நாட்டின் சிறைச்சாலைத்துறை இன்று கடுமையான மனிதநேய மற்றும் நிர்வாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிரமான போதைப்பொருள் ஒழிப்பு சோதனைகள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகள் தெருக்களில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவினாலும், அதன் நேரடித் தாக்கம் சிறைச்சாலைகளின் கொள்ளளவை மீறி, கைதிகளின் எண்ணிக்கையை ஆபத்தான நிலைக்கு உயர்த்தியுள்ளது.
அண்மையில் நீர்கொழும்புச் சிறைச்சாலையில் பதிவான வன்முறைகளும் கலவரங்களும், இந்த 'அதிகரித்த நெரிசல்' எவ்வாறு கைதிகளின் அடிப்படை மனித உரிமைகள், சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.
இந்த நிலைமையை வெறும் உள்கட்டமைப்பு விரிவாக்கத்தால் மட்டும் இந்த நெருக்கடியை நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது என்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது; மாறாக, குற்றவியல் நீதித்துறையில் ஆழமான கொள்கை மாற்றம் அவசியமாகிறது.
சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல பில்லியன் ரூபாக்கள் செலவில் பாரிய உள்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டங்களை அவசரமாக மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை, புதிய சிறைச்சாலை வளாகங்களை உருவாக்குவதையும் தற்காலிகக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, பல்லேகல சிறைச்சாலையை ஊழியர் குடியிருப்புகள் உள்ளடங்கலாக 1.78 பில்லியன் ரூபா செலவில் புதிய கைதிகள் தங்குமிட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லன்சேன வளாகத்தில் கைதிகளின் பயன்பாட்டிற்காக புதிய இரண்டு மாடி கட்டடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மகர சிறைச்சாலையில் 22.5 மில்லியன் ரூபாய் செலவில் கிடங்கு வளாகம் முடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக கட்டுமானங்களுக்காக 61 மில்லியன் ரூபா முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு வெலிக்கடை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் தலைநகரின் நெரிசலைக் குறைக்க தற்காலிகக் கட்டமைப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
வெலிசர கடற்படை முகாம் சிறைச்சாலையில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, அதிஉயர் பாதுகாப்பு அறைகளைக் கொண்ட பிரத்தியேகப் பிரிவு தற்காலிகமாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
வத்தரக சிறைச்சாலையில் 2029 ஆம் ஆண்டு வரையிலான நடுத்தர காலத் திட்டத்தின் கீழ் இரு கட்டிடங்களுக்காக 446.9 மில்லியன் ரூபாவும், 2027 இல் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட விளக்கமறியல் பிரிவுக்காக 1.77 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாரியபொல மற்றும் இதர மாவட்டங்களில் வாரியபொல சிறைச்சாலை விரிவாக்கத்திற்கு 4.62 பில்லியன் ரூபாவும், குருவிட்டவின் கழிவுநீர்த் தொகுதி மேம்பாட்டிற்கு 288 மில்லியன் ரூபாவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், மாத்தறை சிறைச்சாலையை 2029க்குள் கொட்டாவில பகுதிக்கு மாற்ற 5.18 பில்லியன் ரூபாயும், கொழும்பு முதன்மைச் சிறையை ஹொரணையின் மில்வெல பகுதிக்கு மாற்ற ஆரம்பகட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த புள்ளிவிபரங்கள் காட்டும் பில்லியன் கணக்கிலான நிதிச் சுமை, தற்போதைய நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துவதுடன், அரசாங்கம் 'சிறைபிடித்தல் மற்றும் உள்கட்டமைப்பை பெருக்குதல்' என்ற பாரம்பரிய அணுகுமுறைக்கே முன்னுரிமை அளிப்பதையும் காட்டுகிறது.
புதிய சிறைச் சாலைகளைக் கட்டுவது தற்காலிகமாக மூச்சுவிட உதவலாமே தவிர, அது ஒருபோதும் நீண்டகாலத் தீர்வாகாது. குற்றவியல் மற்றும் சிறைச்சாலை ஆய்வுகளின்படி, 'சிறைகளை விரிவுபடுத்த விரிவுபடுத்த, கைதிகளின் எண்ணிக்கையும் விரிவடையும்' என்ற கோட்பாடு உண்மையாகிவிடும். இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகிறது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது 'பயன்படுத்துபவர்களையும்' 'கடத்துபவர்களையும்' ஒரே தராசில் வைத்து சிறையிலடைப்பதே ஆகும். விளக்கமறியலில் வைக்கப்படும் சாதாரண போதைப்பொருள் நுகர்வோரால் சிறைகள் நிரம்பும்போது, அது பாரிய குற்றவாளிகளைக் கண்காணிக்கும் திறனைச் சிறைத் துறைக்குக் குறைத்துவிடுகிறது.
எனவே, உள்கட்டமைப்பை விரிவாக்குவதில் கவனம் செலுத்தும் அதேவேளை, கைதிகளின் எண்ணிக்கையை உள்வரும் புள்ளியிலேயே குறைப்பதற்கான தீவிரமான சட்ட மற்றும் கொள்கை மாற்றங்களை நோக்கி அரசு நகர வேண்டும்.
இலங்கை தனது சிறைச்சாலை நெருக்கடியை எதிர்கொள்ள, சர்வதேச அளவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட சில முக்கிய உத்திகளைத் தனது கொள்கை மாற்றத்தில் உள்ளீர்க்கலாம்
அதில் முதலாவதாக போர்ச்சக்கலின் போதைப்பொருள் தாராளமயமாக்கல் மற்றும் மருத்துவ அணுகுமுறையின்படி, போர்ச்சுகல் 2001 ஆம் ஆண்டில் தனது போதைப்பொருள் கொள்கையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்தது. தனிநபர் பயன்பாட்டிற்கான போதைப்பொருள் வைத்திருப்பதை அவர்கள் குற்றவியல் சட்டப் பட்டியலில் இருந்து நீக்கினர் அதற்குப் பதிலாக, போதைப்பொருள் நுகர்வு என்பது ஒரு 'சுகாதாரப் பிரச்சினை' எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.
போதைப்பொருள் நுகர்வோர் சிறைக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக, உளவள ஆலோசனை, மருத்துவப் புனர்வாழ்வு மற்றும் சமூக விழிப்புணர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். இதன் விளைவாக, போர்ச்சுகலின் சிறைச்சாலை நெரிசல் வியத்தகு முறையில் குறைந்ததோடு, போதைப்பொருள் மரணங்களும் பெருமளவு குறைந்தன. இலங்கையும் போதைப்பொருள் நுகர்வோரை குற்றவாளிகளாகப் பார்க்காமல், நோயாளிகளாகப் பார்த்து புனர்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை உருவாக்க வேண்டும்.
இரண்டாவதாக, ஸ்காண்டிநேவிய நாடுகளின் புனர்வாழ்வு மற்றும் திறந்த சிறைச்சாலைகள் முக்கிய உதாரணங்களாகின்றன. நோர்வே மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் சிறைகளை 'தண்டனை வழங்கும் இடமாக' கருதாமல், 'மனிதர்களைப் புதுப்பிக்கும் இடமாக' மாற்றியுள்ளன.
அங்குள்ள 'திறந்த சிறைச்சாலை' முறையில், குறைந்த ஆபத்துள்ள கைதிகள் சமூகத்துடன் இணைந்த சூழலில் வாழ்கின்றனர், கல்வி கற்கின்றனர், தொழில் பழகுகின்றனர். சிறைக்காவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களாக இல்லாமல், வழிகாட்டிகளாகச் செயற்படுகின்றனர். இதனால் அங்கு குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வீதம் உலகிலேயே மிகக் குறைவாக 20மூ க்கும் கீழ் உள்ளது. இலங்கையில் தற்போதுள்ள வத்தரக போன்ற திறந்த சிறைச்சாலை மாதிரிகளை இன்னும் பரவலாக்க வேண்டும்.
மூன்றாவதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மாற்றுத் தண்டனை முறைகளை கவனத்தில் கொள்ள முடியும். பல மேற்கத்திய நாடுகள் சிறிய குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை விதிப்பதைத் தவிர்த்து, அதற்குப் மாற்றாகச் சமூகச் சேவை அபராதங்கள் மற்றும் மின்னணு கண்காணிப்பு வலையங்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
இதன் மூலம் கைதி சிறைக்குள் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே தனது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு சமூகப் பொறுப்புடன் தண்டனையை அனுபவிக்க முடியும். இது அரசாங்கத்திற்கு உணவளிக்கும் மற்றும் பராமரிக்கும் செலவைக் குறைக்கிறது.
அதனடிப்படையில் இலங்கை தனது குற்றவியல் நீதித்துறையில் உடனடியாகச் செய்ய வேண்டிய கொள்கை மாற்றங்களாகப் பின்வருவனவற்றை கூறமுடியும்.
சட்டத் திருத்தம் மற்றும் பிணை நடைமுறைகளைச் செய்தல் விடயமாகும். அற்பமான குற்றங்களுக்காகவும், சிறிய அளவு போதைப்பொருள் வைத்திருந்ததற்காகவும் மாதக்கணக்கில் விளக்கமறியலில் வைக்கும் சட்ட நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, பிணை வழங்குவது எளிதாக்கப்பட வேண்டும்.
புனர்வாழ்வு மையங்களின் கட்டாய விரிவாக்கத்தை செய்தல் முக்கியமானது. குறிப்பாக, பில்லியன் கணக்கான ரூபாக்களைப் புதிய சிறைக்கட்;டங்களுக்குச் செலவிடுவதை விடுத்து, அதில் கணிசமான பகுதியை நவீன போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு மையங்களை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும்.
நீதித்துறை தாமதங்களைக் குறைத்தல் மிகவும் அவசியமானது. இலங்கையில் விசாரணைக் கைதிகள் பல வருடங்களாகச் சிறையில் வாடுவது நெரிசலுக்கு முக்கிய காரணியாகும். நீதிமன்ற வழக்குகளைத் துரிதப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இரவு நீதிமன்றங்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தலாம்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!