மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான அரசியல் மற்றும் போர் பதட்டங்கள், இலங்கை போன்ற தேசத்தில் பொருளாதாரத்தில் தாராளமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த அமைதியற்ற சூழல் வெறும் செய்திகளோடு நின்றுவிடாமல், இலங்கையின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயம், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் சுற்றுலாத்துறை மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரமான உணவு விநியோகம் ஆகிய துறைகளில் நேரடி அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளன.
ஆரம்பத்தில் இந்த நிலைமையை உலகளாவிய ரீதியிலான தவிர்க்க முடியாதவொரு விடயமாக பார்க்கப்பட்டாலும், தற்போது உள்ளுர் உற்பத்திச் செலவுகள், பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் பயணிகளின் வருகை ஆகியவற்றில் இம்மாற்றங்கள் தெளிவாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
இப்போராட்டம் நீண்ட காலத்திற்குத் தொடருமானால், அது இலங்கையின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் வீட்டுப் பொருளாதாரத்தையும் பாரியளவில் பாதிக்குமென பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விவசாயத் துறையைப் பொறுத்தவரை, தற்போதைய பெரும் போக அறுவடைக் காலத்தில் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிக இயக்கச் செலவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்த் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலைகள் அவ்வப்போது திருத்தப்படுகின்றன.
இது விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கும், விளைச்சலை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும் பெரும் தடையாக உள்ளது. தேசிய விவசாய சங்கங்களின் தகவற்படி, டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களின் வாடகைக் கட்டணங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2,000 முதல் 3,000 ரூபா வரை அதிகரித்துள்ளன.
உதாரணமாக, ஒரு ஏக்கர் நெல் அறுவடைக்கான செலவு 25,000 ரூபாவைத் தாண்டும் நிலை உருவாகியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, உற்பத்திச் செலவுகள் இவ்வளவு வேகமாக உயர்ந்தாலும், சந்தையில் நெல்லுக்கான கொள்வனவு விலை அதே வீதத்;தில் அதிகரிக்கவில்லை.
அரசாங்கம் ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா என்ற உத்தரவாத விலையை அறிவித்திருந்தாலும், போக்குவரத்துச் செலவுகளைக் காரணம்காட்டி இடைத்தரகர்கள் 110 ரூபாவுக்கும் குறைவாகவே கொள்வனவு செய்கின்றனர்.
இறுதியில் இந்த நஷ்டங்கள் அனைத்தையும் விவசாயிகளே சுமக்க வேண்டியுள்ளதுடன், இது எதிர்வரும் மாதங்களில் அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளை நுகர்வோர் மத்தியில் பலமடங்கு உயர்த்த வழிவகுக்கும்.
சுற்றுலாத்துறையில் நிலவும் பாதிப்பு இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பிற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் சர்வதேச பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொள்வதில் அச்சம் காட்டுகின்றனர். இலங்கை உள்வரும் சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் கணிப்புப்படி, இப்பதட்டங்கள் நீடித்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 30 சதவீத வீழ்ச்சி ஏற்படக்கூடும்.
ஏற்கனவே சமீபத்திய தரவுகளின்படி பயணிகளின் வருகை 17 சதவீதத்தால் சரிவடைந்துள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில், இலங்கை பாரம்பரிய சந்தைகளைத் தவிர்த்து இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர புதிய உத்திகளை வகுக்க வேண்டியுள்ளது.
நாட்டின் மீதான நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு சவாலான காரியமாக இருந்தாலும், கியூஆர் குறியீடு போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தடையற்ற சேவைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் நிலைமைகளைச் சமாளிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளில் நிலவும் சிக்கல்கள் மற்றொரு புறம் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. உலகளாவிய விலை ஏற்றங்களை உள்நாட்டு சந்தையில் உடனடியாகப் பிரதிபலிக்கச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அரசாங்கம் மானியங்கள் மூலம் விலைகளைக் கட்டுப்படுத்த முயன்றால், அது நாட்டின் நிதி நிலையைப் பாரியளவில் பாதிக்கும். எரிபொருள் நுகர்வில் பெரும் பகுதியை அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரே பயன்படுத்துவதால், குறைந்த விலையில் எரிபொருளை வழங்குவது ஏழை மக்களை விட வசதி படைத்தவர்களுக்கே அதிக நன்மையைச் சேர்க்கிறது.
