யாழ்ப்பாணம் செம்மணி-சித்துப்பாத்தி மயான வளாகத்தில் இடம்பெற்று வரும் தடம்சார் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்பது வெறும் தொல்பொருள் சார்ந்த ஒன்றல்ல.

அது தசாப்தங்களாகத் தங்களின் காணாமல்போக்கப்பட்ட உறவுகளின் வருகைக்காகவும், அவர்களுக்கான நீதிக்காகவும் கண்ணீருடன் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வா தாரத்தோடு பிணைக்கப்பட்ட ஒரு நீதிக்கான போராட்டமாகும்.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியாக, களனிப் பல்கலைக்கழகத்தின் முதுகலைத் தொல்லியல் நிறுவனத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோரால் தயாரிக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 17 பக்கங்களைக் கொண்ட 'மூன்றாவது இடைக்காலச் சுருக்க அறிக்கை' வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் அவதானிப்புகளும் முடிவுகளும் வரலாற்று உண்மைகளை மூடிமறைப்பதாகவும், மனிதப் புதைகுழி என்ற கொடூர உண்மையைக்கூட சாதாரண மயானத்தின் நீண்டகாலப் பயன்பாடாகச் சித்தரிக்க முயல்வதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் கடும் சந்தேகத்தையும் தர்க்கரீதியான எதிர்ப்பையும் தோற்றுவித்துள்ளன.

அறிக்கையின் தரவுகளின்படி, வெறும் 513 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட 'அகழ்வு குழி 1' மற்றும் அதனோடு தொடர்புடைய பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் 574மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கையே ஒட்டுமொத்தப் பகுதியிலும் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் அடர்த்தியையும், அதிர்ச்சியூட்டும் அளவையும் வெளிப்படுத்தப் போதுமானதாகும்.

மேலும், கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களில் 41 சதவீதமானவை குழந்தைகள் என்றும், 22 சதவீதமானவை சிசுக்கள் என்றும், 30 சதவீதமானவை பெரியவர்கள் என்றும், 5 சதவீதமானவை வளர் இளம் பருவத்தினர் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, தோண்டி எடுக்கப்பட்ட உடல்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை சிறுவர்களினதும் பிஞ்சுக் குழந்தைகளினதும் உடல்களாகும். ஒரு குறிப்பிட்ட 513 சதுர மீற்றர் பரப்பளவில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான மனித எச்சங்கள், அதிலும் பெரும்பாலான பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் எவ்வாறு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்க முடியும் என்பது மருத்துவ-சட்ட ரீதியாகவும், தடம்சார் தொல்லியல் ரீதியாகவும் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய பிரதான கேள்வியாகும்.

இருப்பினும், இந்த அறிக்கையை தயாரித்த தொல்லியல் வல்லுநர்கள், கண்டெடுக்கப்பட்ட சான்றுகளை ஒரு திட்டமிடப்பட்ட சட்டவிரோதப் படுகொலை மற்றும் இரகசியப் புதைகுழி என்பதிலிருந்து விடுவித்து, அதையொரு சாதாரண 'ஒழுங்கமைக்கப்பட்ட பொது மயானப் பயன்பாடு' எனச் சித்தரிக்க முற்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்களின் இந்த முடிவுக்குப் பேழை வன்பொருள்கள், உடல்களுடன் காணப்பட்ட மாலைகள், நாணயங்கள், தாயத்துகள் மற்றும் சடலங்களின் சீரான நோக்குநிலை (72சதவீதமானவை வடமேற்கு நோக்கி அமைந்திருந்தமை) போன்றவற்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அத்துடன், ஒரே இடத்தில் 574 உடல்கள் காணப்படுவதற்குப் பெருந்தொற்று அல்லது திடீர் பேரழிவுகள் காரணமா என்ற கோணத்திலும் சிந்திக்கலாம் என்று அறிக்கை அனுமானிக்கிறது. ஆனால், இத்தகைய அனுமானங்கள் மற்றும் விளக்கங்கள் தர்க்கரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதுடன், செம்மணி மண்ணில் இடம்பெற்ற வரலாற்றுப் பின்னணியை திட்டமிட்டுப் புறந்தள்ளுவதாகவும் அமைந்துள்ளன.

