மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் பாரம்பரிய கால்நடை வளர்ப்புத் தொழிலையும், அவர்களின் வாழ்வாதார உரிமையையும் நில உரிமையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி, இப்பகுதிப் பண்ணையாளர்களும் பொதுமக்களும் பல கட்டப்போராட்டங்களை வீதிகளில் இறங்கி முன்னெடுத்தனர்.

இறுதியாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது மாவட்டத்தின் பல்வேறு சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டதோடு பூர்வீக நிலங்களும் மேய்ச்சல் தரைகளும் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதற்கெதிரான உறுதியான குரலாக எழுப்பப்பட்டன.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், குறிப்பாக 2019 முதல் 2023 வரை கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த அநுராதா யஹம்பத்தின் காலத்தில் தான் ஆக்கிரமிப்புக்கள் தீவிரமடைந்தன.

தமிழ் மக்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதிக்கும் வகையிலும், அப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்ற நியாயமான சந்தேகம் இன்றும் மக்களிடையே நிலவுகிறது.

அதேபோன்று, அப்பகுதியில் திடீரெனத் தலைதூக்கிய புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைகளிலும் அக்கால நிர்வாகத்தின் முறையற்ற பங்குகள் குறித்து பாரபட்சமற்ற முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

அதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டபோது, மேய்ச்சல் தரைப் பிரச்சினை மேலும் சிக்கலடைந்து பண்ணையாளர்களை நடுக்கடலில் தத்தளிக்க வைத்தது.

இந்த நில அபகரிப்புச் சதிவலைகளுக்கு மத்தியில், அப்பகுதியில் வாழ்ந்து வரும் கால்நடைகளுக்கு எதிரான வன்முறைகளும் உச்சக்கட்டத்தை எட்டின.

கடந்த காலங்களிலும் அண்மைக்காலங்களிலும் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் கால்நடைகள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள், கத்திகளால் வெட்டப்பட்டுக் காயப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் கொடூரமான கொலைகள் யாவும் மனிதநேயமற்ற செயல்களாகும்.

அண்மையில் இப்பகுதியில் கால்நடைகள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியானபோது, முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் தனது வாட்ஸ்அப் பதிவில் தமிழர்களின் இனவாதப் போக்கிற்காக அப்பாவி விலங்குகளைப் பலியாக்க வேண்டாம் என்ற தொனியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அப்பாவி உயிரினங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். ஆனால், விலங்குநலன் குறித்துப் பேசுபவர்கள், இப்பகுதியில் கால்நடைகள் எதிர்கொள்ளும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் குறித்தும், தினசரி கொல்லப்படும் மாடுகள் குறித்தும் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

அகிம்சையைப் போதிக்கும் பௌத்த மதத்தினரும், உயிர்களைக் காப்பாற்றுவதைத் தமது தலையாய கடமையாகக் கருதுவோரும், கால்நடைகளுக்கு எதிரான இந்த வன்முறைகள் தொடர்பாகவும் வெளிப்படையாகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இறைச்சிக்காக அறுவைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாடுகளைப் பணம் செலுத்தி மீட்டதாகக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் பலரும், மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் துப்பாக்கியால் சுடப்படுவதையும், கொடூரமாகக் கொல்லப்படுவதையும் தடுத்து நிறுத்த ஏன் குரல் கொடுப்பதில்லை?

மகாவலி ஆற்றுப்படுகையுடன் தொடர்புடைய பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பதற்காகமட்டுமே தலைமுறை தலைமுறையாகக் கால்நடைகளை மேய்த்து வந்த பூர்வீகப் பண்ணையாளர்களின் வாழ்வாதார உரிமைகள் எக்காலத்திலும் மறுக்கப்பட முடியாது.

அந்த நிலத்தின் வரலாற்றுப் பயன்பாடு, சட்டரீதியான நிலை, மேய்ச்சல் தேவைகள் மற்றும் பண்ணையாளர்களின் உரிமைகள் அனைத்தும் உரிய முறையில் ஆராயப்பட்டு, கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய கால்நடை வளர்ப்புத் தொழிலையும் விவசாயப் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும்.

சுமார் 3,500 ஏக்கர் மேய்ச்சல் தரை தொடர்பான நில உரிமைகள் மற்றும் பயன்பாட்டு உரிமைகள் சட்டரீதியாக முழுமையாக ஆராயப்பட்டு, உரிய அதிகாரிகளின் உறுதிப்படுத்தலுடன் நில அளவை செய்யப்பட வேண்டும்.

அந்நிலத்தின் எல்லைகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு, எல்லைத் தூண்கள் நாட்டப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகப் பாரம்பரியப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், களத்தில் நடக்கும் அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் மீதான துப்பாக்கிச் சூடுகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கதையாகியுள்ளன.

குறிப்பாக, இலுப்பையடி வெட்டைப் பகுதியில் காசிநாதன் யோகன் என்பவருக்குச் சொந்தமான ஏழு வயது நிரம்பிய மயிலை இனப் பசு ஒன்று கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டு, அதே இடத்தில் இறைச்சிக்காக உரித்துக்கொண்டிருந்ததாகப் பதிவான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைக் கேட்டுச் சென்றவர்கள், பசுவை உரித்துக்கொண்டிருந்த மூன்று நபர்களை நேரில் பார்த்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இத்தகைய கோரச் சம்பவங்கள் அப்பகுதிப் பண்ணையாளர்களின் உயிர்ப் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்புகின்றன.

இத்தகைய அச்சுறுத்தல்கள் தனித்தனிச் சம்பவங்களாகக் கடந்துபோகக் கூடியவை அல்ல. கடந்த ஒக்டோபர் 19 அன்று அருணாசலம் செல்வரெட்ணம் என்பவருக்குச் சொந்தமான வெள்ளைப் பசு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானது. ஒக்டோபர் 22 அன்று கிருஷ்ணபிள்ளை சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான ஆறு வயதுடைய வெள்ளைப் பசு துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது.

சண்முகம் கோவிந்தராஜன் என்பவருக்குச் சொந்தமான பசுவின் கழுத்துப் பகுதியில் நான்கு கடுமையான காயங்கள் காணப்பட்டன. கத்திகளுடன் சிலர் பண்ணையாளர்களின் வாடிகளுக்குச் சென்று அச்சுறுத்தியதாகத் தொடர்ச்சியான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்களும் வன்முறைகளும் தடையின்றித் தொடர்வது இலங்கையில் சட்டத்தின் ஆட்சி எங்குள்ளது என்ற கேள்வியை ஆழமாக எழுப்புகின்றது.

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாக, பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில் இடம்பெறும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், மறுபுறம் கால்நடைகள் சுட்டுக் கொல்லப்படுவதும் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதும் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய முழுப் பொறுப்பும் அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் உரிய ஏனைய அரச நிறுவனங்களுக்கும் உள்ளது.

எனவே, கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின்படி, இத்தகைய அவலங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தி, குற்றச்செயலில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அண்மைக்காலத்தில் கால்நடைகள் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டுச் சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும்.

பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கால்நடைகள் சுட்டுக்கொல்லப்படுவதன் மூலமாகவோ, பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதன் மூலமாகவோ அவர்கள் தமது பாரம்பரிய வாழ்வாதாரத்தைக் கைவிட வேண்டிய நிலை உருவாகாமல் இருப்பதை அரசாங்கம் உறுதியாக உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு பசு சுட்டுக் கொல்லப்படுவது என்பது வெறும் ஒரு கால்நடையின் இழப்பு மட்டுமல்ல அது ஒரு குடும்பத்தின் உழைப்பு, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.