நாட்டின் நீதித்துறையில் தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும் உயர்த்துதல் உட்பட அனைத்து நீதிபதிகளின் வயதெல்லையை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கான வர்த்தானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த முன்மொழிவானது, நீதித்துறையின் செயற்திறனை அதிகரிக்கும் சாதாரண நிர்வாகச் சீர்திருத்தம் என்ற போர்வையில் முன்வைக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்புச் சிக்கல்களும், நீதித்துறையின் சுயாதீனத்திற்கு ஏற்படும் பேராபத்துகளும் கணிசமாகவே உள்ளன.
நீதிமன்றங்களில் நிலவும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குத் தேக்கத்தைக் குறைப்பதற்கும், தசாப்த கால அனுபவமிக்க சிரேஷ்ட நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கும் இந்த வயதெல்லை அதிகரிப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது என்பதே அரசாங்கத்தின் முதன்மை வாதமாகும்.
மேல்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி தனது நீண்டகாலப் பணியின் மூலம் ஈட்டிய சட்ட அறிவும், சிக்கலான வழக்குகளை ஆராயும் வேகமும் புதிய நியமனங்கள் மூலம் உடனடியாகக் கிடைக்காது என்றும் வாதிக்கப்படுகிறது.
எனினும், ஆழமான சட்டவியல் நோக்கில் ஆராயும்போது, இத்தகைய திடீர் அரசியலமைப்புத் திருத்தங்கள் நீதித்துறையை நிர்வாகத் துறையின் மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஆபத்தை உள்ளடக்கியுள்ளன என்பது தெளிவாகிறது.
நாட்டின் பிரதானப் பிரச்சினையான நீதித்துறைத் தாமதத்திற்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கையெழுத்து முறையிலான பழைய ஆவணப் பராமரிப்பு, நவீன தொழில்நுட்பப் பற்றாக்குறை, ஊழியர்களின் போதாமை மற்றும் நடைமுறைச் சட்டங்களின் காலாவதியான தன்மையே பிரதான காரணங்களாகும்.
இவற்றுக்குத் தீர்வு காணாமல், நீதிபதிகளின் சேவைக் காலத்தை மட்டும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பது, கட்டமைப்புப் பிரச்சினைகளை மூடிமறைக்கும் தற்காலிக தீர்வாகும்.
இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான மற்றும் சட்டரீதியாகத் தவிர்க்க முடியாத முதன்மை அம்சமாக விளங்குவது, ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மாதிரியான தீர்ப்பாகும்.
SC/SD/64-71/2022 என்ற வழக்கில், நீதியரசர்களான புவனேக அலுவிஹார, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற மூவர் கொண்ட அமர்வு வழங்கிய சிறப்புத் தீர்ப்பின் 47 ஆம் பக்கத்தில் மிகத் தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:
'பதவியிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக்காலத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும், நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது ஆக்கிரமிப்பை ஏற்படுத்துவதுடன், அது அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையை மீறுவதாகவும் அமையும். எனவே, இத்தகைய திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக மக்களின் ஒப்புதலையும் பெற வேண்டியது கட்டாயமாகும்.'
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது தற்போதைய அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு மிகப்பெரிய சட்டரீதியான கட்டடமாக நிற்கிறது. பதவியிலிருக்கும் நீதிபதிகளுக்குப் பயன்படும் வகையில், அவர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது என்பது அவர்களுக்கு நிர்வாகத் துறையால் வழங்கப்படும் மறைமுகச் சலுகையாகவோ அல்லது நன்மையாகவோ பார்க்கப்பட வாய்ப்புள்ளது. இது உயர் நீதிமன்றத்தின் 2022ஆம் ஆண்டின் கட்டளைக்கு முற்றிலும் முரணானது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் இந்த நடவடிக்கை இயற்கை நீதியின் அடிப்படை விதிகளுக்கே சவாலாக அமைகிறது. 'நீதிபதிகள் தங்களுக்குச் சாதகமான அல்லது தங்களைப் பாதிக்கும் சட்டங்களில் தாங்களே தீர்ப்பளிக்க முடியாது' எனும் இயற்கை நீதியின் 'நெமோ ஜூடெக்ஸ் இன் காஸா சுவா' (Nemo Judex in Causa Sua) என்ற உலகளாவிய கோட்பாட்டிற்கும், நீதித்துறை முற்றிலும் சுயாதீனமாகத் தொழிற்பட வேண்டும் எனும் அரசியலமைப்பு நெறிமுறைக்கும் நேரடி முரணாக அமைகிறது.
ஒரு சட்டமானது தனிநபர்களைக் குறிவைக்காமல் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றபோதிலும், பதவியிலிருக்கும் நீதிபதிகளுக்கு உடனடி பலனளிக்கும் வகையில் கொண்டுவரப்படும் திருத்தம், நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கும் 'பரிசாகவே' சமூகத்தால் பார்க்கப்படும்.
அரசாங்கம் வாதிடும் 'அவசியத்தேவைக்கோட்பாடு' (Doctrine of Necessity) என்பதை இத்தகைய அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது. ஏனெனில் அவசியத்தேவைக்கோட்பாடு என்பது நாட்டின் சட்டக் கட்டமைப்பு முடங்கும் சூழலில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, சாதாரண நிர்வாகத் தேக்கங்களுக்கு அதைப் பயன்படுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகளைச் சிதைத்துவிடும்.
நீதிபதிகளின் பதவிக்காலம் அல்லது ஓய்வுபெறும் வயது என்பது அரசியலமைப்பினால் வழங்கிப் பாதுகாக்கப்பட்ட அரணாகும். நிறைவேற்று அதிகாரமோ அல்லது பாராளுமன்றமோ தங்களின் அரசியல் விருப்பத்திற்கு ஏற்ப, தேவைப்படும் நேரங்களில் அரசியலமைப்பைத் திருத்தி நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முற்பட்டால், அது எதிர்காலத்தில் நீதித்துறையை அரசியலாக்கும் ஆபத்தான முன்மாதிரியை உருவாக்கிவிடும்.
தற்போது தங்களுக்குச் சாதகமான சூழலில் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் ஒரு அரசாங்கம், நாளை தங்களுக்கு விருப்பமில்லாத நீதிபதிகளைப் பதவியிலிருந்து அகற்றவோ அல்லது தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவதற்காக குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு மட்டும் சலுகைகளை வழங்கவோ இத்தகைய வழிகளைப் பயன்படுத்தக் கூடும். இது ஜனநாயகத்தின் தூண்களான நிறைவேற்று துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றிற்கு இடையிலான 'தடுப்புகளும் சமப்படுத்தல்களும்' (Checks and Balances) இனது உயிர்நாடியையே ஆபத்தான நடவடிக்கையாகும்.
மேலும், இந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட விதம் மற்றும் அதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் கடுமையாக விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும். நீதித்துறை சார்ந்த இத்தகைய உயர்மட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்போது, அது நீதித்துறை தலைமைகள், நீதித்துறை சேவை ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களுடன் பரந்துபட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டே தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஆனால், எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி, சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் அமைப்புகளின் கருத்துக்களைப் புறந்தள்ளி, நிறைவேற்று அதிகாரத்தின் தன்னிச்சையான தீர்மானமாக முன்வைக்கப்பட்டுள்ளமை ஜனநாயகப் பண்புகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் ஒன்றுதிரண்டு இத்திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானமும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் சங்கத்தின் எதிர்ப்பும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் லால்விஜேநாயக்கவின் பகிரங்கமான பிரதிபலிப்புக்களும் நீதித்துறைக் கட்டமைப்பிற்குள் நிலவும் பலத்த அச்சத்தை வெளிப்படுத்துகின்றன.
அரசாங்கம் முன்வைக்கும் 'வழக்குத் தாமதம்' என்ற வாதத்திற்குப் பல ஆரோக்கியமான மாற்று வழிகள் உள்ளன. நீதித்துறையில் வெற்றிடமாகவுள்ள உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவது, கீழ் நீதிமன்றங்களில் மேலதிக நீதிபதிகளை நியமிப்பது, மாலை நேர நீதிமன்றங்களை இயக்குவது, மற்றும் மாற்றுத் தகராறு தீர்ப்பு முறைகளான இணக்கசபைகளை வலுப்படுத்துவது போன்றவை உடனடிப் பலன்களைத் தரும்.
அத்துடன், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த டிஜிட்டல் மயமாக்கல், இலத்திரனியல் ஆவணக் கோப்புகள் (ந-கடைiபெ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது போன்ற உண்மையான சீர்திருத்தங்கள் நிலுவையில் இருக்கையில், அரசியலமைப்பைத் திருத்தி பதவியிலிருக்கும் நீதிபதிகளின் வயதை உயர்த்துவது மட்டுமே ஒரே தீர்வு என்று வாதிடுவது நியாயமற்றது. மனிதவளத்தை மட்டும் நீடித்துவிட்டு உட்கட்டமைப்பைப் புறக்கணிப்பது தூரநோக்கமற்ற செயற்பாடாகும்.
உயர் நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டின் தீர்ப்பை அலட்சியப்படுத்தி, சர்வஜன வாக்கெடுப்பைப் புறந்தள்ளி, பாராளுமன்றப் பெரும்பான்மையை மட்டும் வைத்துக்கொண்டு இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயலுமானால், அது நாட்டின் அரசியலமைப்பு ரீதியான ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் (Rule of Law) பேரடியாக அமையும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!