முதலாவதாக, செம்மணி பகுதி வரலாற்று ரீதியாக 1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள், குறிப்பாகப் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடித் தொடர்புடைய இடமாகும்.

1996 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1998 ஆம் ஆண்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், செம்மணிப் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.

1999 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பகுதி அகழ்வாராய்ச்சிகளில் 15 உடல்கள் மீட்கப்பட்ட போதிலும், முழுமையான விசாரணைகள் தசாப்தங்களாக முடக்கப்பட்டிருந்தன. இத்தகையதொரு தெளிவான குற்றவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டஇடத்தை, சாதாரண சட்டபூர்வமான மயானமாக வரையறுக்க முயல்வது தர்க்க நியாயங்களுக்கு முரணானதாகும்.

இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சட்டத்தரணி கஸ்தூரி அகாலங்கன் சுட்டிக்காட்டியது போல, சித்துப்பாத்தி மயானம் என்பது இந்து மதச் சடங்குகளின்படி 'தகனம்' செய்யப்படும் ஒரு மயானமே தவிர, உடல்களைக் குழிக தோண்டிப் 'புதைக்கும்' வழமையைக் கொண்ட இடமல்ல. அதுமட்டுமன்றி, உடல்கள் கண்டெடுக்கப்பட்ட குறிப்பிட்ட 513 சதுர மீற்றர் பரப்பளவு நிலப்பகுதி, சட்டப்பூர்வமான மயானப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நிலம் என்பதற்கான எவ்வித ஆவணச் சான்றுகளும் இல்லை.

அவ்வாறிருக்கையில், அப்பகுதியை நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்ட சாதாரண புதைநிலம் என அறிக்கை எவ்வாறு முடிவு செய்ய முடியும்? மேலும், முன்னைய மூன்று அறிக்கைகளில் 'மனிதப் புதைகுழி' என்ற பதத்தைப் பயன்படுத்திய பேராசிரியர் ராஜ் சோமதேவ, தற்போதைய இந்த இடைக்கால அறிக்கையில் அந்தப் பதத்தைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளமை, தொல்லியல் அவதானிப்புகளில் நடுநிலைமை தழுவப்பட்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது.

மூன்றாவதாக, பூமிக்குக் கீழே வெறும் ஒரு மீற்றர் அல்லது அதற்கும் குறைவான மிக ஆழமற்ற பகுதியில் பெருமளவிலான உடல்கள் கண்டெடுக்கப்பட்டமை, அதுவும் பெரியவர் ஒருவர் ஒரு குழந்தையைக் கைகளில் ஏந்தியவாறு புதைக்கப்பட்டுள்ள அபூர்வமான நிலைகள் கண்டறியப்பட்டமை போன்றவை சாதாரண மயானப் புதைத்தலை உணர்த்தவில்லை.

மாறாக, அவசர அவசரமாக உடல்கள் வீசப்பட்டதையோ அல்லது சட்டவிரோதமாகப் புதைக்கப்பட்டதையோ தான் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அறிக்கை, இத்தகைய ஆழமற்ற நிலையை 'மண்ணின் தன்மை மற்றும் இட நெருக்கடி' எனச்சாதாரணப்படுத்துகிறது.

அதேபோல, பேரழிவு அல்லது பெருந்தொற்றுநோய் காரணமாகவே இவ்வளவு உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அறிக்கையின் அனுமானம் முற்றிலும் அடிப்படையற்றது. ஏனெனில், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பதிவுகளிலோ அல்லது மருத்துவ ஆவணங்களிலோ குறிப்பிட்ட காலத்தில் அத்தகையதொரு மாபெரும் பெருந்தொற்று நோய் பரவியதாகவோ அல்லது நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியானதாகவோ எவ்விதச் சான்றுகளும் இல்லை.

போதுமான விஞ்ஞானபூர்வ மற்றும் வரலாற்று சான்றுகள் இன்றி, 'பெருந்தொற்று' என்ற தற்போதைய அனுமானத்தை அறிக்கையில் முன்வைப்பது என்பது, திட்டமிட்ட மனிதப் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

நான்காவதாக, உடல்களுடன் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் பொருட்களின் காலக்கணிப்பு குறித்த அரைகுறை விளக்கங்கள் மற்றொரு பெரிய முரண்பாடாகும். அறிக்கையில் 1870 ஆம் ஆண்டின் நாணயம் ஒன்றைக் குறிப்பிட்டு, இந்த மயானம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே பயன்பாட்டில் உள்ளது என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றுள்ளனர்.

