இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கொழும்புக்கு மேற்கொண்ட அரைநாள் விஜயம், இலங்கை மற்றும் இந்தியாவின் இருதரப்பு உறவுகளில் மட்டுமல்லாது, இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான அவரது உயர்மட்டச் சந்திப்பில் பல்வேறு பொருளாதார, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்ட போதிலும், மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவாக நடத்துவது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையின் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகியவை பிரதான பேசுபொருளாக உருவெடுத்துள்ளன.

இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இந்த விஜயமும் அதன் பின்னரான கூற்றுக்களும் பார்க்கப்படுகின்றன.

இந்த விஜயத்திற்குப் பிறகு புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின் எட்டாவது குறிப்பில், 'மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான உறுதிமொழியைச் செயற்படுத்துமாறும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கையின் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயற்படுத்துமாறும் இலங்கைத் தலைமையை வெளியுறவுச் செயலாளர் கேட்டுக்கொண்டார்' என்று மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், இச்சந்திப்புத் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், மாகாண சபை தேர்தல்கள் பற்றியோ அல்லது தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகச் செயற்படுத்துவது பற்றியோ இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஏதேனும் குறிப்பிட்டதாகவோ அல்லது பேசப்பட்டதாகவோ எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

இரு நாடுகளின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளுக்கு இடையில் காணப்படும் இந்தத் தெளிவான முரண்பாடு, குறித்த விடயத்தை இரு அரசாங்கங்களும் எவ்வாறான கோணத்தில் அணுகுகின்றன என்பதைப் பிரதிபலிக்கிறது.

இராஜதந்திர வழமைகளின்படி, இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசும்போது, விவாதிக்கப்பட்ட முக்கிய விடயங்களில் இரு தரப்பிற்கும் முழுமையான இணக்கப்பாடு காணப்படும் பட்சத்தில், அவர்கள் ஒரு கூட்டு ஊடகச் சந்திப்பை நடத்துவார்கள் அல்லது ஒரு கூட்டு ஊடக அறிக்கையை வெளியிடுவார்கள்.

அவ்வாறு வெளியிடப்படும் கூட்டறிக்கையானது இரு நாடுகளும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி ஒப்புக்கொண்ட இணக்கப்பாடுகளை வெளிப்படையாக உலகிற்கு அறிவிப்பதாக அமையும். ஆனால், விக்ரம் மிஸ்ரியின் இந்த விஜயத்தின் முடிவில் அவ்வாறான எந்தவொரு கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை.

பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் அல்லது கருத்துக்கள் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு இல்லாத சூழலிலோ, அல்லது ஒரு தரப்பின் கருத்துக்களை மற்றைய தரப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ள மனமில்லாத நிலையிலோ கூட்டறிக்கைகள் வெளியிடப்படாமல் நாகரீகமாகத் தவிர்க்கப்படுவது சர்வதேச இராஜதந்திரத்தில் வழக்கமான ஒன்றாகும்.

இங்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு மாகாண சபைத் தேர்தல் பற்றிய விவாதத்தைக் முழுமையாகத் தவிர்த்துள்ளமையானது, இந்தியத் தரப்பின் கோரிக்கையை இலங்கை அரசு ஒரு சாதகமான அல்லது தமக்கு விருப்பமான விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு தற்போது சுமார் 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1987ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் நேரடி விளைவாகவே இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாகவே இந்தத் திருத்தச் சட்டத்தை இந்தியா எப்போதும் கருதி வந்தது.

இருப்பினும், ஆரம்பத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய உரிமைகள், காலப்போக்கில் கொழும்பில் ஆட்சிக்கு வந்த பல்வேறு தென்னிலங்கை மத்திய அரசாங்கங்களினால் சிறுகச் சிறுகப் பறிக்கப்பட்டு, இறுதியாக எவ்வித உண்மையான அதிகாரமுமற்ற ஒரு 'ஓட்டைப் பாத்திரமாகவே' மாகாண சபை முறைமை மாற்றப்பட்டது.

இலங்கையிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், முடங்கிக்கிடக்கும் மாகாண சபை முறைமைக்கு உயிர் கொடுக்கும் வகையில் உடனடியாகத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியாவிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவும் தமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம்கொழும்பிலும் புதுடெல்லியிலும் இடம்பெறும் இருதரப்புப் பேச்சுகளில் மட்டுமல்லாது, ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போதும்கூடதமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்துப் பேசி வந்துள்ளது.

ஆனால், கொழும்பில் இதுவரை ஆட்சி அமைத்த எந்தவொரு அரசாங்கமும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறையோ அல்லது அரசியல் அர்ப்பணிப்போ காட்டவில்லை. இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் விவகாரம் பல ஆண்டுகளாக முடிவின்றி இழுபறி நிலையில் நீடித்து வருகிறது.

சமீபகாலமாக, மாகாண சபைத் தேர்தல் குறித்தோ அல்லது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்தோ இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்கும் இராஜதந்திர அழுத்தங்கள் சற்றுத் தளர்ந்திருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டு அனுரகுமார திசாநாயக்க புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்த வேளையில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இந்த விடயம் முக்கியத்துவம் பெறவில்லை.

இது தமிழ் மக்களின் விவகாரத்தில் இந்தியாவின் அழுத்தமான நிலைப்பாடு குறைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தையும் விமர்சனங்களையும் உருவாக்கியது. ஆனால், கடந்த டிசம்பரில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புப் பயணத்தின் போதும், அதனைத் தொடர்ந்து தற்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் பயணத்தின் போதும், மாகாண சபைகளுக்கு உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயற்படுத்துமாறு இந்தியா கோருவதன் பின்னணியில், 13ஆவது திருத்தச் சட்டத்தில் தங்கி நிற்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழுமையாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற மறைமுக நிபந்தனை அடங்கியுள்ளது.

ஆனால், தென்னிலங்கை அரசியலில் பேரினவாத அழுத்தங்கள் நிறைந்துள்ள சூழலில், எந்தவொரு ஆட்சியாளரும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கு வழங்க எளிதில் உடன்பட மாட்டார்கள். எனவே, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு இது ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.

இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிகள், புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இந்தியா வழங்கிய கோடிக்கணக்கிலான டொலர் உதவித் திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் இலங்கை மீதான தனது இராஜதந்திரப் பிடியை இந்தியா பலப்படுத்தியுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் பிடியிலிருந்து ஓரளவு தப்பித்துச் சுயாதீனமாகச் செயல்பட முற்பட்டபோதிலும், பிராந்திய வல்லரசான இந்தியாவின் கோரிக்கைகளை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க முடியாது. தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பின் போது, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளியுறவுச் செயலாளர் உறுதியளித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

சுருக்கமாகக் கூறின், மாகாண சபைகளுக்கான தேர்தலை காலவரையறையின்றி தள்ளிப்போட நினைக்கும் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு இந்தியாவின் இந்தத் தீவிர நிலைப்பாடு ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. புதுடெல்லியின் அழுத்தங்களுக்கும், நாட்டின் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கும் இடையே சமநிலையைப் பேண அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதையும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எத்தகைய இராஜதந்திர முடிவுகளை எடுக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.