எனவே, வெளிப்படையான விலை சூத்திரங்களைப் பின்பற்றுவதும், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் தங்கியிருப்பதைக் குறைத்து சூரிய சக்தி மற்றும் காற்றாலைச் சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நோக்கி வேகமாக நகர்வதும் இலங்கைக்கு தற்போதுள்ள ஒரே தீர்வாகும். இதுவே நாட்டின் நீண்டகால பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழியாகும்.
மத்திய கிழக்கில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் அனுப்பும் பணப்பரிமாற்றம் தற்போது வரை ஒரு ஸ்திரமான நிலையில் இருப்பது பாரிய நிம்மதியைத் தருகிறது. மத்திய வங்கி ஆளுநரின் கருத்துப்படி, போர் சூழலால் இலங்கையர்கள் பெருமளவில் நாடு திரும்பும் நிலை இதுவரை ஏற்படவில்லை என்பதுடன், பண வரவு ஓரளவு அதிகரித்துள்ளது.
இது இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை 7.3 பில்லியன் டொலர் அளவில் பேண உதவுகிறது. இருப்பினும், ஏற்றுமதித் துறையில் பாதிப்புகள் தென்படத் தொடங்கியுள்ளன. இலங்கை தனது மொத்த ஏற்றுமதியில் சுமார் 8 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கே அனுப்புகிறது.
குறிப்பாக டுபாய், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இலங்கையின் தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு முக்கியமான சந்தைகளாகும்.
போர் காரணமாக கப்பல் போக்குவரத்துக்கான காப்புறுதித் தொகையும் , பொருட்களுக்கான கட்டணங்களும் உயர்ந்துள்ளதால், ஏற்றுமதியாளர்களின் இலாப வரம்பு குறைந்துள்ளது. இது சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டில் 10 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை எட்ட வேண்டுமென்ற இலக்குடன் ஏற்றுமதி அபிவிருத்தி சபை செயற்பட்டு வருகிறது.
ஜனவரி-பெப்ரவரி 2026 காலப்பகுதியில் ஏற்றுமதி வருமானம் 2,896 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது ஒரு சாதகமான அறிகுறியாகும். எனினும், மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்படக்கூடிய 5-8 சதவீத ஏற்றுமதி வீழ்ச்சியை ஈடுசெய்ய புதிய பிராந்திய சந்தைகளைக் கண்டறிவது அவசியமாகும்.
குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் நிலவும் போட்டியைச் சமாளிப்பதற்கும், ஆசிய பிராந்தியத்திற்குள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவது போன்ற உடனடி நடவடிக்கைகள் உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல உதவும்.
மத்திய கிழக்கு நெருக்கடியானது இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஒரு புதிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம், சுற்றுலாத்துறையின் மீட்சி, நுகர்வோரின் கொள்வனவுச் சக்தியென அனைத்து நிலைகளிலும் இதன் தாக்கம் உணரப்படுகிறது. உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால், இலங்கை தனது பொருளாதாரத்தை எத்தகைய அதிர்ச்சிகளுக்கும் தாக்குப்பிடிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
இதற்கு சந்தை பல்வகைப்படுத்தல், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி மற்றும் வெளிப்படையான விலை நிர்ணயக் கொள்கைகள் மிகவும் அவசியமாகும். 2026 ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சி ஆண்டாக அமைய வேண்டுமானால், இத்தகைய சவால்களை முன்கூட்டியே கணித்து அதற்குரிய நெகிழ்வான பொருளாதாரத் திட்டமிடலுடன் செயற்படுவதே இலகுவான வழியாகும்.
அரச மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இந்த இக்கட்டான காலத்தைக் கடந்து இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்.

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!