ஆனால், அதே அறிக்கையின் மற்றொரு பகுதியில், சாம்பல் அடுக்கிலிருந்து 1920, 1944, 1963, 1975, 1978, 1982, 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டு நாணயங்கள் மீட்கப்பட்டமை மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், 1990களின் பாதியில்தான் யாழ்ப்பாணத்தில் தீவிர இராணுவக் கட்டுப்பாடும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் காணாமல்போதல்களும் உச்சக்கட்டத்தை எட்டின. 1994 ஆம் ஆண்டைய நாணயம் உடல்களுடன் அல்லது அதற்கு அருகாமையில் காணப்பட்டது என்றால், அந்தப் புதைப்புச் சம்பவம் 1994 ஆம் ஆண்டிற்குப் பின்னரே, அதாவது செம்மணி படுகொலைகள் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், இந்த முக்கியமான காலக்கணிப்பு ஆதாரத்தை அறிக்கை ஆழமாக ஆராயாமல் கடந்து சென்றுள்ளது.

மேலும், 513 சதுர மீற்றருக்கு அப்பால் முன்னெடுக்கப்பட்ட தரை ஊடுருவல் ரேடார் ஆய்வுகளின் படி, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என சுற்றியுள்ள பரந்த நிலப்பரப்பிலும் இன்னும் ஏராளமான எலும்புக்கூட்டுக் குழிகளும் புதைவிடங்களும் நீண்டு காணப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இது செம்மணிப் பகுதி முழுவதுமே ஒரு மிகப்பெரிய மனிதப் புதைகுழி வளாகமாக உருவெடுத்துள்ளதைக் காட்டுகிறது. நிலத்தடி நீர் மட்டம், மண்ணின் காரத்தன்மை போன்ற காரணங்களால் உடைகளில் இருந்த துணிகள் அழிந்திருக்கலாம் என்று கூறும் அறிக்கை, கண்டெடுக்கப்பட்ட செருப்புகள், பொத்தான்கள் மற்றும் பிளாஸ்டிக் மணிகள் குறித்து ஆழமான குற்றவியல் பகுப்பாய்வை முன்வைக்கத் தவறிவிட்டது.

அந்த வகையில், பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மூன்றாவது இடைக்கால அறிக்கை என்பது, விஞ்ஞானத்தின் பெயரால் வரலாற்று உண்மைகளை மழுங்கடிக்கும் ஒரு முயற்சியாகவே வெளிப்படுகிறது. ஆய்வாளர்கள் தங்களின் முடிவுகள் 'தற்காலிகமானவை' எனக்குறிப்பிட்டிருந்தபோதிலும், அறிக்கை நகர்ந்துள்ள விதம் குற்றவியல் கொலைக்களத்தைச் சாதாரண மயான நடவடிக்கையாக மாற்றுவதற்கு முயல்கிறது என்பது வெளிப்படையாகிறது.

எலும்புகளின் விரிவான ஆய்வகப் பரிசோதனை, மண்ணின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் முழுமையான ரேடார் தரவுகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை இன்னும் நிறைவு பெறாத சூழலில், 'பெருந்தொற்று' என்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட மயானம்' என்றும் அவசர முடிவுகளுக்கு வருவது நீதியை முடக்கும் செயலாகும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோருவது போல, அனைத்துச் சான்றுகளும் நடுநிலையான சர்வதேசத் தடம்சார் தொல்லியல் நிபுணர்களின் பங்களிப்போடு ஆராயப்பட வேண்டும். செம்மணியில் புதைக்கப்பட்டிருப்பது வெறும் எலும்புகள் மட்டுமல்ல் அது தமிழ் மக்களின் நீதிக்கான குரல். அந்த நீதியை மறைக்கவும் மழுங்கடிக்கவும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தர்க்கரீதியற்ற முயற்சியும் வரலாற்றுத்துரோகமாகவே அமையும்.