சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய நீடிக்கப்பட்ட நிதி வசதி நிறைவுக்கு வரும் தருவாயிலும், தொடர்ச்சியான இயற்கை மற்றும் புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இம்முறை வரவு-செலவுத் திட்டமானது பொருளாதாரத்தை வெறும் ஸ்திரப்படுத்தும் கட்டத்திலிருந்து கட்டமைப்பு மாற்றத்தை நோக்கி நகர்த்துவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய இலக்கங்கள், வருமான-செலவீனக் கணக்கீடுகள், பேரண்டப் பொருளாதாரச் சவால்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை மையமாகக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் பிரகாரம், அரசாங்கம் 6,180 பில்லியன் ரூபா (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.8சதவீதம்) வருமானமாக ஈட்டப்படும் என எதிர்பார்க்கிறது. அதேவேளை, மொத்தச் செலவீனமானது  7,673 பில்லியன் ரூபாவாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.7சதவீதம்) மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஆரம்ப துண்டுவிழும் தொகை 3.8சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், அண்மையில் நாட்டை உலுக்கிய 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளை மீளக் கட்டுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 260 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டையும் சேர்த்துப் பார்க்கும்போது, துண்டுவிழும் தொகை 4.5சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான மற்றும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அரசாங்கம் திரட்டும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் சுமார் 43 ரூபா (2,643 பில்லியன் ரூபா) நாட்டின் கடனுக்கான வட்டியைச் செலுத்துதலுக்கே செல்கிறது.

இது மொத்த செலவீனத்தில் 34.4சதவீதமாகும். கடந்த காலங்களில் குவிந்த பாரிய கடன் சுமையின் கோரப்பிடியில் இருந்து நாடு இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதை இந்த வட்டிச் சுமை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

வருமானத்தில் பெரும்பகுதி வட்டிக்கும் கடனுக்கும் தீனிபோடுவதால், சமூக நலனுக்கும் மூலதன முதலீடுகளுக்கும் ஒதுக்கப்படும் நிதி தவிர்க்க முடியாமல் சுருங்குகின்றது. 

2027வரவு-செலவுத் திட்டம் ஒரு வெற்றிடத்திலேயோ அல்லது எவ்வித இடையூறுகளுமற்ற சூழலிலேயோ தயாரிக்கப்படவில்லை. மாறாக, பல எதிர்பாராத புற அதிர்ச்சிகளை அது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக, 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ  1.022 டிரில்லியன் ரூபா) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் நிலவிய போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் 147 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவிட நேரிட்டது.

மேலும், வரவிருக்கும் காலங்களில் எல் நினோ தாக்கத்தால் விவசாயம் மற்றும் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற அபாயமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய இயற்கைப் பேரிடர்களும் பிராந்திய மோதல்களும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு விடப்படும் தொடர்ச்சியான எச்சரிக்கைகளாகும்.

திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதமான 7சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை அடைவதற்கு, இத்தகைய எதிர்பாராத துயரங்களைத் தாங்கும் வலிமைமிக்க 'பேரண்டப் பொருளாதார நெகிழ்ச்சித் தன்மை' நாட்டின் கட்டமைப்பில் உருவாக்கப்பட வேண்டும்.

சவால்களுக்கு மத்தியில், அரசாங்கம் மூலதனச் செலவீனங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'தித்வா' மீள்கட்டமைப்பு மதிப்பீடுகளுடன் சேர்த்து 2,000 பில்லியன் ரூபா (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.12சதவீதம்) பொது முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை பொருளாதார இயக்கத்திற்கு உந்துசக்தியாக அமையும்.

குறிப்பாக, நெடுஞ்சாலைகள், இரயில்வே துறைகள் (251 பில்லியன் ரூபா), கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்கள், மற்றும் களனிப் பள்ளத்தாக்கு மற்றும் கடலோர ரயில் பாதை மின்மயமாக்கல் போன்ற திட்டங்களுக்குப் பெருமளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்புத் துறையில் 'அஸ்வெசும' உள்ளிட்ட திட்டங்களுக்கு  230பில்லியன் ரூபாவும், சுகாதாரத் துறையின் மூலதனச் செலவீனத்திற்காக 131பில்லியன் ரூபாவும், ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

அதேபோல், கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறையில் டிஜிட்டல்மயமாக்கல் ( 35 பில்லியன் ரூபா), ஆசிரியர் கல்லூரிகள் அபிவிருத்தி, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விப் படிகளுயர்வு மற்றும் வருகை தரு விரிவுரையாளர்களின் கட்டணங்களை மூன்று மடங்காக உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் மனித வள மேம்பாட்டிற்கு வித்திடுகின்றன. 

இந்த வரவு-செலவுத் திட்டம் பல புத்தாக்கமான இலக்குகளைக் கொண்டிருந்தாலும், சமூக மட்டத்தில் சில விமர்சனங்களையும் நியாயமான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது:

வரிகள் மற்றும் நுகர்வோர் சுமை: அரசாங்கம் தனது வருமானத்தில் 58.1மூ-ஐ (ரூ. 3,592 பில்லியன்) பொருட்கள் மற்றும் சேகரிப்பு வரிகள் மூலமே பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

நேரடி வரிகளை விடவும் மறைமுக வரிகளின் தாக்கம் நுகர்வோர் மீது, குறிப்பாக நடுத்தர மற்றும் விளிம்புநிலைக் குடிமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. விலையேற்றத்தால் ஏற்கனவே திணறிவரும் மக்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

மூலோபாய முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அந்நியச் செலாவணியை ஈர்க்கவும் அவசியமான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான துணிச்சலான அல்லது கவர்ச்சிகரமான கொள்கை மாற்றங்கள் போதுமான அளவில் முன்னெடுக்கப்படவில்லை

மார்ச் 2027 உடன் தற்போதைய சர்வதேச நாணய நிதிய திட்டம் நிறைவடையவுள்ளது. இதற்குப் பின்னர் நாடு எத்தகைய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்பது குறித்த தெளிவான கட்டமைப்பு விவாதங்கள் அவசியமானதாகும்.

அவ்வாறான நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் வெறும் எண்களின் தொகுப்பு மட்டுமல்ல் அது இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை என்ற குறுகிய வட்டத்திலிருந்து உற்பத்திசார், ஏற்றுமதிசார் மற்றும் நிலைபேறான வளர்ச்சி என்ற பரந்த பரிமாணத்திற்கு நகர்வதற்கான கடினமான முயற்சியாகும்.

இயற்கை இடர்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், ஊழலற்ற நிர்வாகம், அரசு நிறுவனங்களின் லாபகரமான இயக்கம், மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்போது மட்டுமே இந்த வரவு-செலவுத் திட்டத்தின் உண்மையான வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.

ஆனால் அதற்கான மூலோபாயங்களை இதில் காணப்படவில்லை என்பது தான் எதிர்காலம் மீதான அச்சத்தை இயல்பாகவே உருவாக்குகின்றன.