தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவு இலங்கை பொருளாதாரத்திற்கு ஒரு கடுமையான, பல்முனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தமானது நாட்டின் ஆழமான கட்டமைப்புச் சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், 'மீண்டும் இலங்கையைக் கட்டியெழுப்புதல்' என்ற முன்முயற்சியானது வெறும் சீரமைப்புப் பணிகளைக் கடந்து விரிவான விடயங்களை உள்ளடக்குமாறு மிகத் தெளிவான செய்தியை அளித்துள்ளது.
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, மொத்த பொருளாதார இழப்பு 210 பில்லியனில் இருந்து 320 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று தரவுகள் குறிப்பிட்டுள்ளன. அதனடிப்படையில் பார்க்கின்றபோது இந்த இழப்பானது சுமார் 7 பில்லியன் டொலர்களுக்கு நிகரான மிகப்பெரிய இழப்பாகும்.
இந்த இழப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தில் (நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 40சதவீத பங்களிப்பைச் செய்கிறது) இருந்து கிராமப்புற விவசாய, விளை நிலங்கள் வரை முக்கிய பொருளாதார வழித்தடங்களை சிதைத்துள்ளது.
இந்த சிதைப்பானது, வெறுமனே உள்ளுர் நிவாரணங்களால் மீளமைக்கக் கூடியதொன்று அல்ல. அதுவொரு தேசிய நிதிநிலை சார்ந்த மிகப்பெரிய அதிர்ச்சி மிக்க பின்னடைவாகும். உடனடியாக நிவாரணத்தில் கவனம் செலுத்தப்பட்டாலும், இந்த அனர்த்தம் முக்கிய தேசிய வருமான வழிகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த தளங்களிலும் உணவுப் பணவீக்க அபாயத்தையும் வெகுவாக உருவாக்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக நாட்டின் மீள் கட்டுமானப் பாதையானது, அவசரமானதாக இருந்தாலும் எங்கிருந்து ஆரம்பிப்பது எதில் நிறைவு செய்வது என்ற இடியப்பச் சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது.
உதாரணத்துக்கு விவசாயத்துறையை எடுத்துக்கொண்டால் மிகமோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது, இதன் விளைவுகள் 2026ஆம் ஆண்டுக்கு அப்பாலும் தேசிய உணவுப் பாதுகாப்பில் தாக்கம் செலுத்திக்கொண்டேயிருக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
நாட்டின் முக்கிய நெல் பயிரிடல் காலமான முக்கியமான பெரும்போக பருவத்தில் தித்வா சூறாவளி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் தற்போது வரையில் 108,000 ஹெக்டெருக்கும் அதிகமான நெல் வயல்கள் முழுமையாக அழிந்ததுடன், ஏனைய பயிர்கள் மற்றும் காய்கறி விளைநிலங்களில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முழு நாட்டிற்கும் விநியோகிக்கக் கூடிய வகையில் புதிய விளைபொருட்களின் முக்கிய ஆதாரமாக விளங்கும் உயர்நிலப் பிரதேச காய்கறி விளைநிலங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக, சந்தைகளில் அவற்றின் விலைகளில் உடனடி சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புற குடும்பங்களை வெகுவாகப் பாதிப்பதாக உள்ளது.
அதேபோன்று அறுவடைச் சுழற்சிகளை பெரிதும் நம்பியுள்ள தேயிலை போன்ற ஏற்றுமதிப் பயிர்களும் மண் சரிவுகள், சேதமடைந்த தோட்ட உள்கட்டமைப்பு மற்றும் முக்கியமான உள்ளீடுகளான உரங்களின் போக்குவரத்துக் குறைபாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
இது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் தற்காலிக ஆனால் குறிப்பிடத்தக்க குறைப்பை அச்சுறுத்துகிறது. நெற்செய்கையாளர்களுக்கு ஒரு ஹெக்டெயருக்கு 150,000ரூபா போன்ற அரசாங்கத்தின் உடனடி இழப்பீட்டு உறுதிப்பாடு கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு முக்கிய உயிர் நாடியாகும். இருப்பினும், வெளிநாட்டு நாணய கையிருப்பு ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில், உணவு இறக்குமதிக்கான தேவை அதிகரிப்பது மிக மோசமான பொருளாதார அபாய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி தித்வா சூறாவளி ஏற்படுத்தியுள்ள அனர்த்தமானது, உச்ச சுற்றுலாப் பயணக் காலமான (நவம்பர் முதல் ஜனவரி வரை) தொடங்கும்போதே நிகழ்ந்தேறியுள்ளது. நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய அந்நியச் செலாவணி மீட்சிக்கு முதன்மையான உந்துசக்தியாகக் கருதப்பட்ட சுற்றுலாத்துறைக்கு இந்த அனர்த்தம் குறிப்பிடத்தக்க பின்னடைவைக் ஏற்படுத்தியுள்ளது.
