நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல், சர்வதேச அரசியல் கொந்தளிப்புகளுக்கும் உள்நாட்டு நிர்வாகக் கொள்கைகளுக்கும் இடையிலான கடுமையான போராட்டக் களமாக மாறியிருக்கிறது.

நுவரெலிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட எண்கள், நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 6 மடங்காக அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி புள்ளிவிவரக் குண்டை வீசியுள்ளார்.

எனினும், அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், மத்திய வங்கி மற்றும் பொருளியல் வல்லுநர்களின் உத்தியோகபூர்வத் தரவுகளை ஆழமாக ஆராயும்போது, இந்த விவகாரத்தில் உண்மையான பொருளாதார அழுத்தங்களைத் தாண்டி, அரசியல் ரீதியான மிகைப்படுத்தல்களும், முரண்பட்ட கருத்துகளும் மலிந்து கிடப்பது தெளிவாகப் புலனாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உலகளாவிய யதார்த்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த போரின் நேரடி விளைவாக, சர்வதேச எரிசக்தி சந்தை பெரும் ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளது.

மே மாத சர்வதேச எரிசக்தி முகமையின், அறிக்கை எச்சரித்திருப்பது போல, மத்திய கிழக்கில் தற்காலிக அமைதி திரும்பினாலும் கூட, இந்த ஆண்டுக்கான உலகளாவிய எண்ணெய்த் தேவையை முழுமையாக ஈடு செய்ய முடியாது.

இதன் காரணமாக எரிபொருள் விலை உயர்வு என்பது இந்த ஆண்டு முழுவதும் தீராத ஒரு சர்வதேசப் பிரச்சினையாகவே நீடிக்கப் போகிறது. உள்நாட்டுப் பொருளாதாரப் பலவீனங்கள் காரணமாக, இலங்கைக்கு இதன் தாக்கம் அடுத்த ஆண்டிலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

 

ஆனால், இந்த உலகளாவிய நெருக்கடியை அரசாங்கம் கையாளும் விதத்திலும், அது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் புள்ளிவிவரங்களிலும் தான் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமாரவின் கூற்றுப்படி, பெப்ரவரியில் 98 மில்லியன் டொலராக இருந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு, மார்ச்சில் 216 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 368 மில்லியன் டொலராகவும் உயர்ந்து, மே மாதத்தில் 522 மில்லியன் டொலரை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பெப்ரவரியின் 98 மில்லியனுடன் மே மாதத்தின் 522 மில்லியனை ஒப்பிட்டு, செலவு '6 மடங்கு' அதிகரித்து விட்டதாக அரசாங்கம் அச்சமான நிலையை உருவாக்குகிறது.

ஆனால், மத்திய வங்கியின் கடந்தகாலத் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதிச் செலவு 4 பில்லியன் டொலராக இருந்தது.

அதாவது, மாதம் ஒன்றுக்கு சராசரியாக 333 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, பெப்ரவரி மாதத்தில் வெறும் 98 மில்லியன் டொலருக்கு மட்டுமே எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டிருப்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில், பெப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட உலகளாவிய மோதல் சூழலில், நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கமே திட்டமிட்டு எரிபொருள் கொள்வனவைக் குறைத்திருந்தது என்பதுதான் இதன் பின்னாலுள்ள உண்மை.

அதன் விளைவாகவே அப்போது நாடு தழுவிய ரீதியில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடும் நீண்ட வரிசைகளும் உருவாயின. அரசாங்கம் ஒன்றரை மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகக் கூறி, மக்களின் அதீத நுகர்வே தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனப்பழியை மக்கள் மீது சுமத்தியது.

ஆனால், பெப்ரவரியின் குறைந்த கொள்வனவினால் ஏற்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா மற்றும் சீனாவின் நிதியுதவியுடன் கூடுதல் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் செலவிடப்பட்ட 368 மில்லியன் டொலர் என்பது, 2025 இன் மாதாந்த சராசரியான 333 மில்லியன் டொலருடன் ஒப்பிடும்போது, அரசாங்கத்திற்கு தாங்க முடியாத மாபெரும் சுமையோ அல்லது அதீத வளர்ச்சியோ அல்ல. எனவே, பெப்ரவரியின் திட்டமிட்ட கொள்வனவுக் குறைப்பை அடித்தளமாக வைத்து, 6 மடங்கு செலவு உயர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறுவது, சர்வதேச நெருக்கடியைக் காட்டி தனது நிர்வாகத் தொய்வுகளை மறைப்பதற்கான ஒரு தந்திரோபாய மாய பிம்பமே அன்றி வேறில்லை.

மறுபுறம், நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பும், நாணய மதிப்பின் வீழ்ச்சியும் கவலையளிக்கும் வேகத்தில் நகர்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் 6 பில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு கையிருப்புச் சொத்துக்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் 7 பில்லியன் டொலரைத் தாண்டியது.

எனினும், பெப்ரவரியில் 7.2 பில்லியன் டொலராக இருந்த கையிருப்பு, ஏப்ரல் முடிவில் 6.759 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 2024 இல் 289 ரூபாவாக இருந்த நிலையில், 2026 ஏப்ரல் பாதியில் 330 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

41 ரூபா வரையான இந்த வீழ்ச்சிக்கு சர்வதேச சந்தையில் டொலரின் மதிப்பு அதிகரிப்பதே காரணம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வாதிட்டாலும், உள்நாட்டில் தாராளமயமாக்கப்பட்ட இறக்குமதிப் பொருளாதாரமும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

முன்னைய அரசாங்கங்கள் நாட்டின் டொலர் இருப்பைத் தக்கவைப்பதற்காக வாகன இறக்குமதியைக் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன.

