இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் என்பது அமைதி, பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஒப்பிட முடியாத அடையாளமாகவே உலக அரங்கில் பார்க்கப்பட்டு வந்தது.

பிராந்தியமாக ஐரோப்பா கண்டம் அடைந்த பொருளாதார வளர்ச்சியும், ஜனநாயக விழுமியங்களும் உலகின் பிற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக முன்வைக்கப்பட்டன.

ஆனால், அண்மைய நாட்களில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பிரதான வீதிகளில் மேலெழுந்துள்ள மக்கள் கொந்தளிப்புகளும், தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டங்களும் ஐரோப்பாவின் அந்தப் பளபளப்பான பிம்பத்தைக் கலைத்துள்ளன.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்புச் சீரழிவு, உயர்கல்விக் கட்டணங்களின் தொடர்ச்சியான உயர்வு, போதிய ஆசிரியர்கள் இன்மை மற்றும் அடிப்படை வசதிகளின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் புதிய 'ஜென்-ஷp' தலைமுறை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டங்கள், விரைவாகவே ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் காட்டுத்தீ போலப்பரவின.

இப்போராட்டங்கள் வெறும் கல்வித்துறையின் சீர்திருத்தக் கோரிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், விண்ணை முட்டும் வாழ்க்கைச் செலவு, தாங்க முடியாத வீட்டு வாடகை, வேலையின்மை மற்றும் இளைய தலைமுறையின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகிய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு எதிரான பாரிய மக்கள் எழுச்சியாகப் பரிணமித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் தற்போதைய இந்த ஆழமான நெருக்கடிக்கு அவசியமான பொருளாதாரக் காரணிகளும் சிக்கலான வர்க்கப் பிரச்சினைகளும் அடிப்படையாக அமைந்துள்ளன.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி, விநியோகத் தடைகள், கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முன்னெடுக்கும் கடுமையான வரவு,செலவுத் திட்ட சுருக்க நடவடிக்கைகள் போன்றவை சாதாரண மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன.

குறிப்பாக, ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பிரதான நகரங்களில் நிலவும் கடுமையான வீட்டுவசதி நெருக்கடியினால் நடுத்தர வர்க்கத்தினரும், பல்கலைக்கழகங்களை விட்டுவெளியேறும் இளைஞர்களும் வாடகை கொடுக்க முடியாமலும், சொந்தமாக வீடு வாங்க முடியாமலும் வீதிகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மாணவர்கள் மட்டும் ஏந்திய பதாகைகள், மிகக் குறுகிய காலத்திற்குள் தொழிற்படைக் தொழிற்சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கோரிக்கைகளுடன் கைகோர்க்கத் தொடங்கின.

குறிப்பாக, பிரான்ஸில் நடைபெற்ற மாபெரும் பேரணிகளில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் திரண்டமை, இப்போராட்டம் வெறும் மாணவர்களின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல, அது ஐரோப்பியச் சமூகத்தின் அடிமட்டத்தில் பல ஆண்டுகளாகக் கொதித்துக்கொண்டிருக்கும் வர்க்கக் கொந்தளிப்பின் நேரடி வெளிப்பாடு என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

 

ஆரம்பத்தில் முற்றிலும் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடங்கப்பட்ட இப்போராட்டங்களின் களம், காலப்போக்கில் பல்வேறு தீவிரவாத மற்றும் விளிம்புநிலை அணியினரின் ஊடுருவலாலும், அவர்களால் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளாலும் தனது நேரிய பாதையிலிருந்து திசைமாறிச் சென்றுள்ளது.

முகமூடி அணிந்த தீவிர அனார்க்கிஸ்ட் அமைப்பினர் (Anarchists), அதீத வலது மற்றும் இடதுசாரி தீவிரவாதக் குழுக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க விரும்பும் சமூக விரோத சக்திகள் இப்போராட்டங்களுக்குள் ஊடுருவி, பொதுச் சொத்துக்களை அடித்துச்சேதப்படுத்துதல், வீதிகளில் நின்ற வாகனங்களுக்குத் தீயிட்டு கொளுத்துதல், வணிக வளாகங்களைக் சூறையாடுதல் மற்றும் கடைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.