விடேசமாக பெரிய ஹோட்டல்கள் பெரும்பாலும் தொடர்ந்து இயங்கினாலும், மலை நாடு போன்ற முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் வீதிகளின் துண்டிப்பு மற்றும் ரயில் போக்குவரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் காணப்படுகின்ற சவால்கள் சுற்றுலாப் பயணிகளின் அடுத்துவரும்கால பயணத் திட்டங்களை கடுமையாகப் பாதிக்கச் செய்துள்ளது.
இதனால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய சுற்றுலா தளங்களை மாற்றுகின்ற நிலைமைகள் தோன்றிவருகின்ற சூழலில் இத்துறையில் அன்றாட வாழ்வாதாரத்தை எதிர்பார்த்திருக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டவர்களுக்கு பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.
சர்வதேசப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் தளங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு ஒட்டுமொத்தமாக சுற்றுலாத்துறையை நம்பியுள்ள அனைத்து தரப்பினருக்கும் இயல்பான நிதி நெருக்கடியை அதிகரித்துள்ளது. இதைத் தணிக்க, அதிகாரிகள் சுறுசுறுப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு உறுதியளித்து, பயணச் சீரமைப்புகளுக்கு வசதி செய்து வருவதாக அறிவித்துள்ளனர். எனினும் விரைவான மீட்சியை முன்னெடுக்கப்படாதவிடத்து நிலைமைகள் மோசமடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.
இதேநேரம், எதிர்கால காலநிலை அதிர்ச்சிகளில் இருந்து அந்நியச் செலாவணி ஈட்டலைப் பாதுகாக்க, காலநிலை-மீள்தன்மை கொண்ட போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ திட்டமிடலில் முதலீடு செய்ய வேண்டிய அவசர தேவை உள்ளிட்டபல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் கொள்கை அளவில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
உள்ளுர், புலம்பெயர் மற்றும் நிறுவனங்களின் 1,893 மில்லியன் ரூபா அதிகமான பாரிய பங்களிப்பால் ஆதரிக்கப்படும் 'மீண்டும் இலங்கையைக் கட்டியெழுப்புதல்' திட்டம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியமானது முக்கியமான சர்வதேச ஆதரவைப் பெற்றுவருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலதரப்பு பங்காளிகள் ஏற்கனவே உடனடி நிவாரணம் மற்றும் மதிப்பீட்டிற்காக மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியம் அவசரகால நிதியுதவிக்கான கோரிக்கையை பரிசீலித்து வருகிறது.
இந்த நிதியுதவி, காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களால் இப்போது துரிதப்படுத்தப்படும் ஒரு செயல்முறையாக உள்ளதோடு வெறுமானே இழப்பீடுகளை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், மீள்தன்மைக்காக பொருளாதாரத்தை அடிப்படையாக மறுசீரமைக்க மூலோபாய ரீதியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இதற்கு காலநிலை பற்றிய தூரநோக்குப் பார்வையுடனான விஞ்ஞானபூர்வமான அனைத்து துறைசார்ந்த நடவடிக்கைகளை திட்டமிட வேண்டியுள்ளது. குறிப்பாக, முதலில் மக்களின் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது அவசியமாகின்றது.
இரண்டாவதாக, அனர்த்த-எதிர்ப்பு உள்கட்டமைப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகின்றது. நாட்டில் சட்ட விரோத நிர்மாணங்களும், மக்கள் வாழக்கூடாத பகுதிகளில் வாழிடங்களும் தான் உயிர்ப்பலிகளுக்கு அடிப்படையாகின்றன.
ஆகவே குறித்த விடயத்தில் இறுக்கமான கடைப்பிடிப்புக்கள் தான் மீண்டும் இவ்வாறானதொரு உயிரழிவுகளுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாதிருக்கும்.
மூன்றாவதாக, வானிலை நிகழ்வுகள் பற்றிய முன்னெச்சரிக்கைகளுக்கான முறையான நவீனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களும், அனர்த்த முகாமைக்கான முன்கூட்டிய ஏற்பாடுகளும் அவசியமாகின்றன.
நவீன யுகத்துக்குபொருத்தமான கருவிகள் முதல் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுகள், மேம்படுத்தப்பட்ட வினைத்திறான மனிதவளக் கட்டமைப்பு ஆகியவையும் அவசியமாகின்றன.

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!