மனித இனத்தின் உயிர்வாழ்விற்கும் கௌரவமான வாழ்க்கைக்கும் அடிப்படையானத் தேவைகளாக உணவும், சுத்தமான குடிநீரும், உடையும், இருப்பிடமும் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் உணவும் குடிநீரும் ஒரு மனிதன் அன்றாடம் உயிர்வாழ மிக அவசியமான அடிப்படை அம்சங்களாகும்.

அதேவேளையில், மனிதன் நாகரிக அடையஉஉநளள பெற்ற சமூகத்தில் ஒரு மனிதனாகத் தன் கௌரவத்தைப் பேணி வாழ ஆடைகளும், பாதுகாப்பானதொரு இருப்பிடமும் இன்றியமையாத தேவைகளாக விளங்குகின்றன.

இருப்பினும், இன்றைய தீவிர இலாப நோக்கம் கொண்ட முதலாளித்துவ உலகில், மனிதனின் அடிப்படை இருப்பிட உரிமை என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

நிலமும், அதன் மீது எழுப்பப்படும் கட்டடங்களும் பொதுச்சொத்தாகவோ அல்லது சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் தளமாகவோ இல்லாமல், தனிநபர்களினதும் பெருநிறுவனங்களினதும் பிரத்தியேகச் சொத்துக்களாகவும், பெரும் இலாபம் ஈட்டித் தரும் வணிகப் பொருட்களாகவும் சுருங்கிவிட்டன.

மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசுகள், தமது கடமைகளிலிருந்து முற்றிலும் விலகி, சர்வதேச மற்றும் உள்நாட்டு வணிக நிறுவனங்களின் இலாப வேட்டைக்குச் சேவை செய்வதையே தமது முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படுகின்றன. இதனால், உலகளவில் பல கோடிக்கணக்கான மக்களுக்குச் சொந்த வீடு என்பது எட்டாத ஒரு வாழ்நாள் கனவாகவே மாறிப்போயுள்ளது.

தற்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 8.3 பில்லியனை எட்டியுள்ளது. இந்த பிரமாண்டமான மக்கள் தொகையில் சுமார் 42 விழுக்காட்டினர் முறையான, பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள் இன்றி வாழ்கின்றனர் என்ற திடுக்கிடும் உண்மையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள '.நா. உலக நகரங்கள் அறிக்கை 2026: உலகளாவிய இருப்பிடச் சிக்கல்: நடவடிக்கைக்கான வழிகள்' என்னும் அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

உலகளவில் சுமார் 3.4 பில்லியன் மக்கள் பாதுகாப்பற்ற, போதுமான வசதிகளற்ற வாழிடங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இதில் 1.1 பில்லியன் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற முறைசாரா வாழிடங்களிலும், சுகாதாரமற்ற சேரிப் பகுதிகளிலுமே தங்களின் வாழ்நாளைக் கழித்து வருகின்றனர்.

அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் கிராமப்புறங்களில் தங்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழப்பதும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசுகள் தவறுவதும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

தனியார் துறையின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் கிராமப்புறப் பொருளாதாரம் நசுக்கப்பட்டு, மக்கள் பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். இவ்வாறு நகரங்களுக்கு வரும் உதிரித் தொழிலாளர்கள், அங்கே கட்டுப்படியாகாத வீட்டு வாடகையினாலும் நிலத்தின் அதிகபட்ச விலையினாலும், இறுதியில் முறைசாராச் சேரிகளிலோ அல்லது பாதுகாப்பற்ற தற்காலிகக் குடியிருப்புகளிலோ தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2007ஆம் ஆண்டிலேயே உலகளவில் சுமார் 50 விழுக்காட்டு மக்கள் விவசாய நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வரும் 2050ஆம் ஆண்டளவில் உலகச் சனத்தொகை 9.7 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதில் 68 விழுக்காட்டு மக்கள் நகர்ப்புறவாசிகளாகவே மாறிவிடுவார்கள் என புள்ளிவிவரங்கள் கணித்துள்ளன.

இவ்வாறு நகரங்களில் வாழக்கூடும் 6.6 பில்லியன் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முறையான வீட்டு வசதிகளற்றவர்களாகவும், சேரிப் பகுதிகளில் வாழ்பவர்களாகவுமே இருப்பர் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், எதியோப்பியா, தான்சானியா, இந்தியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளில் சேரிகளின் வளர்ச்சி மிக அபாயகரமான வேகத்தில் அதிகரித்து வருகிறது.

