இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றில் நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப் போட்டி என்பது புதிதொன்றல்ல.
ஆனால், 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு தொடர்பான சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பின் போது, நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட சில கருத்துக்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி குறித்த பாரிய கேள்விகளையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன.
உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை முறையே 67 மற்றும் 65 ஆக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்திப் பேசிய ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணைகளைச் சுட்டிக்காட்டி, 'எனது பாதுகாப்பிற்குப் பொறுப்பான புலனாய்வுப் பிரிவினரை நோக்கியே இந்த விசாரணைகள் செல்கின்றன் இதன் மூலம் எனக்கு உயிர் ஆபத்து இருக்கிறது என்பதை அறிவேன். ஆனால் ஆபத்தை எதிர்கொள்ளாமல் ஒரு மாற்றத்தைச் செய்ய முடியாது' என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உச்சகட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும், முப்படைகளின் தளபதியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே தனது சொந்தப் புலனாய்வுப் பிரிவினரால் உயிர் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால், இந்த நாட்டின் சாமானிய குடிமகனின் பாதுகாப்பு யாருடைய கையில் உள்ளது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய ஒரு நாட்டின் தலைவரே 'எனக்கு உயிர் ஆபத்து இருக்கிறது' என்று ஒப்புமூல வாக்குமூலம் அளிப்பது, அரச கட்டமைப்பு எத்தகைய ஒரு செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் துரிதப்படுத்துவதும், அதிலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையே. ஆனால், அந்த விசாரணையைக் காரணம் காட்டி, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற அச்சமூட்டும் காரணியை முன்வைத்து, நீதித்துறையின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்தத்தை நியாயப்படுத்த முற்படுவது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தர்க்கமாகும்.
ஒரு நாட்டின் புலனாய்வுத் துறையைச் சீரமைப்பதற்கும், அரச பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் தாராளமாக உள்ளன. ஆனால், அந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி, நீதித்துறை உயர் நியமனங்கள் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவதில் உள்ள தாமதங்களுக்குச் சாட்டோலை வீசுவது, தனது நிர்வாகத் தோல்வியை மூடிமறைக்கும் நுட்பமான அரசியல் நகர்வாகவே பார்க்க முடிகிறது.
நீதித்துறைச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் முன்வைத்துள்ள 22ஆவது திருத்தம், தனிநபர் சலுகைகளுக்கானது அல்ல என்றும், நீதிமன்ற அமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு மாற்றமே என்றும் ஜனாதிபதி வதிவாகக் கூறுகிறார். ஆனால், இந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட விதம் மற்றும் அதற்கான கால நேரம் ஆகியவை சட்டத் துறையினர் மத்தியிலும் சிவில் சமூகத்தினர் மத்தியிலும் பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
11ஆக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 17 ஆகவும், 12 ஆக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 20 ஆகவும் உயர்த்துவது மற்றும் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது போன்றவை, தற்போதைய நீதித்துறை மேலடுக்கில் உள்ள குறிப்பிட்ட சில நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 'தகாத சலுகை'' என்ற விமர்சனத்தை ஜனாதிபதி நிராகரிக்கிறார்.
எனினும், உணர்வுபூர்வமான அரசியல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் சூழலில், பதவியிலிருக்கும் நீதிபதிகளின் வயதெல்லையை அவசர அவசரமாக உயர்த்த முற்படுவது, 'நீதி வழங்கப்படுவது மட்டுமன்றி, அது வழங்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும்' என்ற சர்வதேச நீதிமன்ற நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு நாட்டின் உச்ச மதபீடங்களான முப்பீட மகாநாயக்க தேரர்களும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. மகாநாயக்க தேரர்கள் கூட்டாக அனுப்பிய கடிதத்தைக்கூட அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் அதைப் பற்றிப் பேசாது மறைப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதியின் உரையில் தெளிவான பதில்கள் இல்லை. மாறாக, தனக்கு எதிராகச் செயல்படும் அமைப்புகளும், சமூக ஊடகங்களும் 'போராட்டம்' என்ற பெயரில் வாதத்திற்கு அப்பால் சென்று அச்சமூட்டல்களை உருவாக்குவதாக ஜனாதிபதி குற்றம்சாட்டுகிறார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது மக்கள் கருத்துக்களுக்கும், ஜனநாயகக் கலந்துரையாடல்களுக்கும் முதன்மையளிப்பதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி, ஆட்சியில் அமர்ந்தவுடன் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற முதன்மை பங்குதாரர்களுடன் வர்த்தமானி வெளியீட்டிற்கு முன்னர் எவ்விதக் கலந்தாலோசனையையும் நடத்தாமல், தன்னிச்சையாகச் செயல்படுவது அவர்களின் முந்தைய நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகும்.
ஜனாதிபதி தனது உரையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துதல், பொலிஸ் சேவைக்கு 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தை வலுப்படுத்துதல் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் எனப் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவை அனைத்துமே தகுதியான நிர்வாக நடவடிக்கைகளே என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், கீழ் நீதிமன்றங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளின் தேக்க நிலையைத் தீர்ப்பதற்கும், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையைச் சீரமைப்பதற்கும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி உயர்மட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. சாதாரண நிர்வாக நடைமுறைகள் மூலம் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களை, அரசியலமைப்புத் திருத்தம் என்ற பிரம்மாண்டமான போர்வையால் மூடிமறைக்க அரசாங்கம் முயல்கிறது.
மாற்றங்களைச் செய்வதற்காக உயிர் ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்; இதனால் எனது பதவி பறிபோகுமாயின் ஒதுங்கிச் செல்லவும் தயார் என்ற ஜனாதிபதியின் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள், அவரது தனிப்பட்ட அரசியல் உறுதியைக் காட்டக்கூடும். ஆனால், ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் தனிப்பட்ட தியாக உரைகள் மூலமாக மட்டுமே ஆட்சியை நடத்த முடியாது. சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே ஒரு அரச தலைவரின் பிரதான கடமையாகும்.
தனது சொந்தப் பாதுகாப்புப் படையினரே தனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று ஜனாதிபதி பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் ஒரு நாட்டில், நீதித்துறையின் சுயாதீனம் நிறைவேற்று அதிகாரத்தின் நிழலில் சிக்கித் தவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பாராளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை மட்டும் நம்பி, நீதித்துறையின் சுயாதீனத்தைச் கேள்விக்குள்ளாக்கும் 22ஆவது திருத்தத்தைத் திணிக்க முற்படாமல், நாட்டின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உண்மையான ஜனநாயக வழியில் உறுதிப்படுத்த முன்வர வேண்டும். இல்லையெனில், 'நிறைவேற்று அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்குள் இயங்கும் நாடு' என்ற கறை நாட்டின் மீது என்றும் அழியாத வடுவாக மாறிவிடும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!