புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தின் ஐந்தாம் இலக்க அறையில் கடந்த 19ஆம் திகதி சஞ்சீவ குமார சமரரத்ன என்ற இயற்பெயரைக்கொண்ட பாதாள உலகக்குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அறியப்பட்டவர் மீது பிரதிவாதிக் கூண்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டு வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை மூன்று வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த12துப்பாகிகள் தரித்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் பிரதிவாதிக்கூண்டில் ஏற்றப்பட்டபோது, அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, கதவுகள் மூடப்பட்டு கதவுகளுக்குப் பின்னால் பொலிஸார் துப்பாக்கிகளுடன் காவல் காத்துக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்த சமயத்தில் சட்டத்தரணிகள் இருக்கையில் இருந்த இளம் சட்டத்தரணி ஒருவர் திடீரென்று எழுந்து பிரதிவாதிக் கூண்டில் நின்றுகொண்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்துவிட்டு அந்தத் துப்பாக்கியையும் அங்கேயே பாட்டுவிட்டு நீதிமன்ற கதவுகளை திறந்து கொண்டு ‘உள்ளே துப்பாக்கிச் சூடு நடக்கிறது, உள்ளே துப்பாக்கிச் சூடு நடக்கிறது’ என்று கூறிக்கொண்டு வெளியே ஓடுகிறார்.
நீதிவான் நீதிமன்ற வளாகமே பெரும் அல்லோலகல்லோலத்துக்கு உள்ளாகியது. சட்டத்தரணி வேடமணிந்து வந்தவரே துப்பாக்கிப்பிரயோம் செய்தார் என்பதும், அவர் கொண்டுவந்த துப்பாக்கி, அதனை மறைத்துவைப்பதற்கு பயன்படுத்திய குற்றவியல் சட்டக்கோவைப் புத்தகம், மற்றும் அவருக்க துணையாக பெண் சட்டத்தரணி வேடமணிந்துவந்த பெண்மணி இஷாரா செவ்வந்தி ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்.
நாடு முழுவதும் பரபரப்பு, படைகளால் சல்லடைபோடப்பட்டு தேடுதல் வேட்டைகள் நடைபெறுகின்றன. ஈற்றில் எட்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் துப்பாக்கிதாரி, புத்தளம் பாலவி பகுதியில் வானொன்;றில் பயணித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்படுகின்றார்.
விசேட அதிரடிப் படையின் புத்தளம் மற்றும் கோனஹேன முகாம்களின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடத்தில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிதாரி, இந்தக் கொலை 15 மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 200,000 ரூபா ஊதியமாக தனக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் சம்பந்தப்பட்ட பெண் துப்பாக்கியை தன்னிடம் கொடுத்த பிறகு, அதை தனது இடுப்புப் பட்டையில் மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், குறித்த பெண்ணை சிறிது காலமாகத் தெரியும் என்றும், அதனால் அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, வாடகை வாகன செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து நீர்கொழும்புக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தன்னை அழைத்துச் செல்ல காரொன்று அவ்விடத்திற்கு வருவதாக கூறிய போதும் அவ்வாறு வாகனங்கள் எதுவும் வராததால் அவ்வாறு செய்ததாகக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார்.
பின்னர் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணுடன் கடை ஒன்றுக்குச் சென்று ஆடைகளை வாங்கியதோடு நீர்கொழும்புக்கு அருகில் இருந்து வாடகைக்கு எடுத்த வானில் கல்பிட்டிக்கு பயணம் செய்து, இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாரானதாகக் கூறியுள்ளார்.
தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் அனைத்தும் அவிஷ்க என்ற குற்றவாளியால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் துப்பாக்கிச் சுடு நடத்தியவர், வெளிப்படுத்தியுள்ளார்.
