இலங்கையின் பௌத்த மற்றும் வரலாற்றுத் தலைநகரமாகக் கருதப்படும் புனித அநுராதபுரத்தில், அண்மையில் பௌத்த பிக்குகள் குழுவினருக்கிடையே இடம்பெற்ற பகிரங்க மோதல் சம்பவம் ஆழமான தார்மீகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமைதி, அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் புலனடக்கம் ஆகியவற்றை உலகிற்குப் போதித்த கௌதம புத்தரின் புனித போதனைகளைச் சுமந்து செல்ல வேண்டிய மகாசங்கத்தினர், வீதிகளிலும் புனிதத் தலங்களின் அருகிலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி, ஒட்டுமொத்த பௌத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது.
வெறும் தனிநபர் முரண்பாடாகவோ அல்லது நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடாகவோ தொடங்கிய விடயங்கள், வன்முறையாக உருவெடுத்தமை இலங்கை பௌத்த வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், சமகாலத்தில் சில தேரர்களின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள ஒழுக்கச் சிதைவையும், ஆன்மீகப் பாதையிலிருந்து அவர்கள் விலகிச் செல்லும் அபாயத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அநுராதபுரத்தில் அரங்கேறிய இந்த துரதிர்ஷ்டவசமான மோதலின் பின்னணியை ஆராயும்போது, அங்கு ஆன்மீக விழுமியங்களை விட அதிகாரப் போட்டியும், குழுவாதமும், தீவிர அரசியல் சார்புநிலைகளுமே மேலோங்கியிருந்ததை அவதானிக்க முடிகிறது.
புனித பூமியான அநுராதபுரம் என்பது உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் தமது மன அமைதிக்காகவும், ஆன்மீகத் தேடலுக்காகவும் ஒன்றுகூடும் புண்ணிய தளமாகும். அத்தகைய புனித இடத்தில், காவி உடை தரித்த துறவிகள் கோபாவேசத்துடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டதும், அதனைத் தொடர்ந்து கைகலப்பில் இறங்கியதும் சாதாரண பௌத்த மக்களின் மனங்களில் பெரும் வேதனையையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண குடிமக்களுக்கு ஒழுக்கத்தையும், பொறுமையையும் போதிக்க வேண்டிய துறவிகளே தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வன்முறையைக் கையிலெடுத்தமை, பௌத்த சாசனத்தின் எதிர்காலம் குறித்த பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
பௌத்த தர்மத்தின் அடிப்படைப் பண்புகளை நோக்கும்போது, அது 'மத்தியம பிரதிபதா' எனப்படும் நடுநிலைப் பாதையையும், 'மெத்தா' (அன்பு), 'கருணா' (இரக்கம்), 'முதிதா' (மகிழ்ச்சி), 'உபேக்கா' (சமநிலை) ஆகிய நான்கு விவகாரங்களையும் அடிப்படையாகக் கொண்டது.
பற்றுக்களைத் துறந்து, கோபம், குரோதம், ஆணவம் ஆகியவற்றை வென்றெடுப்பதே ஒரு பிக்குவின் முதன்மையான இலக்காகும். புத்த பெருமான் தமது சீடர்களுக்கு அருளிய 'விநய பிடகம்' எனப்படும் துறவற ஒழுக்க விதிகளில், ஒரு பிக்கு எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முரண்பாடுகளை எவ்வாறு அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வன்முறை என்பது பௌத்த தர்மத்திற்கு முற்றிலும் முரணானது; 'பகைமையால் பகைமை ஒருபோதும் தணியாது, அன்பினாலேயே பகைமை தணியும்' என்பதே தம்மபதத்தின் சாராம்சமாகும். ஆனால், அநுராதபுர சம்பவமானது இந்த அடிப்படைப் போதனைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, லௌகீக உலகின் அதிகாரப் போட்டிகளுக்குத் தேரர்கள் இரையாகிவிட்டதை அம்பலப்படுத்தியுள்ளது.
