வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர்க்காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காகக் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை விடுவிப்பதை விரைவுபடுத்துவது தொடர்பாக, கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு முக்கிய விடயங்களை வலியுறுத்தியிருந்தார். முதலாவதாக, தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரின் பணியாகும் என்றார்.

இரண்டாவதாக, எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியும், எவற்றை விடுவிக்க முடியாது என்பது குறித்து உடனடியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும்; மூன்றாவதாக, அவசியமான காணிகளின் அளவைத் தீர்மானிக்கும் போது மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; நான்காவதாக, விடுவிக்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அம்மாக்களுக்கு வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், 'மக்களின் காணிகள் மக்களுக்கே' என்ற உறுதியான வாக்குறுதியை வழங்கியிருந்தது. தற்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது. ஆனால், நடைமுறையில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகள் இவ்வாக்குறுதிக்கு முற்றிலும் மாறானதாகவே அமைகின்றன.

தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை என்ற ஆறு தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளின் கூட்டு, இந்த மாத தொடக்கத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த போது, மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பலாலியில் உயர்பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள காணிகள் விடுவிக்கப்படாது எனவும், அவற்றைச் சட்டரீதியாகச் சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்தார். ஜனாதிபதி கூறியதற்கு மாறாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட இக்கருத்து, காணி விடுவிப்பு விடயத்தில் அரசாங்கம் எத்தகைய தெளிவற்ற மற்றும் நழுவல் போக்கைக் கொண்டுள்ளது என்பதைத் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியது.

பாராளுமன்றக் கூட்டத்தில் அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புமாறும் ஜனாதிபதி கூறியது ஒருபக்கத்தில் சாதகமாகத் தோன்றினாலும், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி காணிகள் விடுவிப்பை மறுக்கின்ற உரிமையைப் பாதுகாப்புத் தரப்பினரிடமே அவர் ஒப்படைத்துள்ளது பாரதூரமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

முகாம்களை அமைக்கும் போது அது பொதுமக்களின் காணி அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதனைச் செய்யுமாறு ஜனாதிபதி அநுர படைத்தரப்பிற்கு அறிவுறுத்தவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இனிமேல் மற்றொரு உள்நாட்டுப் போரோ அல்லது வெளிநாட்டுப் படையெடுப்போ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதைப் படைத்தரப்பும் அரசியல்வாதிகளும் ஒப்புக் கொள்கின்றனர். தெற்கில் ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ஜே.வி.பி கூட இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளதால் அங்கிருந்தும் கிளர்ச்சி உருவாக வாய்ப்பில்லை. இத்தகைய சூழலில், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது என்ற பெயரில் பொதுமக்களின் நிலங்களைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருப்பதை நியாயப்படுத்துவது முற்றிலும் அபத்தமானது.

தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் இருப்பையும், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் பலிகடா ஆக்குவதாக இருக்கக் கூடாது. கடந்த காலத்தில் மக்களின் நலன்களைப் புறக்கணித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்திய அதே தேசிய பாதுகாப்புக் கொள்கையையே தற்போதைய அரசாங்கமும் தொடர்கிறது.

ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள், இன்று பலாலி, மயிலிட்டி, தையிட்டி, கேப்பாபிலவு எனப் பல இடங்களில் வாரக்கணக்கில் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் அனுரகுமார திசாநாயக்கவிடம் படைகளை இடம்மாற்றி நிலைப்படுத்துவதற்கும் காணிகளை விடுவிப்பதற்கும் முழுமையான அரசியல் அதிகாரம் உள்ளது.

ஆனால், அவர் 'மக்களின் காணிகள் மக்களுக்கே' என அரச படைகளுக்கு நேரடியாக உத்தரவிடத் தயங்குகிறார். அரசியல்வாதிகளுடனும் மக்களுடனும் பேசும் போது ஒரு கதையைக் கூறும் ஜனாதிபதி, படைத்தரப்பிடம் பேசும் போது அவர்கள் நிலைப்பாட்டிலிருந்தே சிந்திக்கிறார்.

இப்பின்னணியில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சாணக்கியன் இராசமாணிக்கம், பாலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். பலாலியில் மக்கள் தமது பூர்வீகக் காணிகளை மீட்கக் கோரி தொடர்ந்து 10 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கடுமையான விரக்தியும் பொறுமையின்மையும் அடைந்து வருவதாக சாணக்கியன் எச்சரித்துள்ளார். யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தற்போதைய சூழலில் தொடர்ந்து அதே நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமானால், அதேகொள்கை இன்னமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொதுமக்களின் காணிகளுக்கும் பொருந்த வேண்டும். போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், 'தேசிய பாதுகாப்பு' என்ற பொதுவான காரணத்தைச் சுட்டிக்காட்டி மக்களின் காணிகளைத் தொடர்ந்து வைத்திருக்க முடியாது.

இது வெறும் அரச ஆவணங்களில் உள்ள எண்களோ அல்லது நிலத்தின் அளவோ சார்ந்த பிரச்சினை அல்ல் மாறாக, மக்களின் வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த சமூகங்களின் வாழ்வியல் பிரச்சினை.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கில் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் காணிகளையும் அடையாளம் கண்டு, அவற்றை விடுவிப்பதற்கான தெளிவான மற்றும் காலவரையறை கொண்ட வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது சரத் பொன்சேகா மற்றும் கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளால் உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்க மறுத்து நெருக்கடிகள் உருவாக்கப்பட்டன.

அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசியல் அதிகாரம் போதவில்லை என்று கூறப்பட்டாலும், இன்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் காணிகளை விடுவிக்கும் துணிச்சல் இல்லை என்பதை அவருடைய தற்போதைய செயல்கள் உணர்த்துகின்றன.

17 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களை மீட்பதற்காகவே போரை நடத்தியதாகக் கூறிய அரசுகளின் வரிசையில், இன்றைய ஆட்சியாளர்களும் படைத்தரப்பின் ஆதிக்கத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் துணைபோகின்றனர். ஆட்சியாளர்கள் மாறினாலும் வடகிழக்கு மக்களின் நில உரிமை மற்றும் சுயமரியாதை மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரப்போவதில்லை என்பதையே 'நழுவும் அநுரவின்' தற்போதைய நகர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.