ஆனால், தற்போதைய அரசாங்கம் சுங்க வரி மற்றும் இறக்குமதித் தீர்வுகள் மூலம் குறுகிய கால வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், வாகன இறக்குமதிக்கான தடைகளைத் தளர்த்தியது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அதுகோரல சுட்டிக்காட்டுவது போல, 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 4.48 பில்லியன் டொலராக இருந்த ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவு, 2026 இன் முதல் மூன்று மாதங்களில் 5.77 பில்லியன் டொலராகப் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதில் வாகன இறக்குமதிக்கு மட்டுமே கடந்த ஆண்டில் 1.6 பில்லியன் டொலரும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 460 மில்லியன் டொலரும் செலவிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதித் தளர்வால் பெருமளவிலான டொலர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும், உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்ததும் தற்போதைய நாணய வீழ்ச்சிக்கும் வர்த்தகப் பற்றாக்குறைக்கும் பிரதான உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

இந்தத் தீவிரமடைந்து வரும் டொலர் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் கடந்த மே 15 முதல் அமலுக்கு வரும் வகையில், குறிப்பிட்ட வகை மோட்டார் வாகனங்களின் சுங்க இறக்குமதி வரியின் மீது தற்காலிகமாக 50 சதவீத மேலதிகக் கட்டணத்தை அவசர வர்த்தமானி மூலம் விதித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து, தொழில் அமைச்சரும் நிதித்துறை பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ அளித்துள்ள விளக்கம் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளால் டொலரின் மதிப்புக்குக் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கவும், தேவையற்ற வாகன இறக்குமதிகளைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட மக்களை ஊக்குவிக்கவும் இந்த வரி விதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

மேலும், இந்த வரி அதிகரிப்பு ஒட்டுமொத்தமாக 115 சதவீத வரி உயர்வையே ஏற்படுத்தும் என்றும், சந்தையில் வாகனங்களின் விலை 150 சதவீதம் உயரும் எனப் பரப்பப்படும் செய்திகள் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாழ்வாதாரத் தொழில் வாகனங்களுக்கு இந்த வரி எவ்வகையிலும் பொருந்தாது என்ற அரசின் அறிவிப்பு நடுத்தர மக்களுக்குச் சற்றே ஆறுதலளிப்பதாக இருந்தாலும், கொள்கை வகுப்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் தீர்க்கதரிசனமின்மையையே இது காட்டுகிறது.

முதலில் இறக்குமதியைத் திறந்துவிட்டுவிட்டு, பின்னர் டொலர் கரையும் போது அவசரமாக வரியை உயர்த்துவது முறையான நிதியியல் முகாமைத்துவமாகாது. அரசாங்கத்தின் இத்தகைய முரண்பட்ட புள்ளிவிவர அரசியல், மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பொருட்களின் மீதான விலையேற்ற அச்சத்தை மேலும் தூண்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் டீசலை 600 ரூபாவிற்கு விற்க வேண்டிய நிலை இருப்பதாக ஜனாதிபதி அநுர கூறிய சில நாட்களில் சந்தையில் அதன் விலை 392 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

தற்போது ஒரு லீற்றர் டீசலின் உண்மையான சந்தை விலை 720 ரூபா என்றும், அதற்கு அரசாங்கம் 100 ரூபா மானியம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுவது, எதிர்காலத்தில் டீசல் விலையை மேலும் பாரியளவில் உயர்த்துவதற்கான அபாய சமிக்ஞையா என்ற நியாயமான சந்தேகத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில் இலங்கையில் ஒரு லீற்றர் டீசல் 279 ரூபாவாக விற்கப்பட்ட போது, சர்வதேச சந்தையில் அதன் விலை 1.20 டொலராக இருந்தது. தற்போது அது 1.58 டொலராக, அதாவது 31.6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

ஆனால் உள்நாட்டில் பெப்ரவரியை விட தற்போது 36 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு 392 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. சர்வதேச விலை உயர்வை விட உள்நாட்டு விலை உயர்வு அதிகமாக இருக்கும் போது, அரசாங்கம் கூறுவதாகச் சொல்லும் 100 ரூபா மானியம் எங்கே செல்கிறது என்ற பொருளியல் ரீதியான கேள்விக்கு அரசாங்கத்திடம் தெளிவான பதிலில்லை.

டொலரின் மதிப்பு உயர்வால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதும், அதனால் தேசிய மட்டத்தில் பணவீக்கம் மீண்டும் தலைதூக்குவதும் நாட்டின் தொழில்துறை, சேவைத்துறை மற்றும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேரழிவிற்குள்ளாக்கும் எனப் பேராசிரியர் வசந்த அதுகோரல எச்சரிப்பது முற்றிலும் உண்மையானதே.

சர்வதேசப் போர்ச் சூழலும்,சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களும் இலங்கையின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளாக இருந்தாலும், உள்நாட்டு நிதியியல் முகாமைத்துவத்தில் நிலவும் முரண்பாடுகளை அரசாங்கம் மூடிமறைக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டுகளைப் பெற்றுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் அதே வேளையில், உள்நாட்டில் மக்களுக்குப் புள்ளிவிவரங்கள் மூலம் அச்சமூட்டி, தனது கொள்கை ரீதியான தவறுகளை சர்வதேசக் காரணிகளுக்குள் மறைக்க முற்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.

உண்மையான பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்ட வேண்டுமாயின், மாய பிம்பங்களை உருவாக்குவதை விடுத்து, வெளிப்படையான தரவுகளுடன், முறையான நீண்டகால இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.