மிலான், ரோமா, பாரிஸ், மார்சே மற்றும் லியோன் போன்ற பிரதான ஐரோப்பிய நகரங்களின் பல பகுதிகள் திடீரென கலவர பூமியாக மாறின. இதனால், மாணவர்களின் நியாயமான கல்வி மற்றும் சமூகக் கோரிக்கைகள் ஊடகங்களின் கவனத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டதுடன், வன்முறைச் சம்பவங்களே முதன்மைச் செய்திகளாக மாறிப்போயின.

அரசின் கவனத்தை ஈர்க்க முயன்ற மாணவர்களின் தூய்மையான குரல்கள், இத்தகைய வன்முறைச் செயல்களால் மழுங்கடிக்கப்பட்டு, ஒட்டுமொத்தப் போராட்டத்தின் மீதும் களங்கம் கற்பிக்கப்படும் அபாயகரமான சூழல்களும் உருவாகியுள்ளன.

வன்முறையைக் கட்டுப்படுத்துவது மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவது என்ற பெயரில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுத்த கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள், ஏற்கனவே கொதிநிலையில் இருந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்த மட்டுமே உதவின.

ஐரோப்பிய நாடுகளின் பல பிரதான வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பொலிஸாரையும், கலகத் தடுப்புப் படையினரையும் குவித்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகள், தடிச்சூடு மற்றும் தண்ணீரைப் பீச்சியடிக்கும் அதிநவீன வாகனங்களைப் பயன்படுத்திப் போராட்டங்களை வலுக்கட்டாயமாக அடக்க அரசுகள் முற்பட்டன.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்ததுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். குறிப்பாக, கைது நடவடிக்கைகளின் போது சிறுவர்கள் மற்றும் இளையோர் மீது பொலிஸார் பிரயோகித்த மிதமிஞ்சிய விசை மனித உரிமை அமைப்புகளின் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஐரோப்பிய ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் 'போராட்டம் நடத்தும் உரிமை மற்றும் கருத்துரிமை' அரசாங்கங்களால் திட்டமிட்டு நசுக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகளும் கல்வியலாளர்களும் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசாங்கங்களின் இத்தகைய கடுமையான அடக்குமுறை நகர்வுகள், அரசிற்கும் நாட்டின் இளைய தலைமுறைக்கும் இடையிலான நம்பிக்கையின்மையை மேலும் அதிகரித்துள்ளதுடன், சமூகத்தில் ஒருவிதப் பயங்கரமான பதற்ற சூழலையும் தோற்றுவித்துள்ளது.

ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலவிவரும் இந்த அமைதியின்மையும் தொடர் வன்முறைகளும் அரசியல் ரீதியாகத் தற்போது தீவிர வலதுசாரி கட்சிகளுக்கே மிகவும் சாதகமான களத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன.

சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாகவும், பாரம்பரிய ஐரோப்பியக் கலாசாரம் ஆபத்தில் இருப்பதாகவும் மக்களிடையே அச்சத்தை விதைக்கும் தீவிர வலதுசாரி தலைவர்கள், இப்போராட்டங்களைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தங்களின் அதிகாரத்துவ மற்றும் தீவிர குடியேற்ற எதிர்ப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கல்வித்துறையின் தரம் உயர்வு, வீட்டுவசதிச் சீர்திருத்தம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான ஆக்கபூர்வமான மற்றும் உண்மையான தீர்வுகளை அரசாங்கங்கள் உடனடியாக முன்வைக்கத் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பாரிய அரசியல் பிளவுகளையும், ஈடுசெய்ய முடியாத சமூக சீர்குலைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பது அரசியல் அவதானிகளின் எச்சரிக்கையாக உள்ளது.

ஆகையால், ஐரோப்பா தனது நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தையும், இளைய தலைமுறையின் எதிர்காலத்தையும் ஒருசேரப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், வீதிகளில் இறங்கிப் போராடும் இளைய சமுதாயத்தின் நியாயமான குரல்களுக்குச் செவிசாய்த்து, வன்முறைப் பாதைக்கு அப்பால் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கபூர்வமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவது மட்டுமே தற்போதைய சூழலில் உள்ள ஒரே தீர்வாக அமையும்.

ஆனால், அண்மைய போராட்ட கோசங்களுக்குப் பின்னர் ஆட்சி மாற்றத்தை மையப்படுத்தி தீவிரவாத நிலைமை மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலைமையானது ஐரோப்பாவின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பி நிற்கிறது.