறு ஏதேனுமா என்பதை தொல்பொருள் திணைக்களம் வெளிப்படையாகக் கூறாமல் மறைக்க முயற்சிக்கிறது.
வெறுமனே தொல்பொருள் சின்னத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்றால், அதற்கு எதற்காக அடிக்கல் நாட்டப்பட வேண்டும், எதற்காக செங்கற்கள் கொண்டு வந்து குவிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன.
சாதாரணமாக எந்தவொரு ஆரவாரமும் இன்றி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்கு, பௌத்த மதகுருமார்களும் மௌலவிகளும் அழைத்து வரப்பட்டிருப்பதும், மாவட்ட அரசாங்க அதிபர் அதனைத் தொடங்கி வைத்திருப்பதும் வலுவான சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
எந்தவொரு மதக் கட்டுமானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், வரலாற்று ரீதியாக அங்கே ஆலயம் அமைந்திருந்த சூழலில் முதலில் அழைக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் இந்துக் குருமார்களே ஆவர்.
ஆனால், அவர்களோ அல்லது கிறிஸ்தவ மதகுருமார்களோ அழைக்கப்படாமல், பௌத்த குருமாரின் முன்னிலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருப்பது, இக்கட்டுமானத்தின் உண்மையான நோக்கம் என்னவென்ற சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
தொல்பொருள் சின்னங்களை அப்படியே சிதையாமல் பாதுகாப்பதே திணைக்களத்தின் சட்டப்பூர்வ பணியாகும். மாறாக, முற்றிலும் சிதைந்துபோன சின்னங்களை தனது சொந்தக் கற்பனைக்கேற்ப புதிதாக வடிவமைத்துக் கட்டுவது அல்ல.
குருந்தூர்மலையிலும் இதுவே நடந்தது; அங்கிருந்த பாரம்பரிய ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு, நீதிமன்றத் தடையையும் மீறி அரச படைகளின் துணையுடன் ஒரு பௌத்த விகாரை இரகசியமாகக் கட்டி முடிக்கப்பட்டது.
இப்போது முழுமையாகக் கட்டப்பட்ட அந்த விகாரையில், அது பல நூற்றாண்டுகள் பழமையானது என்று வரலாற்றுக் குறிப்பு எழுதப்பட்டு புதிய வரலாறு உருவாக்கப்படுகிறது.
வவுனியாவில் சமணங்குளம், கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமானத்திற்குத் தடைவிதித்த தொல்பொருள் திணைக்களம், அதே வளாகத்தில் இருந்த பழைய அடித்தளச் சிதைவிலிருந்து பௌத்த சின்ன மொன்றைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.
பிள்ளையார் ஆலயத்தைப் புனரமைக்கத் தடைவிதித்து விட்டு, அதே இடத்தில் பௌத்த சின்னத்தை தன்னிச்சைப்படி நிறுவும் போக்கை திணைக்களம் பின்பற்றுகிறது.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களையும் ஆலயங்களையும் ஆக்கிரமித்து பௌத்தமயமாக்கும் இத்தகைய செயற்பாடுகளுக்கு தொல்பொருள் திணைக்களமே முதன்மைக்கருவியாகத் தொழிற்படுகிறது.
மாறாக, தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் மந்திரி மனையைக் காப்பதில் இத்திணைக்களம் காட்டிய அலட்சியம் தெளிவானது. மந்திரிமனை கொஞ்சம் கொஞ்சமாகச் சேதமடைந்து முழுமையாக இடிந்து விழுந்த பின்னரே தொல்பொருள் திணைக்களம் விழித்துக் கொண்டது.
தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் என்பதால் அது திட்டமிட்டே கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தின் மதவாத நிலைப்பாட்டின் வெளிப்படை தான் இதற்கான அடிப்படையாகும்.
இதனிடையே, தொல்பொருள் திணைக்களத்தின் இத்தகைய ஒருதலைப்பட்சமான மற்றும் இனவாதச் செயற்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னரே, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, சேதமடைந்து கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மந்திரி மனையை அபிவிருத்தி செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
இருப்பினும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு மற்றொரு சம்பவமும் சான்றாக அமைகிறது.
குருந்தூர் மலையில் மீண்டும் இந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்கோ அல்லது வழிபாடுகளை மேற்கொள்வதற்கோ அனுமதிக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபை உத்தியோகபூர்வமாக கோரிக்கை அனுப்பியிருந்தது.
ஆனால், அதற்குக் பதிலளித்த தொல்பொருள் திணைக்களம், குருந்தூர் மலையில் சைவ ஆலயம் ஒன்று இருந்ததற்கான எந்தவொரு தொல்பொருள் சான்றுகளும் இல்லை எனக்கூறி அக்கோரிக்கையை அடியோடு நிராகரித்தது.
ஆட்சியாளர்கள் மாறினாலும் தொல்பொருள் திணைக்களத்தின் அடிப்படை இனவாதச் சிந்தனையும் இலக்குகளும் மாறவில்லை. தற்போதைய அரசாங்கம் தாம் இனவாதமற்ற ஆட்சியை நடத்துவதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளுக்கே துணைபோகிறது.
திணைக்களத்தின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்காக, சோமாவதி வனப்பகுதியில் சோழர் காலத்து மங்களபுரம் சிவன் கோவிலைப் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் கூறிக்கொள்கிறது.
இது தாங்கள் இனவாத நோக்கில் செயற்படவில்லை எனக் காட்டுவதற்கான ஒரு போலி முயற்சியே ஆகும். பாராளுமன்றத்தில் அமைச்சர் சுனில் செனவியும் தொல்பொருள் திணைக்களம் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மதிக்காமல், தறிகெட்டு ஓடும் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிவாளம் போட அரசாங்கம் தயாராக இல்லை என்பதிலிருந்தே, பேரினவாத விரிவாக்கத்திற்கு இத்திணைக்களம் எவ்வாறு நவீன கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
நீதிமன்ற உத்தரவுகளையே மதிக்காத தொல்பொருள் திணைக்களத்திடம் இதற்கு மேல் நியாயமான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாது. ஆகவே சட்ட ரீதியான அணுகுமுறைகளைத் தாண்டிய புதிய வியூகம் தற்போது அவசியமாகியுள்ளது. இதனை வட,கிழக்கு அரசியல் தரப்புக்கள் மட்டுமல்ல, சிவில் மற்றும் சாதாரண பொதுமக்களும் உணரவேண்டியது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!