இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் மாகாண சபை முறைமை என்பது 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக உருவான ஒரு முக்கிய அரசியல் கட்டமைப்பாகும்.
இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் முடக்கப்பட்டிருப்பது, தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சூழலில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கும், வட-கிழக்குத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு, ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்றபோது மாகாண சபைத் தேர்தல்களை மையப்படுத்திய முக்கிய விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.
கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இந்திய துணை ஜனாதிபதி முக்கியமான விடயத்தைப் பகிர்ந்துகொண்டார். அதாவது, மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வருகின்றமை குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான தனது சந்திப்பின்போது அவர் கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.
அதற்கு ஜனாதிபதி அநுரகுமார சாதகமான சமிக்ஞையை வழங்கியிருப்பதாகவும் இந்திய துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது, தற்போதைய அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும், உள்நாட்டு நிர்வாகத் தேவைகளுக்காகவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் ஓரளவு இணக்கப்பாட்டைக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
அதேநேரம், துணை ஜனாதிபதியின் கூற்றுக்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முழுமையான அமுலாக்கத்தில் புதுடில்லியின் நிலைப்பாடு மாறாமல் இருப்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டே முடக்கப்படுவதை இராஜதந்திர ரீதியாகச் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக இருக்கும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்காகத் தான் முன்வைத்த தனிநபர் பிரேரணையை அவர் நினைவூட்டினார்.
அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் எல்லை நிர்ணயம் போன்ற காரணங்களை முன்வைத்து தேர்தலைத் தொடர்ந்து இழுத்தடிப்பது ஜனநாயக விரோதமானது என்றும் அவர் விவரித்தார்.
தேர்தல்கள் நடத்தப்படாததால், மாகாண சபைகளின் அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் இல்லாமல், ஆளுநர்கள் ஊடாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே தங்கியிருப்பது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதிக்கும் செயலாகும் என்பதை அவர் துணை ஜனாதிபதியிடம் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
மறுபுறம், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் செல்வராசா கஜேந்திரன் முன்வைத்த கருத்துகள் மாகாண சபை முறைமையின் அடிப்படைப் பலவீனம் குறித்த விடயங்களை வெளிப்படுத்தியது.
13ஆவது திருத்தச் சட்டமும் அதன் வழி உருவான மாகாண சபைகளும் இலங்கையின் இறுக்கமான ஒற்றையாட்சி (ஏக்கிய ராஜ்ய) கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை. சமஷ்டி தத்துவத்தின்படி, அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் பகிரப்பட்டிருக்க வேண்டும்; அவை ஒன்றிற்கு ஒன்று குறைந்தவை அல்ல. ஆனால், இலங்கையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்த நேரத்திலும் மீளப்பெறப்படக் கூடியதாகவே உள்ளன.
கடந்த 38 ஆண்டுகளில் வழங்கப்பட்ட 32-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திக்குக் கொண்டு செல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தன என்பதை கஜேந்திரன் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
இதனால், வெறும் தேர்தலை மட்டும் நடத்துவது தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தராது என்பதும், தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வே அவசியம் என்பதும் அவர் வழங்கிய மகஜரின் சாரமாக இருந்தது.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாத சூழலில், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் எவ்வாறு மத்திய அரசினால் அத்துமீறிப் பறிக்கப்படுகின்றன என்பதற்குச் சில உதாரணங்களைச் சிவஞானம் சிறிதரன் மற்றும் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் முன்வைத்தனர்.
மாகாண சபைகளின் கீழிருந்த பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் முயற்சி, மாகாண அதிகாரங்களில் மத்திய அரசு நேரடியாகத் தலையிடுவதைக் காட்டுகிறது.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் மாகாண சபைகளின் அதிகார வரம்பைப் புறந்தள்ளி முன்னெடுக்கப்படுகின்றன.
வெடுக்குநாறி மலை போன்ற பாரம்பரிய இடங்கள் மற்றும் திரியாய பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த, அதிகாரமிக்க மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளின் அவசியம் இச்சந்திப்பில் அழுத்தமாகக் கூறப்பட்டது.
பொருளாதார ரீதியாகப் பின்னடைந்துள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியாவின் உதவி தற்போதைய சூழலில் மிக அத்தியாவசியமானது. குறிப்பாகத் தமிழகத்துடனான நெருக்கமான பொருளாதார உறவின்றி இலங்கையின் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதைத் தமிழ்த் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, இலங்கை அரசாங்கத்தின் மீது கணிசமான இராஜதந்திர அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலம், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும், 13ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சமஷ்டி தீர்வை நோக்கி நகரவும் இந்தியா உதவ வேண்டும் எனக் கோரப்பட்டது. 2015இல் பிரதமர் மோடி குறிப்பிட்ட 'கூட்டுறவு சமஷ்டி' முறையை அமுல்படுத்த இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என சி.வி.கே. சிவஞானம் வலியுறுத்தினார்.
சந்திப்பின் இறுதியில், இந்திய துணை ஜனாதிபதி ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கினார். தமிழ்த் தலைவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சி.வி.கே. சிவஞானம் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கரங்களைப் பற்றியவாறு, தமிழர்களுக்காகப் பல கட்சிகள் இருந்தாலும், பொதுவான இலக்குகளுக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இது ஈழத் தமிழ் அரசியல் சக்திகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு தார்மீக அழைப்பாகக் கருதப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்தச் சந்திப்பானது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஒரு சர்வதேச அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல்கள் நடத்தப்படுவது ஒரு தற்காலிகத் தீர்வாக இருந்தாலும், அது தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், அவர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கவும் முதற்கட்டத் தேவையாக உள்ளது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தலை உறுதிப்படுத்துவதே தமிழர்களின் அரசியல் விடுதலையை நோக்கிய அடுத்த கட்ட நகர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!