போர்கள், ஆயுத மோதல்கள், அரச இயந்திரங்களின் செயலிழப்பு, மக்கள் தங்களின் பூர்வீக வாழிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் பேரழிவுகள் போன்றவை இந்த அவல நிலையை மேலும் துரிதப்படுத்துகின்றன.

தங்கள் சொந்த வாழிடங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் மக்களின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது.

கடந்த 2001ஆம் ஆண்டில் 21 மில்லியனாக இருந்த அகதிகளாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் ஐந்து மடங்காக உயர்ந்து 120 மில்லியனாக மாறியுள்ளது.

எதிர்காலத்தில் தொடரும் போர்களினாலும் தீவிரமடையும் காலநிலை மாற்றத்தினாலும் மேலும் பல மில்லியன் மக்கள் தங்களின் இருப்பிடங்களை இழக்க நேரிடும். 2050ஆம் ஆண்டிற்குள் சுமார் 300 முதல் 400 மில்லியன் மக்கள் காலநிலை மற்றும் மோதல்கள் காரணமாகத் தங்களின் வீடுகளை இழப்பர் என்று .நா அறிக்கை எச்சரிக்கிறது.

மேலும், காலநிலை மாற்றத்தின் நேரடித் தாக்கத்தால் 2040ஆம் ஆண்டிற்குள் தற்போது உலகளவில் உள்ள வீடுகளில் சுமார் 167 மில்லியன் வீடுகள் முற்றிலும் அழிந்துபோகும் வாய்ப்புள்ளது.

அண்மைக் காலத்தில் ஐரோப்பாவில் வீசிய தீவிர வெப்ப அலை மற்றும் அதனால் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாகப் பல ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பலான நிகழ்வுகள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும்.

நிலம் என்பது சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு, அதன் மதிப்பு விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள இன்றைய சூழலில், உழைக்கும் சாதாரண மக்கள் தங்களின் சொந்த நிலங்களை இழந்து நடுத்தெருவிற்குத் தள்ளப்படுகின்றனர்.

அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கில் நிதியை வழங்கி, தேர்தலில் அவர்களை வெற்றிபெறச் செய்யும் இந்தப் பெருநிறுவனங்கள், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நன்றிக்கடனாக மக்களிடமிருந்து குறைந்த விலையில் நிலங்களைப் பிடுங்கிக் கொள்கின்றன.

இலாபம் ஈட்டித் தரக்கூடிய முக்கியப் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களை, முறையான ஆவணங்கள் இல்லை என்ற சாக்கில் அரசுகளின் உதவியோடு பலவந்தமாக வெளியேற்றி, அந்த நிலங்களை எஜமானர்களான பெருநிறுவனங்களுக்கு அரசுகள் தாரைவார்க்கின்றன.

இவை உலகின் பிரதான நகரங்களில் உள்ள நிலங்களையும் கட்டிடங்களையும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக்குவித்து, செயற்கையான விலை உயர்வை உருவாக்குகின்றன.

இத்தகைய உலகளாவிய இருப்பிட நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டி பல மாதங்கள் கடந்த போதிலும், உலக நாடுகளின் அரசாங்கங்கள் இது குறித்து எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றன. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மட்டுமே இப் பிரச்சினை குறித்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இயற்கை மனித குலம் முழுமைக்கும் இலவசமாக வழங்கிய கொடைகளுள் ஒன்றான நிலம், இன்றைக்குச் சில தனிநபர்களினதும் பெருநிறுவனங்களினதும் பிரத்தியேகச் சொத்தாக மாறியுள்ளது பெரு கொடுமையாகும். கட்டுமானப் பொருட்களின் விலையை வைத்து வீட்டின் விலையைத் தீர்மானிக்க முடியும். ஆனால் நிலத்தின் விலையை அதன் அமைவிடமும், அதை வைத்திருக்கும் நிறுவனங்களின் பேராசையுமே தீர்மானிக்கின்றன.

இத்தகைய அபரிமிதமான விலை உயர்வைக்கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டிய அரசாங்கங்கள், பெரு வணிக நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ள வரை இந்த அவலப் போக்கில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை.