இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியலிலும், தெற்காசியாவின் வர்த்தகப் பாதைகளிலும் இந்தியா-இலங்கை இடையிலான தரைவழி இணைப்பு (பாலம் அமைக்கும் திட்டம்) மீண்டும் ஒரு பிரதான பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்க மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையிலான இத்திட்டம் அவசியமானது மட்டுமன்றி, அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
இத்திட்டத்தை மேலும் தாமதிப்பதற்கான காலம் கடந்துவிட்டது என்ற அவரது வலியுறுத்தல், கொழும்பு அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலமாகப் பேசப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு 5 பில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அச்செலவை முழுமையாக ஏற்க இந்தியா தயாராக இருக்கிறது.
இலங்கையின் முன்னாள் துணைத்தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே தனது பிரியாவிடை நிகழ்வில் குறிப்பிட்டது போல, இந்தியாவின் 'அயலகத்துக்கு முதலிடம்' கொள்கையின் கீழ், இலங்கையின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுபீட்சம் என்பன இந்தியாவின் ஸ்திரத்தன்மையுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
இந்த தரைவழி இணைப்பு என்பது இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை அள்ளித்தரக்கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக அமையக்கூடும் என்பது அவரது நிலைப்பாடாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில், இத்தரைவழி இணைப்பானது அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இருக்காத அளவிலான பொருளாதார நன்மைகளையும் அபிவிருத்திப் பாய்ச்சலையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
தற்போதைய சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து என்பது விமானம் மற்றும் கடல்வழிகள் மூலமாக மட்டுமே, அதிக செலவுடனும் காலதாமதத்துடனும் சாத்தியமாகிறது. ஆனால், ஒரு தரைவழிப் பாதை உருவாக்கப்படும் பட்சத்தில், மிகக் குறைந்த செலவில், குறுகிய நேரத்தில், தடையற்ற சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்து சாத்தியமாகும்.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதார சந்தையான இந்தியாவை, இலங்கை மிக எளிதாக, நினைத்த நேரத்தில் அணுகும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகும்.
இலங்கையின் உள்ளூர் உற்பத்தியாளர்கள், விவாசயிகள் மற்றும் சிறுதொழில் முனைவோர் தங்களின் தயாரிப்புகளை இந்தியாவின் தென்னக மாநிலங்கள் ஊடாக ஒட்டுமொத்த இந்தியச் சந்தைக்கும் எவ்வித விநியோகத் தடைகளுமின்றி கொண்டு சேர்க்க முடியும்.
இது இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பல மடங்கு அதிகரிப்பதுடன், நாட்டின் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறைக்கும் ஒரு நிலையான தீர்வாக அமையும்.
பொருளாதார ரீதியாக இலங்கை எட்டக்கூடிய மற்றொரு மிகப்பெரிய நன்மை அதன் சுற்றுலாத்துறையின் அசாத்திய வளர்ச்சியாகும். இலங்கையின் தேசிய வருமானத்தில் சுற்றுலாத்துறை தூணாக விளங்கும் நிலையில், இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
தரைவழிப் பாலம் அமைக்கப்படும் போது, இந்தியாவின் நடுத்தர வர்க்க மற்றும் ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் தங்களின் சொந்த வாகனங்கள் மூலமாகவோ அல்லது சொகுசுப் பேருந்துகள் மூலமாகவோ மிகக் குறைந்த செலவில் இலங்கைக்கு வரத் தொடங்குவர்.
இது இலங்கையின் ஹோட்டல் தொழில், போக்குவரத்து, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரத் தொழில்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையிலும் இது பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
கொழும்புத் துறைமுகத்தை ஒரு பிராந்திய மறுஏற்றுமதி மையமாக இந்தியா ஏற்கனவே பயன்படுத்தி வரும் நிலையில், தரைவழி இணைப்பு இச்செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து வரும் சரக்குகள் தரைவழியாக மன்னார் ஊடாக கொழும்புத் துறைமுகத்தை அடைந்து, அங்கிருந்து சர்வதேச நாடுகளுக்கு விரைவாகச் செல்ல முடியும். இது இலங்கையை சர்வதேச வர்த்தக வரைபடத்தில் தவிர்க்க முடியாத ஒரு மையப்புள்ளியாக மாற்றும்.
இருப்பினும், இத்தகைய பிரம்மாண்டமான பொருளாதார நன்மைகளைத் தாண்டி, இந்தியா இத்திட்டத்திற்கு இவ்வளவு அவசரம் காட்டுவதற்கும், 5 பில்லியன் டொலரை முழுமையாக முதலீடு செய்ய முன்வருவதற்கும் பின்னால் வலுவான மூலோபாய மற்றும் இராஜதந்திர காரணங்கள் உள்ளன.
இலங்கையின் சிறிய பரப்பளவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட சனத்தொகையோ இந்தியாவிற்குப் பெரியதொரு நுகர்வோர் சந்தை லாபத்தைத் தந்துவிடப் போவதில்லை.
ஆனால், இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் மூலோபாயத் தலையீடுகளும் முதலீடுகளும் இந்தியாவிற்குப் பெரும் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை வணிக ரீதியாகப் பார்த்து இந்தியா நிராகரித்த தவறைப் பயன்படுத்திக் கொண்ட சீனா, அதனை 99 ஆண்டு காலக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட பல மூலோபாய உள்கட்டமைப்புகளை சீனா தன்வசப்படுத்தியது. இந்தச் சீன ஆதிக்க அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் நிரந்தரமாக வைத்திருக்கவும் இந்தியா முற்படுகிறது.