துப்பாக்கிதாரி பற்றி விபரங்களைப் பார்க்கையில், மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் 27 வயதுடைய சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பயணப் பொதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதேபோல், கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உட்பட சில துப்பாக்கிப் பிரயோகங்களில் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதும், முன்னாள் இரணுவச் சிப்பாய் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர் போதைப்பழக்கத்துக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அடுத்த 48 மணிநேரத்துக்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடைய எண்மர் கைது செய்துள்ளப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்தமை முதல் குற்றம் இடம்பெறுவதற்கு முதல் நாளில் துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் ஹொரணேகாரகே தமிந்து லக்ஷான் என்பவரும் சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிதாரியையும் தப்பிச்சென்ற பெண்ணையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் தமித் அஞ்சன நயனஜித் மற்றும் சமோத் கிமிஹான ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைவிடவும், வான் சாரதி, பொலிஸ் கான்ஸ்டபிள், உடைகளை வழங்கியவர், உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண்மனி இன்னமும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போது இந்தச் சம்பவம் சம்பந்தமான தீவிரமான விசாரணைகளும் தேடுதல்களும் நடைபெறுகின்றன. சிறிலங்காவில் நீதிமன்றங்களில் உள்ள சாட்சிக்கூண்டுகளில் வைத்து கொலை செய்யும் காலாசாரம் இன்று நேற்று ஆரம்பமானது அல்ல.
1990ஆம், ஆண்டு அத்தனகல்ல பிரதேசத்தில் முதன்முதலில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் மீது பிரதிவாதிக் கூண்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் 1996 நீர்கொழும்பு நீதிமன்றிலும், 2004இல் புதுக்கடை நீதிவான் நீதிமன்றின் ஆறாம் இலக்க நீதிமன்றத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதனைவிடவும், நீதிமன்ற வளாகத்திலும், சிறைச்சாலை வாகனங்களிலும், சிறைச்சாலைகளிலும் கூட சந்தேக நபர்களாகவும், குற்றவாளிகளாகவும் அடையாளம் காணப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்
நாட்டில் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை நடைபெற்று அடுத்த 24 மணிநேரத்துக்குள் காலி மீத்தெனிவில் தந்தையொருவரும், ஆறுவது மகள் மற்றும் மகன் ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஜா-எல உஸ்வட்டஹெலியா பகுதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டப் படகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையிலான காலத்தில் 17துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 10சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட பெருங்குற்றங்களுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. இந்த நிலைமைகள் ஏற்படுவதற்கு சட்டம் ஒழுங்கு விடயத்தில அரசாங்கத்தின் அனுபவமின்மை ஓட்டைகளை ஏற்படுத்தி விட்டதோ என்ற கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
தற்போதைய நிலையில், நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட 58 குற்றவியல் குழுக்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவளித்த 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முப்படைகளில் பணியாற்றும் அல்லது சேவையை விட்டு வெளியேறிய நபர்களின் ஆதரவும் பெறப்படுகிறது என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் டுபாய் உள்ளட்ட நாட்டுக்கு வெளியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருந்தகொண்டு தான் உள்ளுர் வலையமைப்புக்களை செயற்படுத்துகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு தகவல்களை திரட்டிக் கொண்டுள்ள பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரால் ஏன் இன்னமும் அவர்களை கைது செயயும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது என்பதும் கேள்வியாகிறது.
நாடாளவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக அடையாளம் காணப்பட்டவர்களை கைது செய்வதொன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் குறித்த நபர்களை அடையாளம் காண்பதற்கு முன்னதாக, பொலிஸார் மற்றும் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் தகவல்களை பரிமாறும் தரப்பினரை அடையாளம் காண வேண்டும்.
அதன் ஊடாகவே பாதாள உலகக்குழுக்கள் மட்டுமல்ல, போதைப்பொருள் வலையமைப்புக்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். உள்நாட்டில் போதைப்பொருள் வலையமைப்புக்களும், பாதாளக்குழுக்களும் இரண்டறக்கலந்துவிட்டன. இவற்றுடன் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் என்று பெரும் கூட்டமே இணைந்து இயங்குகின்றது.
மேற்படி கட்டமைப்புக்களை அகற்றாத வரையில் நீதிமன்ற பிரதிவாதிக்கூண்டில் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களின் நடமாட்டம் கூட அச்சுறுத்தலுக்குள் தான் நடைபெறும்.
ஆகவே, போதைப்பொருள் வலையமைப்புக்கள், மற்றும் பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்தவதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் நிறுவ வேண்டும். அந்தப் பொறிமுறையானது, எந்தவிதமான அழுத்தங்களுக்கும் கட்டுப்படாத வகையில் செயற்படுவதற்கான அரசியல் இயலுமையை நாட்டின் தலைமை கொண்டிருக்க வேண்டும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!