இத்தகைய ஒழுக்கச் சிதைவுகளுக்கும், பிக்குகளிடையே ஏற்படும் குழு மோதல்களுக்கும் பிரதான காரணமாக அமைவது, கடந்த சில தசாப்தங்களாகப் பௌத்த பிக்குகள் தீவிர அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டமையே ஆகும். ஆரம்ப காலங்களில் மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கும் 'ராஜகுருக்களாகவும்', நாட்டின் தார்மீக வழிகாட்டிகளாகவும் இருந்த மகாசங்கத்தினர், நவீன காலத்தில் கட்சி அரசியலின் பங்காளிகளாகவும், தேர்தல் மேடைகளின் பேச்சாளர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாறியமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் அதிகாரம், பதவி ஆசை மற்றும் அரசியல்வாதிகளுடனான நெருக்கம் ஆகியவை துறவறத்தின் புனிதத்தன்மையைக் களங்கப்படுத்தியுள்ளன. வௌ;வேறு அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் பிக்குகள், தமது அரசியல் எஜமானர்களுக்காக வீதிகளில் இறங்கிப் போராடுவதும், சக பிக்குகளுடன் மோதுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த அரசியல்மயமாக்கலே அநுராதபுர மோதல் போன்ற கசப்பான சம்பவங்களுக்கு அடித்தளமிட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில்தான், இலங்கையின் பௌத்த சாசனத்தின் உயரிய பீடங்களான மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய நான்கு மகாநாயக்க தேரர்களின் (பீடாதிபதிகள்) நிலைப்பாடும், வழிகாட்டலும் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
அநுராதபுர சம்பவம் உள்ளிட்ட பிக்குகளின் ஒழுக்கமீறல்கள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள நான்கு பீடாதிபதிகளும், பிக்குகள் தீவிர அரசியலில் இருந்து முற்றாக விலகியிருக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
பௌத்த தர்மத்தைக் காப்பதும், மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டலை வழங்குவதுமே ஒரு பிக்குவின் தலையாய கடமையே தவிர, கட்சி அரசியலில் ஈடுபடுவதோ, தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்பதோ, அரசியல் பதவிகளை வகிப்பதோ துறவற ஒழுக்கத்திற்குப் புறம்பானது என்பதை மகாநாயக்க தேரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள், பிக்குகள் அரசியல் மேடைகளில் ஏறுவதையும், வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுவதையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் பௌத்த சாசனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கையின் பௌத்த பாரம்பரியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமரபுர மற்றும் ராமஞ்ஞ பீடாதிபதிகளும் இதே கருத்தை வலியுறுத்தி, விநய விதிகளை மீறும் பிக்குகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். நான்கு பீடாதிபதிகளின் இந்த ஒருமித்த குரலானது, திசைமாறிச் செல்லும் பிக்குகளை மீண்டும் தர்மத்தின் பாதைக்கு அழைத்து வரும் உன்னத முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கை போன்ற பல்லின, பல்மத சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில், பெரும்பான்மை மதமான பௌத்தத்தின் மகாசங்கத்தினர் முன்மாதிரியாகத் திகழ்வது மிக அவசியமாகும். தேரர்கள் அரசியலில் இருந்து விலகி, தமது ஆன்மீகக் கடமைகளில் கவனம் செலுத்தும்போது மட்டுமே சமூகத்தில் உண்மையான அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும்.
அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பிக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; அதேபோல், பிக்குகளும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக மாறாமல் தமது சுயமரியாதையையும், துறவறத்தின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும்.
அந்தவகையில், அநுராதபுரத்தில் இடம்பெற்ற பிக்குகளின் மோதல் என்பது ஒட்டுமொத்த பௌத்த சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகும். காவி உடை என்பது வெறும் ஆடையல்ல, அது தியாகம், ஒழுக்கம், அமைதி மற்றும் ஞானத்தின் அடையாளமாகும்.
அந்தப் புனித அடையாளத்திற்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பிக்குவிற்கும் உண்டு. மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய நான்கு பீடாதிபதிகளின் வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேரர்கள் தீவிர அரசியலிலிருந்தும், குழுவாத மோதல்களிலிருந்தும் முற்றாக விலகி, பௌத்தத்தின் அடிப்படைப் பண்புகளான அன்பையும், கருணையையும், சகிப்புத்தன்மையையும் சமூகத்தில் விதைக்க முன்வர வேண்டும். அதுவே புத்த பெருமானுக்குச் செய்யும் உண்மையான காணிக்கையாகவும், நாட்டின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கான திறவுகோலாகவும் அமையும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!