இலங்கை அரசியலில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தசாப்த காலங்களாகத் தொடரும் ஒரு நீண்ட போராட்டமாகும். பல்வேறு காலகட்டங்களில் பல தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமை மற்றும் மாறி மாறி வந்த அரசாங்கங்களின் போலி வாக்குறுதிகள் காரணமாக அவை வெறும் காகித வடிவங்களாகவே இருந்து வந்துள்ளன.
இந்நிலையில், 2026 ஏப்ரல் 09 அன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் உயர்மட்ட இரண்டாவது சந்திப்பு, தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவருவது என்பது எப்போதும் சவாலான காரியமாகவே இருந்துள்ளது.
ஒவ்வொரு கட்சியும் வௌ;வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தாலும், 'சமஷ்டி' என்ற பொதுப் புள்ளியில் இணைவதற்கான முயற்சியைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை சிறப்பாக முன்னெடுத்துள்ளது.
கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய பிரதான கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைவின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், முன்மொழியப்பட்ட அடிப்படை அரசியல் அம்சங்கள் தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளமை தான்.
தமிழ் மக்கள் ஒரு சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனம், மாநில அதிகாரங்கள் மீளப்பெறப்பட முடியாத வகையில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் மற்றும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்துள்ள அரசகரும மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் போன்ற சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படைத் தூண்கள் இந்த வரைபில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியல் தீர்வு என்பது உணர்வு பூர்வமானதாக மட்டுமல்லாமல், சர்வதேசத் தரம் வாய்ந்த சட்ட ரீதியான பலத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதனை உணர்ந்து, அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள் மற்றும் கல்விமான்களை உள்ளடக்கிய ஒரு நிபுணர் குழுவை அமைப்பதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.
சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன் தலைமையில், பேராசிரியர் எம். சொர்ணராஜா, பேராசிரியர் என். செல்வக்குமாரன், பேராசிரியர் வி.ரி. தமிழ்மாறன், சிரேஷ்ட விரிவுரையாளர் என். சிவகுமார் மற்றும் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் அடங்கிய இந்த நிபுணர் குழு, கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்வாங்கி விரிவான தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கவுள்ளது.
குறிப்பாக, இக்குழுவில் ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சியிலிருந்தும் ஒரு பிரதிநிதி உள்வாங்கப்படுவது, அந்தந்தக் கட்சிகளின் தனித்துவமான கொள்கைகளும் இந்த வரைபில் பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்யும்.
அதேபோல், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலாநிதி சிவக்குமார் போன்றவர்களின் பங்களிப்பு மற்றும் கிழக்கிலிருந்து மற்றுமொரு பிரதிநிதியை நியமிக்கும் முடிவு என்பன வடக்கு - கிழக்கு இணைந்த அரசியல் அபிலாஷைகளை வலுப்படுத்துவதாக அமைகின்றன.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருமித்த இணக்கப்பாட்டிற்கு வந்துவிட்டன என்பது வெற்றியின் ஆரம்பமே தவிர, அதுவே இறுதியானதல்ல. இங்கு எழும் பிரதான கேள்வி, 'இலங்கை அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்புச் செயற்பாட்டை நேர்மையுடன் முன்னெடுக்குமா?' என்பதுதான்.
கடந்த காலங்களில் பல ஆணைக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் அமைக்கப்பட்ட போதிலும், பெரும்பான்மைவாத அரசியலின் பிடிக்குள் சிக்கி அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.
இருப்பினும், இந்த முறை சூழல் சற்று மாறுபட்டது. ஏற்கனவே பல்வேறு கட்சிகள் வௌ;வேறு தீர்வுத் திட்டங்களை வைத்திருந்ததால், 'தமிழர்களுக்கே ஒரு தெளிவான திட்டம் இல்லை' என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைக்க முடிந்தது. ஆனால், தற்போது அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஒரு பொதுவான வரைபு தயாராகும்போது, அரசாங்கத்தினால் அத்தகைய சாக்குப் போக்குகளை இனி கூறமுடியாது.
சர்வதேச மட்டத்திலும் இலங்கை அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியைத் தரும் ஒரு கருவியாக இந்த 'ஒருங்கிணைந்த வரைபு' அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்க இடமில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த பேச்சுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போது, தமிழ் மக்கள் சார்பாக இந்த வரைபே ஒரே குரலாக முன்வைக்கப்படும் என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை காலத்தின் தேவையாகும்.
இந்த முயற்சி முழுமையடைய வேண்டுமானால், தயாரிக்கப்படும் வரைபு வெறும் சட்ட ஆவணமாக மட்டும் இருக்காமல், மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பணி மிகக் கடினமானது. அவர்கள் சட்ட நுணுக்கங்களையும், அரசியல் யதார்த்தங்களையும் சமநிலைப்படுத்த வேண்டும்.
அதேசமயம், தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த ஒற்றுமையை இறுதிவரை பேண வேண்டியது அவசியம். சிறு சிறு அரசியல் லாபங்களுக்காக இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் விரிசல்கள் ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரங்களைக் கையாண்டாலும், தமிழ் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுத்தரும்.
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பின் கீழ் எட்டப்பட்டுள்ள இந்த இணக்கப்பாடு வரவேற்கத்தக்கது. இது வெறும் ஆவணத் தயாரிப்பு மட்டுமல்ல, இது தமிழ் மக்களின் சிதறிக்கிடந்த அரசியல் பலத்தை ஒன்றிணைக்கும் ஒரு தந்திரோபாய நகர்வுமாகும்.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் காட்டும் ஆர்வம் உண்மையானதாக இருந்தால், இந்த நிபுணர் குழு தயாரிக்கும் வரைபினை அடிப்படைத் தரவாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.
காலங்கடத்தப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, இந்த ஒருங்கிணைந்த முயற்சி வெறும் காகிதத்துடன் நின்றுவிடாமல், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு நிலையான அரசியல் தீர்வாக உருவெடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். இந்த ஒற்றுமை தொடரும் பட்சத்தில், நீண்டகால இனப்பிரச்சினைக்கான விடிவு காலம் வெகுதொலைவில் இல்லை.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!