இலங்கையின் புதிய அரசியலமைப்பு பற்றிய பல்வேறு உரையாடல்கள் அரங்கேறி வருகின்ற வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம், தமிழ்த் தேசிய அரங்கிலும், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது நடைபெறுவதற்கு தயாராகி வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளை நசுக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்ற கவலையை அவரது கடிதம் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் அண்மையில் தமிழகம் வந்து முதலமைச்சரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மையப்புள்ளிக்கு முதலமைச்சர் கொண்டு சென்றுள்ளார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 முதல் தற்போது வரை, தமிழ்ச் சமமூக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் வெறும் வன்முறை சார்ந்தது மட்டுமல்ல் அவை 'கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை' (ளுவசரஉவரசயட ழுppசநளளழைn) சார்ந்தவை. 1947இல் சோல்பரி அரசியலமைப்பு, 1972இல் முதலாவது குடியரசு அரசியலமைப்பு மற்றும் 1978இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு ஆகிய அனைத்தும் இலங்கையை ஒரு 'ஒற்றையாட்சி' (ருnவையசல ளுவயவந) நாடாகவே வரையறுத்தன.
இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்புத் தான் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கவும், திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழர்களின் தாயகத்தில் இனப்பரம்பலை மாற்றியமைக்கவும், தமிழ் மொழியின் உரிமைகளைச் சிதைக்கவும் வழிவகுத்தது.
கடந்த 77 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் சகித்து வரும் இந்த பாகுபாடு, பல சர்வதேச ஆய்வாளர்களால் 'கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை' என்று விவரிக்கப்படுவதை முதலமைச்சர் தனது கடிதத்தில் மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சரின் கடிதத்தில் மிக முக்கியமான அம்சமாக இருப்பது 1985ஆம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்பட்ட 'திம்புக் கோட்பாடுகள்' ஆகும் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும்.
தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தும் விடயங்களும் திம்புக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை தான். அந்த வகையில் ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கு ஒரே நிலையான தீர்வாக அமைய முடியும் என்பது வெளிப்படையானது. அவையாவன:
1.தமிழர் தேசியம்: இலங்கைத் தமிழர்களை வெறும் சிறுபான்மையினராகப் பார்க்காமல், ஒரு தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.
2.தமிழர் தாயகம்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்று ரீதியான பாரம்பரிய தாயகம் என்பதை சட்டப்பூர்வமாக ஏற்க வேண்டும்.
3.தன்னாட்சி உரிமை: தமிழர்கள் தங்கள் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
4.முழு குடியுரிமை மற்றும் சமத்துவம்: மலையகத் தமிழர்களுக்கான முழுமையான குடியுரிமை உரிமைகளை வழங்குவதுடன், பாகுபாடற்ற கூட்டாட்சி முறையை (குநனநசயடளைஅ) அமல்படுத்த வேண்டும்.
இந்த நான்கு தூண்களும் இன்றி உருவாக்கப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும், உள்நாட்டில் மீண்டுமொரு மோதல் போக்கிற்கே வழிவகுக்கும் என்பது கசப்பான உண்மையாகும்.
தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், பாராளுமன்றத்தில் பெரும்பான்னமையைப் பெற்றுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. இது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் மீண்டும் ஒரு 'ஒற்றையாட்சி' மாதிரியை வலுப்படுத்தும் முயற்சியாக தான் அமையப்போகின்றது என்பது மிகத் தெளிவானதொரு விடயமாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பிரதான கோசமாக இருந்தாலும் அந்தக் கோசத்துக்குள் ஒழிந்திருந்து ஒற்றையாட்சியை வலுப்படுத்தி நிறைவேற்று அதிகார பிரதமர் ஒருவரை உருவாக்கவே நிச்சயம் அநுர அரசாங்கமும் முயலும் என்பது எதிர்பார்க்கக்கூடியது.
முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது போல, போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், தமிழர்களின் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்வது தமிழ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பது தமிழர்களை மேலும் ஓரங்கட்டும் அல்லது அடக்கியாள்வதற்கான கருவியாக மாறிவிடக் கூடாது என்பதே பிரதான கரிசனைக்குரிய விடயமாகின்றது.
இலங்கையின் வரலாற்றில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஒரு குறைந்தபட்சத் தீர்வாக முன்வைக்கப்பட்டாலும், அது ஒருபோதும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் சுட்டிக்காட்டுவது போல, ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் வழங்கப்படும் எந்தவொரு அதிகாரப் பகிர்வும் மத்திய அரசால் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படலாம். எனவேதான், தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு கூட்டாட்சி முறையை (குநனநசயட ளுலளவநஅ) முதலமைச்சர் வலியுறுத்துகிறார்.
ஈழத்தமிழர் விவகாரம் என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் மட்டுமல்ல் இது சர்வதேச மனித உரிமை விழுமியங்கள் மற்றும் தெற்காசியப் பிராந்தியப் பாதுகாப்போடு தொடர்புடையது. இந்து மகா சமுத்திரப் பகுதியில் இந்தியாவின் செல்வாக்கு நீடிக்க வேண்டுமானால், இலங்கையில் நீடித்த, நிலையான அமைதி ஏற்பட வேண்டும். அந்த அமைதி, சிறுபான்மைத் தமிழர்களின் அரசியல் பாதுகாப்பில் மட்டுமே அடங்கியுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு வெறும் அயல் நாடுகளுக்கு இடையிலான உறவு மட்டுமல்ல. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசார மற்றும் வரலாற்றுப் பிணைப்பைக் கொண்டது. குறிப்பாக, 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம், ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவை ஒரு நேரடித் தரப்பாக மாற்றியுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தமிழ்நாட்டில் ஆழமான சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் அங்குள்ளவர்களைத் தங்கள் இரத்த உறவுகளாகக் கருதுகின்றனர். எனவே, இலங்கையின் அமைதி என்பது தென்னிந்தியாவின் அமைதியோடும் பிணைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தனது கடிதத்தில், இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக ரீதியான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று கோரியிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கான கடிதம், காலத்தின் தேவையறிந்து எடுக்கப்பட்டவொரு துணிச்சலான நடவடிக்கையாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில்; பேச்சுவார்த்தைகளை நடத்தி, தமிழர்களின் கௌரவமான வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.
வெறும் 'அதிகாரப் பகிர்வு' என்ற வார்த்தை ஜாலங்களுக்கு அப்பால், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் ஒரு உண்மையான 'கூட்டாட்சி முறை' உருவாக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்தகைய அணுகுமுறை மட்டுமே பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநிறுத்துவதுடன், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட நீண்டகால அநீதிக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினரின் சந்திப்பு மற்றும் முதலமைச்சரின் இந்த கடிதப் போக்குவரத்து ஆகியவை, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஒரு புதிய ஜனநாயகப் போரைத் தொடங்கியுள்ளன. இந்திய அரசின் முனைப்பான நடவடிக்கை, ஒரு புதிய விடியலை ஈழத்தமிழர்களுக்குத் தருமென உறுதியாக நம்பலாம்.
அதற்கான உழைப்பும், தொடர்தேச்சியான அணுகலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. தமிழகத்தின் ஊடான இந்திய மத்திய அரசுக்கான அழுத்தமளிக்கும் தந்திரோபாயம் வெற்றிபெறுகிறதோ இல்லையோ அவை உயிர்ப்புடன் நீடிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!