எந்தவொரு நாட்டின் வரவு-செலவுத் திட்டமும் நிலையான அபிவிருத்தியை நோக்கியதாகவே கட்டமைக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை இந்த அடிப்படை இலக்குகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
பணவீக்கத்தை 5 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அரசாங்கம் ஆரம்பத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது அந்த இலக்குகள் தகர்க்கப்பட்டு, பணவீகம் 8.3 வீதத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கும் சூழலை அரச இயந்திரத்தினால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய இந்த இரண்டு அடிப்படைப் பொருளாதாரக் குறிகாட்டிகளையும் (நிலையான வளர்ச்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம்) வெற்றிகரமாகக் கையாண்டு, ஸ்திரத்தன்மையை வழங்கத் தவறிய ஒரு அரசாங்கத்தால், 2027 வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மாத்திரம் நாட்டில் எந்தவிதமான ஆழமான மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திவிட முடியாது.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி உயர்வு விளிம்புநிலை மக்களைத் தொடர்ந்து நசுக்கிக் கொண்டிருக்கும் போது, வரவு-செலவுத் திட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. அதனை ஈடு செய்யவும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் தாங்கள் 141 பில்லியன் ரூபாவைச் செலவிட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். இதில் இரண்டாவது காலாண்டில் வழங்கப்பட்ட 59 பில்லியன் ரூபா எரிபொருள் மானியமும், நான்காவது காலாண்டிற்கான 41 பில்லியன் ரூபா எரிபொருள் மானியமும் உள்ளடங்குகின்றது.
எனினும், இந்தத் தரவுகளுக்குப் பின்னால் மறைந்துள்ள நிதிக் கணக்குகளை ஆழமாகப் பார்க்கும்போது உண்மை நிலை விளங்குகிறது. இந்த மானியக் கொடுப்பனவுகளில், அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்ற 29.2பில்லியன் ரூபா மீளவும் திறைசேரிக்கே திரும்பிச் சென்றுவிடுகிறது.
மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தினால் அவர்களுக்குக் கிடைக்கும் இலாபம் ஒருபோதும் இலங்கைக் குடிமக்களின் கைகளுக்குச் சென்று சேரப் போவதில்லை. எனவே, அரசாங்கம் முழங்குவது போல இந்த நிவாரணங்களை முழுமையாக மக்களுக்கானது என்று எம்மால் ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது. இது மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகப் பூசப்படும் மேலோட்டமான வர்ணமாகவே பார்க்க முடிகிறது.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பயணம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மார்ச் மாதத்துடன் இந்த உடன்படிக்கை முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த தெளிவான பதில் அரசாங்கத்திடம் இல்லை. அமைச்சர்கள் பலரும் முரண்பட்டுக் கருத்துத் தெரிவிக்கின்றனர். சில அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டைத் தொடரப் போவதில்லை என்றும், தனித்துவமான பாதையில் பயணிக்கப் போவதாகவும் கூறுகிறார்கள்.
அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, ஒரு சுயாதீனமான, தனித்துவமான பொருளாதாரப் பாதையில் பயணிக்க அரசாங்கம் முடிவெடுத்தால், அதற்கான ஒரு வலுவான மற்றும் நம்பகமான 'வழிவரைபடம் எங்குள்ளது? இத்தகைய மாற்றுத் திட்டங்கள் எதையும் ஜனாதிபதி இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டத் தவறியுள்ளார். தொலைநோக்குப் பார்வையற்ற இத்தகைய திசையற்ற போக்கு, இலங்கைப் பொருளாதாரத்தை மீண்டும் ஒரு படுகுழிக்குள் தள்ளிவிடக்கூடும் என்ற அச்சம் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இல்லாமல் எந்தவொரு வளரும் நாடுகளின் பொருளாதாரமும் முன்னேற முடியாது. ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கைக்குள் வரவிருந்த வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. பெரியளவிலான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர்; மிகச் சிறியளவிலான முதலீடுகள் மட்டுமே தற்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இதற்குச் சிறந்த உதாரணம் சீனாவின் பிரபல நிறுவனமான 'சினோபெக்கின்' 3.7 பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை நடுக்கடலில் தத்தளிப்பது போலத் தெரிவதுதான். மேலும், அண்மையில் மற்றொரு சீன நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியத்தை அமைக்கும் திட்டத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டது.
