அண்மைக் காலமாக இலங்கையின் அரசியல் மற்றும் ஊடகப் பரப்பில் மிகத் தீவிரமான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ள ஒன்று, பாராளுமன்ற விவாதத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 'இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவன சட்டமூலம்' (Institute of Chartered Media Professionals Bill) ஆகும்.
வடகொரியா மற்றும் சீனா போன்ற வளர்முக நாடுகளில் மக்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கான உரிமைகளும், மாற்றுக்கருத்துகளை வெளியிடுவதற்கான ஊடக வெளிகளும் எவ்விதமாக அரசின் இரும்புக்கரங்களால் நசுக்கப்பட்டு வருகின்றனவோ, அதேபோன்றதொரு சர்வாதிகாரப் பாதையை நோக்கி இலங்கையும் பயணிக்கத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை இச்சட்டமூலம் தோற்றுவித்துள்ளது.
ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைதல், தவறான தகவல்களின் பரவல் மற்றும் தொழில்முறை தரநிலைகள் குறித்த கவலைகள் ஆகியவை உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பத்திரிகைத் துறைக்கு பொறுப்புக்கூறல் தேவையில்லை என்றும் கூறிவிட முடியாது.
ஆனால், அந்தப் பொறுப்புக்கூறலானது ஊடகச் சுதந்திரம், பன்முகத்தன்மை மற்றும் அதிகாரத்தை கண்காணிக்கும் ஊடகத்தின் அடிப்படைப் பங்கைப் பலவீனப்படுத்தாத வகையில் அமைய வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஊடகச் சுதந்திரம், தகவல் அணுகல் மற்றும் சனநாயக ஆட்சியை வலுப்படுத்துவதாக உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தது.
எனவே, இந்த சட்டவரைவு அதன் கவர்ச்சிகரமான உள்ளடக்கத்தால் மட்டுமல்ல, சுயாதீனமான நிறுவனங்களுடன் அரசாங்கம் எவ்வாறு தொடர்புகொள்கிறது என்பதன் அடிப்படையிலும் ஆழமாக மதிப்பிடப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள சூழலில், இச்சட்டமூலமானது எவ்வித சட்டவாக்கத் தடைகளுமின்றி இயல்பாகவே சட்டமாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகளவில் காணப்படுகின்றன.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்தச் சட்டமூலமானது மிகவும் கவர்ச்சிகரமான நோக்கங்களைக் கொண்டிருப்பதாகவே தோன்றும். ஊடகத் துறைக்குள் முறையான கல்வி மற்றும் தொழிற்தகுதிகளை அறிமுகப்படுத்துதல், ஊடகவியலாளர்களுக்குப் பட்டய அந்தஸ்து வழங்குவதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் ஊடகத் துறையின் சமூகப் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் ஆகிய நேர்மறையான இலக்குகளை இது கொண்டிருப்பதாக அரச ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
மருத்துவம், சட்டம், கணக்கியல் மற்றும் பொறியியல் போன்ற ஏனைய துறை சார்ந்த தொழில்முறையாளர்களுக்கு இருப்பது போன்ற ஒரு தொழில்முறைப் பாதுகாப்பும் கௌரவமும் ஊடகவியலாளர்களுக்கும் இதன் மூலம் கிடைக்குமெனக் கூறப்படுகிறது.
இருப்பினும், பத்திரிகைத் துறை என்பது ஏனைய தொழிற்துறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பத்திரிகையாளர்கள் வெறுமனே தகவலை வழங்குபவர்கள் அல்ல் அவர்கள் அரசாங்கம், அரச நிறுவனங்கள் மற்றும் அதிகார மையங்களைப் பொதுமக்களின் சார்பில் கேள்விக்குட்படுத்துபவர்கள். எனவே, தொழில்முறை தரநிலைகள் அவசியமானவை என்றாலும், அவை விமர்சன சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக மாறக்கூடாது.
