இலங்கையின் அரசியல் களம் தற்போது வித்தியாசமான திருப்பத்தைக் கண்டுள்ளது. முன்னர், மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்கியபோது, அதை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ வரையிலான சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் தலைமையில் கூட்டணி அரசியல் தொடர்ந்தது. கடந்த நூற்றாண்டில் நடந்த சில பொதுத்தேர்தல்களில் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்றபோதிலும், நாடு முழுவதும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி பலமுறை முன்னணியில் இருந்தது சுவாரஸ்யமான உண்மை.

ஆனால், தற்போது, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் கிட்டத்தட்ட 30வருட கால தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக்கட்சி, மிக மோசமாகப் பலவீனமடைந்துவிட்டது. ஒரு காலத்தில் தனிக்கட்சி ஆதிக்கம் செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார் என்று கூறப்பட்டது.

ஆனால், அதேதேர்தல் முறையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு உறுப்பினரைக்கூட பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியாத பொதுத் தேர்தலையும் இலங்கை கண்டிருக்கிறது. மாறாக, சில வருடங்களுக்கு முன் வெறும் மூன்று சதவீத வாக்கு வங்கியை மட்டுமே கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று, ஜனநாயகத் தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வந்த முதல் இடதுசாரிக்கூட்டணி என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது.

தற்போது, ஒருவருட ஆட்சிக்காலத்தினைப் பூர்த்தி செய்திருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக, மிகவும் பலவீனமான நிலையில் உள்ள பாரம்பரிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன ஒன்றிணைந்து செயற்பட முயற்சித்து வருகின்றன.

இந்தக் கட்சிகளில் எந்தவொன்றுக்கும் தற்போதைய நிலையில் உறுதியான கட்டமைப்புகள் காணப்படவில்லை. கடந்த தேசிய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இக்கட்சிகள், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தங்களுக்கான அரசியல் பொருத்தப்பாட்டைத்தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது பெருவாரியான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது என்பது உண்மை. இதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பை, கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் அக்கட்சியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி வெளிக்காட்டியுள்ளது.

இருப்பினும், எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்றிணைவு முயற்சிகள், மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பொருளாதார அல்லது சமூகப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதை விட, முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ஆளும் அரசாங்கம் தற்போது எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகளை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்துக்கு அரச நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டின.

முன்னைய அரசாங்கங்களில் பதவிகளை வகித்த அரசியல்வாதிகள் பலர், தாங்கள் எந்த நேரத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த அச்சமே அவர்களை ஒன்றிணைக்கும் உந்துசக்தியாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு மற்றும் சில அரசியல்வாதிகள் மீதான சட்ட நடவடிக்கைகளை ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்து, ஆளும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகப் போராட அறைகூவல் விடுத்துள்ளன.

செப்டெம்பர் முற்பகுதியில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது வருடாந்த மகாநாட்டை விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வருவதற்கானதொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தினார். இதன் விளைவாக, ஐக்கிய தேசியக் கட்சி,  பொதுஜன பெரமுன, சுதந்திரக்கட்சி, மற்றும் பிவிதுறு ஹெல உறுமய போன்ற கட்சிகள் இணைந்து, நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிரான பிரமாண்டமான பேரணியொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

நுகேகொடை என்பது 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் எழுச்சிக்கு வழிவகுத்த வெற்றிகரமான ‘மஹிந்த சூறாவளி’ பேரணி நடந்த இடமாகும். அதே வியூகம் இம்முறையும் வெற்றிபெறும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தப் பிரதான கட்சிகளின் கூட்டமைவுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் நடந்த மூன்று தேர்தல்களின் அடிப்படையில் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பேரணியில் திட்டவட்டமாகப் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் ஆதரவை இழந்த மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதால் தங்களுக்குப் பெரிய அரசியல் அனுகூலம் கிடைக்கப் போவதில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவுடனும் பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷவுடனும் ஒரே மேடையில் தோன்றுவது தனது தலைமைத்துவ ஆளுமைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பு இல்லாமல், கணிசமான மக்கள் ஆதரவைக் கொண்ட பெரிய எதிர்க்கட்சி இல்லாமல், இந்தப் பலவீனமான கட்சிகளின் ஒன்றிணைவு முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்வி எழுகிறது.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் இந்த எதிர்க்கட்சிகள் மத்தியில் கொள்கை ரீதியாகப் பெருமளவில் ஒற்றுமையும் இல்லை. மேலும், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை ஆதரிக்காத உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகளின் ஈடுபாடு, சிறுபான்மைக் கட்சிகள் இந்த முயற்சியில் பங்கேற்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

நிலைமையின் நிர்ப்பந்தத்தால் தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், ஒரு தேர்தல் வரும்போது இந்தக் கட்சிகள் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே தென்படுகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ‘ஜனநாயக விரோதம்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை மக்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பது கவனிக்க வேண்டியதொரு அம்சமாகும். அரசியலமைப்பு சர்வாதிகாரம் என்று குற்றஞ்சாட்டும் இந்த கட்சிகள், அதற்கு அடிப்படைக் காரணமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை (புதிய அரசியலமைப்புக்காகக் காத்திருக்காமல்) தாங்கள் ஆட்சிக்காலத்தில் இருந்தபோது, பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஏன் நீக்கக் கோரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.