இந்தச் சம்பவங்கள் இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழல் இல்லை என்பதையே பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றன. அரசாங்கம் புதிதாக 'முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம்' ஒன்றைக் கொண்டுவரப் போவதாகக் கூறினாலும், நடைமுறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கத் தவறியுள்ள நிலையில், அந்தச் சட்டம் எந்தளவுக்குப் பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
2027 ஆம் ஆண்டில் நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக அதிகளவாக சுமார் 2,000 பில்லியன் ரூபா மூலதனச் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாப்பரசுத் திட்டங்களைப்போல எண்களை அச்சிடுவதில் அர்த்தமில்லை; களத்தில் அவை எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதே முக்கியம்.
அண்மைய கணிப்பீடுகளின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தினால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களில் சுமார் 40 சதவீதமானவை இதுவரை செயற்படுத்தப்படாமலேயே முடங்கிக் கிடக்கின்றன.
கடந்த ஆண்டிற்கான நிதியையே முழுமையாகப் பயன்படுத்தத் திறனற்ற ஒரு நிர்வாகக் கட்டமைப்பு, அடுத்த ஆண்டில் 2,000 பில்லியன் ரூபா போன்ற பிரம்மாண்டமான நிதி ஒதுக்கீட்டைத் துல்லியமாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தி முடிப்பதில் எந்தளவுக்கு வெற்றி காணும் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
நிர்வாகத் திறமையின்மை மற்றும் அதிகாரத்துவத் தாமதங்கள் காரணமாக இந்த மூலதன நிதி ஒதுக்கீடுகளும் வீணடிக்கப்படக்கூடிய அபாயமே அதிகம் உள்ளது. ஆனால் இதுபற்றிய புரிதல் ஆட்சியாளர்களக்கு கிடையாது. ஏனென்றால் அவர்களும் ஆட்சிக்குப் புதியவர்கள் தான்.
2027 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, அது கடந்த ஆண்டைப் போலவே சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாகவே இருக்கப் போகிறது. உலகளாவிய ரீதியில் பருவநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய 'எல்நினோ' போன்ற இயற்கை இடர்கள் விவசாயத் துறையைப் பாதிக்கலாம். மின் உற்பத்தியில் தடைகளை உருவாக்கலாம். இவற்றுடன், முன்னிற்க முடியாத மற்றும் முன்கணிக்க முடியாத போர்களச் சூழல்களும் பிராந்திய மோதல்களும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கத் தயாராக உள்ளன.
இந்த யதார்த்தங்களை எல்லாம் எதிர்கொள்வதற்கான உறுதியான நெகிழ்ச்சித் தன்மையை இலங்கைப் பொருளாதாரம் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சவால்களை எல்லாம் தாண்டி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுக்கொண்டு செல்வதற்கு இந்த வரவு-செலவுத் திட்டம் எந்தளவுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்யப் போகிறது என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே.
இந்நிலையில், காகிதத்தில் அச்சிடப்பட்ட இலக்குகளும், இலக்கங்களும் பிரம்மாண்டமான நிதி ஒதுக்கீடுகளாக மட்டுமே உள்ளன. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைக் தூக்கி நிறுத்த அவையால் முடியாது.
ணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தொடரும் பின்னடைவு, தெளிவற்ற சர்வதேசக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றுக்குத் தீர்வு காணாதவரை, இந்த 2027 வரவு-செலவுத் திட்டமும் ஏனைய பல பெயரளவிலான திட்டங்களைப் போலவே வெறும் புள்ளிவிவர ஆவணமாகவே காலாவதியாகும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!