இலங்கையின் அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மே தினம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுத்த போராட்டங்களை நினைவுகூரும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், 01-05-2026 அன்று நாடெங்கிலும் நடைபெற்ற மே தினக்கூட்டங்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை விடவும், அரசியல் கட்சிகளின் தேர்தல் தந்திரோபாயங்களையும், அதிகாரப் போட்டிகளையும், இனத்துவ அடையாள அரசியலையுமே பிரதானமாகக் கொண்டிருந்தன.

நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரை ஒலித்த மே தினப் பிரகடனங்கள், மேடைகளில் திரண்டிருந்த தொழிலாளர்களின் வியர்வைக்கும் அவர்களின் வறுமைக்கும் தீர்வு சொல்வதை விட, வரப்போகும் தேர்தல்களில் எவ்வாறான அதிகார மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதையே மையமாகத் தழுவியிருந்தன.

தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமானது, அரசியல் கட்சிகளின் 'வாக்கு வேட்டை' மற்றும் 'பரஸ்பரக் குற்றச்சாட்டுகளின்' நிழலில் மறைந்து போனது என்பது தான் இம்முறை நடைபெற்ற  மே தினத்தின் கசப்பான உண்மையாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற மே தின நிகழ்வுகள், வழமை போலவே தொழிலாளர் தினத்தை தேசிய அடையாளப் போராட்ட நாளாகவே மாற்றியிருந்தன.

கிளிநொச்சியில் சிவஞானம் சிறிதரன் எம்.பி தலைமையிலானா குழுவினர் விடுத்த 'யாமார்க்கும் குடியல்லோம' என்ற முழக்கமும், மாங்குளத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சமஷ்டி கோரிக்கையும், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஒற்றையாட்சி எதிர்ப்புப் பிரகடனமும் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை அரசியலுக்குள் கரைத்துவிட்டன.

உழைக்கும் வர்க்கத்தின் ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டாலும், அவை அனைத்தும் 'சுயநிர்ணயம்' மற்றும் 'தேசிய அங்கீகாரம்' என்ற பெரும் இலட்சியங்களின் துணைப் பொருட்களாகவே கையாளப்பட்டன.

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டமும், பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப்பிரச்சினைகளும் வெறும் ஆக்கிரமிப்பு அரசியலாக மட்டுமே பார்க்கப்பட்டதே தவிர, தொழிலாளியின் பொருளாதாரப் பாதுகாப்பாக அவை மேடைகளில் முன்னிறுத்தப்படவில்லை.

மறுபுறம், தென்னிலங்கையின் மே தின மேடைகள் தேர்தல் களத்தையே பிரதிபலித்தன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மே தின உரை, தொழிலாளர்களின் உரிமைகளை விடவும் கடந்த கால ஊழல் விசாரணைகள் மற்றும் ராஜபக்ஷர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது போன்ற விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்தியது.

2009-ஆம் ஆண்டு படுகொலைகள் மற்றும் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள சொத்துக்கள் குறித்து அவர் ஆற்றிய உரையானது, ஒரு தேசத்தின் தலைவராக ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாலும், அன்றாடக் கூலித் தொழிலாளியின் வறுமையை ஒழிப்பதற்கான உடனடித் திட்டங்கள் அதில் குறைவாகவே காணப்பட்டன.

'சிவப்பு பிடியாணை' மற்றும் 'அரசுடமையாக்கப்படும் சொத்துக்கள்' போன்ற அதிரடியான வசனங்கள் மேடையை அலங்கரித்தனவே தவிர, உழைப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான 'மார்க்சிய' அடிப்படையிலான பொருளாதாரக் கட்டமைப்புகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் இடம்பெறவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரை, கட்சித் தாவல்கள் மற்றும் அரசியல் கூட்டணிகள் குறித்த விளக்கப்படமாகவே அமைந்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்கனவே இணைந்துவிட்டோம் என்ற அவரது பிரகடனம், மே தினத்தின் வர்க்கப் போராட்ட குணவியல்பைத் துடைத்தெறிந்துவிட்டு, அதனை அதிகாரப்பகிர்வுக்கான மேடையாக மாற்றியது.

ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிப்பதும், ஜனாதிபதிக்குத் தேர்தல் சவால் விடுப்பதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தலைவனின் பண்பை விட, ஒரு தேர்தல் வேட்பாளரின் பிம்பத்தையே பிரதிபலித்தது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல. விஜேதாச ராஜபக்ஷவின் உரை, கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் அதன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே அமைந்தது

தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையும், முற்றிலும் அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான மோதல்களை மையப்படுத்தியிருந்தது.

தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடுகளை விமர்சிப்பதும், ஒற்றையாட்சி முறைமைக்கு எதிரான எச்சரிக்கைகளை விடுப்பதும் அவரது உரையின் சாரமாக இருந்தது. 'ஒன்றுபட வேண்டிய தருணம்' என்று அவர் விடுத்த அழைப்பு, தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக விடுக்கப்பட்ட அழைப்பல்ல, மாறாகத் தமிழ் தேசியக் கட்சிகளின் அரசியல் மேலாதிக்கத்திற்கான அழைப்பாகவே இருந்தது.

மே தின மேடையில் மத மற்றும் கலாசார அடையாளங்கள் அழிக்கப்படுவது குறித்துப் பேசுவது அவசியமானது என்றாலும், உழைக்கும் வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை இன அடையாளப் போராட்டத்திற்குள் முழுமையாக அடக்க முயல்வது, மே தினத்தின் உலகளாவிய தொழிலாளர் ஒற்றுமை என்ற கருத்தாக்கத்தைச் சிதைப்பதாக அமைந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2026-ஆம் ஆண்டின் இலங்கை மே தின நிகழ்வுகள் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டக் களமாக அமையாமல், அரசியல் கட்சிகளின் 'பலப்பரீட்சை' மேடைகளாகவே காட்சியளித்தன.

ஜே.வி.பி அரசாங்கத்தின் புதிய அரசியல் கலாசாரம் பழைய பந்திக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, எதிர்க்கட்சிகளும் மாற்று சக்திகளும் கூடத் தொழிலாளர்களின் தோள்களில் ஏறிக்கொண்டு தங்களின் அரசியல் இலக்குகளை அடையவே முயற்சித்தன.

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினை மற்றும் சிறு விவசாயிகளின் உரம் சார்ந்த சிக்கல்கள் போன்ற யதார்த்தமான நெருக்கடிகளுக்குத் தீர்வுகளைப் பிரகடனங்களாக வெளியிடாமல், 'ஆட்சி மாற்றம', 'புதிய அரசியலமைப்பு', 'சர்வதேச விசாரணை' போன்ற உயர்மட்ட அரசியல் கோரிக்கைகளே மே தினத்தை ஆக்கிரமித்திருந்தன.

இந்த மே தினப் பிரகடனங்கள் அனைத்துமே ஒரு விடயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன: இலங்கையில் தொழிலாளர் வர்க்கம் என்பது அரசியல் கட்சிகளுக்கு வெறும் 'வாக்கு வங்கிகளாகவே' இன்னும் பார்க்கப்படுகின்றனர்.

மே தினத்தின் சிவப்பு நிறமானது, தொழிலாளர்களின் குருதியையும் தியாகத்தையும் குறிப்பதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகளின் சின்னங்களாகவும் அலங்காரங்களாகவும் மட்டுமே எஞ்சியிருக்கின்றது. 'யாமார்க்கும் குடியல்லோம்' என்று வடக்கிலும், 'ராஜபக்ஷக்களைக் கூட்டி வருவேன்' என்று தெற்கிலும் முழங்கிய தலைவர்கள், அன்றைய தினமே தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிஜமான தேவைகளை மேடை அலங்காரங்களுக்குள் புதைத்துவிட்டனர்.

இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான சூழலில், உழைக்கும் மக்கள் ஒரு வலுவான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அரசியல் கட்சிகள் அந்த உணர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்பிவிட்டன.

வடக்கு-கிழக்கு அரசியல்வாதிகள் தமது இனத்துவ அரசியலையும், தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமது ஊழல் எதிர்ப்பு மற்றும் கூட்டணி அரசியலையும் மே தினத்தின் பெயரால் சந்தைப்படுத்தினர்.

தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகத் திரண்ட கூட்டங்கள், இறுதியில் ஒரு சில தலைவர்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் கருவியாக மட்டுமே பயன்பட்டன. மே தினம் என்பது தொழிலாளர்களுக்கானது என்ற நிலை மாறி, அது அரசியல் தலைவர்களின் செல்வாக்கை அளவிடும் 'வெற்று மேடையாக' மாறிவிட்ட அவலத்தையே மே தினம் வெளிப்படுத்தியுள்ளது.