சர்ச்சைக்குரிய Human Immunoglobulin கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் 14 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே , நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்கிரமவால் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் மேலும் ஆறு பேரின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டினார். இதன்படி, சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொதுச் சொத்து சட்டத்துடன் தொடர்புடையவை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது புலனாகின்றது.
இந்நிலையில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம அறிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரொருவர், மேற்படி சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தும்போது, அவர் பிணை வழங்கப்பட வேண்டுமெனில் நீதிமன்றத்தில் விசேட காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள நீதவான், கடந்த வழக்கு விசாரணையின்போது பிணை வழங்குவதற்குரிய விசேட காரணங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் மற்றுமொரு சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்ஷன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இவர் வெளிநாடாமொன்றில் இருந்து நாடு திரும்பியவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இவரும் எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை இவ்வாறு மும்முரமாக நடைபெற்றாலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள பிரதான நபரென கருதப்படும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான வைத்தியர் விஜித் குணசேகரவை இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்ய முடியவில்லை.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!