இச்சட்டமூலத்தின் மிகப்பெரிய சவாலாக அமைவது, அதன் 27ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஊடகப் பணியாளர்கள்' என்பதற்கான மிகப்பரந்த வரையறையாகும். பாரம்பரியமாகச் செய்திகளைச் சேகரித்து வெளியிடும் அச்சு மற்றும் மின்னணு ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக உரிமையாளர்களைத் தாண்டி செய்தி வாசிப்பாளர்கள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள், சமூக வலைத்தள எழுத்தாளர்கள், ஊடகக் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் எனத் தகவல் பரிமாற்றத்தோடு தொடர்புடைய அனைவருமே இந்தச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். வேறுபட்ட நலன்களைக் கொண்ட இந்தத் தரப்பினரை ஒரே அமைப்பிற்குள் கொண்டு வருவது பிரதிநிதித்துவம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஊடக நிறுவனங்களின் வணிக அல்லது அரசியல் நலன்களுக்கும் பத்திரிகையாளர்களின் ஆசிரியர் சுதந்திரத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும்போது இக்கட்டமைப்பு யாரைப் பாதுகாக்கும் என்பது தெளிவில்லை.
இச்சட்டமூலம் தோற்றுவிக்க முனையும் 'இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனம்' எனும் சட்டபூர்வக் கூட்டுத்தாபனத்தின் ஆளுகைக் கட்டமைப்பானது, நிறைவேற்று அதிகாரத்தின் நேரடிச் செல்வாக்குக்கு உட்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் ஆரம்பகட்ட நிருவாகம், உறுப்பினர் சேர்க்கைக்கான அளவுகோல்கள், தொழிற்தகுதி நெறிமுறைகள் மற்றும் தேர்தல் விதிகளைத் தீர்மானிக்கும் முதன்மை அதிகாரத்தைக் கொண்ட இடைக்காலக் குழுவை நியமிக்கும் முழுமையான ஆளுமைப் பொறுப்பு அமைச்சருக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரால் நேரடியாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட இக்குழுவின் மூலம், அரசின் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரங்கள் ஊடகத் துறையின் உள்வாரி இயங்குதளத்துக்குள் நேரடியாக ஊடுருவுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
சட்ட பகுப்பாய்வு ரீதியாக நோக்குகையில், இச்சட்டமூலத்தின் பல முக்கிய சரத்துகள் 1978 ஆம் ஆண்டின் இலங்கைக் குடியரசு அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுடன் நேருக்கு நேர் முரண்படுகின்றன:
அரசியலமைப்புச் சரத்து 14(1)(ஏ): இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு, எழுத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை உறுதி செய்கிறது. ஒரு அரசாங்கப் பேரவையின் சான்றிதழ் அல்லது பட்டயப் பதிவு மூலமாக மட்டுமே கருத்து வெளிப்பாட்டை முன்னெடுக்க முடியும் எனும் நிலைமையை உருவாக்குவது அடிப்படைச் சுதந்திரத்தைக் குறுக்கும் செயலாகும்.
அரசியலமைப்புச் சரத்து 12(1): 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' எனும் தத்துவத்துக்கு இச்சட்டமூலம் சவாலாக அமைகிறது. பதிவுசெய்த பட்டய ஊடகவியலாளர்கள் மற்றும் பதிவுசெய்யப்படாத சுயாதீன ஊடகவியலாளர்கள் எனத் தொழிற்துறையைப் பிளவுபடுத்துவது சமமான தொழில்புரியும் உரிமையை மறுப்பதாகும்.
அரசியலமைப்புச் சரத்துகள் 3 மற்றும் 4: மக்களிடமே உறைந்துள்ள உச்சக்கட்ட ஆட்சியதிகாரத்தை, ஊடகச் செயல்பாடுகளை அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் பலவீனப்படுத்துகிறது.