இந்தத் தரைவழிப் பாலத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான புவியியல் மற்றும் உள்கட்டமைப்புப் பிணைப்பை உறுதி செய்வதே இந்தியாவின் தொலைநோக்குத் திட்டமாகும்.
ஆனால், கொழும்பு அரசியல் மட்டத்திலும் தென்னகச் சமூகத்திலும் இத்திட்டம் ஒரு முள்ளாகவே பார்க்கப்படுகிறது. இலங்கையில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அரசாங்கத்தைத் தாண்டி பிரதான பௌத்த பீடங்களும், கத்தோலிக்க திருச்சபையும் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
நாட்டின் சனத்தொகையில் 77 சதவீதத்திற்கும் அதிகமானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மதப் பீடங்கள், இத்திட்டத்தைக் கடுமையான தேசியப் பாதுகாப்பு அச்சத்துடன் அணுகுகின்றன. மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை போன்றோர், இப்பாலாமானது இலங்கையின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளனர்.
இலங்கை தீவாக இருப்பதாலேயே அதன் பாதுகாப்பு இயல்பாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தரைவழிப் பாதை திறக்கப்பட்டால் போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அதிகரித்து நாட்டின் தேசியப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
மேலும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் இத்திட்டத்தின் மூலம் இலங்கையின் அணிசேரா வெளியுறவுக் கொள்கை பாதிக்கப்பட்டு, நாடு இந்தியாவின் ஒரு மாகாணமாக அடிமைப்பட்டுவிடும் என்ற அரசியல் அச்சத்தை மக்கள் மத்தியில் விதைக்கின்றன. வடக்கில் தமிழ் பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கும் இது வழிவகுக்கும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும், இந்தத் தேசியப் பாதுகாப்பு சார்ந்த அச்சங்கள் பல சமயங்களில் மிகைப்படுத்தப்பட்டவையாகவும் வரலாற்று ரீதியான பயங்களின் எச்சங்களாகவும்வே தெரிகின்றன.
நவீன தொழில்நுட்ப யுகத்தில், போதைப்பொருள் கடத்தலோ அல்லது சட்டவிரோத ஊடுருவல்களோ கடல்வழியாகவே தடையின்றி நடக்கும் போது, கடுமையான சுங்க மற்றும் இராணுவக் கண்காணிப்புடன் கூடிய சர்வதேச தரைப்பாலத்தின் மூலம் அவை அதிகரிக்கும் என்று கூறுவது தர்க்கரீதியானது அல்ல.
மேலும், வரலாற்று ரீதியாக இலங்கை ஒரு நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவே முதலில் கரம் கொடுத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது பிரிவினைவாதம் ஒரு எல்லைக்கு மேல் வளர்ந்து நாடு பிளவுபடுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
எனவே, தரைப்பாலம் அமைந்த பின்னர் இலங்கையில் ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறும் என்பதால், இந்தியா இலங்கையின் பாதுகாப்பில் கூடுதல் பொறுப்புடனேயே நடந்துகொள்ளும்.
பௌத்த பீடங்களினதும் தென்னிலங்கை சக்திகளினதும் எதிர்ப்பிற்குப் பின்னால் இருப்பது 'இந்தியா ஒரு ஆக்கிரமிப்புச் சக்தி' என்ற வரலாற்று ரீதியான அச்சமே தவிர வேறில்லை.
பண்டைய காலம் தொட்டு இந்தியாவில் இருந்து நிகழ்ந்த படையெடுப்புகளின் வரலாற்று வடுக்கள் இந்த மனோநிலையை உருவாக்கியுள்ளன. இந்த உளவியல் ரீதியான அச்சத்தைப் போக்காமல், வெறும் பொருளாதாரக் காரணங்களை மட்டும் கூறி இத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
இந்தியா-இலங்கை தரைவழி இணைப்பு என்பது வெறும் சிமெண்ட்டினாலும் இரும்பினாலும் கட்டப்படும் ஒரு பாலம் அல்ல. அது இரு நாடுகளின் எதிர்காலப் பொருளாதார மற்றும் மூலோபாய விதியை இணைக்கும் இராஜதந்திரப் பாலமாகும்.
எரிசக்தித் தளம், எண்ணெய் குழாய்வழித் திட்டம் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் நவீனமயமாக்கல் போன்றவற்றுடன் இத்தரைவழி இணைப்பும் இணையும் போது, இலங்கை ஆசியாவின் ஒரு முக்கிய பொருளாதார மையமாக மாறும் வாய்ப்பைப் பெறும்.
அதேநேரம், இந்தியா தனது அண்டை நாட்டின் இறையாண்மையையும், மத மற்றும் கலாசார உணர்வுகளையும் மதிப்பதைச் செயலில் நிரூபித்து, இலங்கை மக்களின் மனதில் உள்ள ஆக்கிரமிப்பு பயத்தைப் போக்க வேண்டும்.
இருதரப்பு கரிசனைகளும் அறிவியல் பூர்வமாகவும் வெளிப்படையாகவும் தீர்க்கப்படும் பட்சத்தில், இத்தரைவழிப் பாலம் இலங்கைக்கு ஒரு பொருளாதார வரப்பிரசாதமாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!