இதன் காரணமாகவே, சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளால் உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் இத்தகைய சட்டவாக்கங்களை நிறைவேற்ற வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படுவதோடு நின்றுவிடாது, சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமெனச் சட்ட வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
இந்த சட்டவரைவு தொடர்பான முக்கியமான கேள்வி, நிறுவகத்திற்கு வழங்கப்படும் அதிகாரங்கள் என்ன என்பதல்ல் அந்த அதிகாரங்களுக்கு விதிக்கப்படும் எல்லைகள் என்ன என்பதே ஆகும். இச்சட்டமூலத்தின் 4(ஓ), 23 மற்றும் 24 ஆகிய சரத்துகளின் கீழ் 'தொழில்முறை தவறான நடத்தை' (Professional Misconduct) என்ற காரணத்தைக் காட்டி ஊடகப் பதிவை இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய பேரவைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
ஆனால், இந்த 'தொழில்முறை தவறான நடத்தை' என்ற கருத்து சட்டவரைவில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அரசாங்கத்தை விமர்சிக்கும் புலனாய்வுச் செய்தி, இரகசிய ஆவணங்களை வெளிப்படுத்தும் பொதுநல அறிக்கையிடல் அல்லது அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துரைகள் எதிர்காலத்தில் 'தொழில்முறை தவறான நடத்தை' எனக்கருதப்படுமா? சட்டவரைவு இதற்கான தெளிவான பாதுகாப்புகளை வழங்கவில்லை. இதனால் அரசதிகாரத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிச்சலான ஊடகவியலாளர்கள் தங்களது தொழிலை இழக்கும் அபாயம் ஏற்படுவதோடு, ஊடகப் பரப்பில் சுய தணிக்கை அதிகரிக்கும்.
மேலும், இச்சட்டமூலம் நேரடியாக உறுப்பினர் தகுதி கட்டாயம் எனக் கூறாவிட்டாலும், நடைமுறையில் அரச நிறுவனங்களுக்கான அணுகல், ஊடக சந்திப்புகள் மற்றும் செய்திச் சேகரிப்புக்கான உரிமைகளில் இந்த அங்கீகாரம் முக்கியமானதாக மாறினால், அது ஒரு மறைமுக வடிகட்டியாக மாறும். கடந்த காலத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அமைச்சரவைச் சந்திப்புகளில் அனுமதி என்ற சர்ச்சையை இது நினைவூட்டுகிறது.
இலங்கையில் ஏற்கனவே இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு போன்ற தன்னாதிக்க சுய ஒழுங்குமுறை அமைப்புகள் தொழிற்துறைத் தரங்களைப் பேணி வருகின்றன. இவ்வாறான சூழலில் அரச அதிகாரமுடைய புதிய அமைப்பின் தேவை கேள்விக்குரியதாகிறது.
குறிப்பாக, பிரதான ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் சுயாதீன மற்றும் மாற்று ஊடகங்களின் குரல்களை இச்சட்டச்சட்டம் முடக்கிவிடக்கூடாது.
இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவன சட்டமூலமானது தொழிற்துறை மேன்மை என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட போதிலும், நடைமுறையில் அது ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இறுதியில், விவாதம் 'பத்திரிகைத் துறைக்கு தரநிலைகள் தேவையா?' என்ற கேள்வியில் முடிவதில்லை. அந்த தரநிலைகளை வரையறுப்பது யார்? அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது? அந்த அதிகாரத்திற்கு என்ன வரம்புகள் உள்ளன? என்பதே முதன்மையான கேள்விகளாகும்.
ஊடகச் சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்களுக்கான சிறப்புரிமை அல்ல் அது குடிமக்களின் தகவல் பெறும் உரிமையைப் பாதுகாக்கும் சனநாயக உத்தரவாதமாகும். பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தைப் பலிகொடுக்காமல், தொழில்முறைத் தரத்தை உயர்த்துவதற்கான சமநிலையான சுய-ஒழுங்குமுறை வழிகளை நோக்கி நகர்வதே முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாட்டின் அடையாளமாக அமையும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!