13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகத் தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் வைத்து ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இருப்பதை அப்படியே தருவேன் என்று அவர் நேற்றிரவு (10) உறுதிப்படுத்தி இருக்கின்றமை வரவேற்கத்தக்கது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் சட்டமாகி இப்போது 36 ஆண்டுகளாகின்றன. 13 ஆவது திருத்தம் என்பது அரசமைப்பின் பிற்சேர்க்கை அல்ல. அது அரசமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கம். பிரதான பகுதி. ஆனால், அதில் உள்ள முக்கிய அதிகாரப் பகிர்வுகளை நடைமுறைப்படுத்த மாறி மாறி வந்த அரசுகள் மறுத்து வருகின்றன.
அப்படி மறுப்பது முழு – அப்பட்டமான – அரசமைப்பு மீறல். அப்படி மீறுவது ஒருவகையில் தேசத்துரோகக் குற்றமும் கூட. ஆனால் நாட்டில் புரையோடி போயிருக்கும் பௌத்த – சிங்களப் பேரின வாத வெறிப்போக்கின் கீழ் இந்த அரசமைப்பை மீறும் தேச துரோகம் மறுவழ மாக, ‘தேசத் தியாகமாகவும்’, ‘தேசப்பற்றுச் செயற்பாடாகவும்’ சிங்களத்தினால் போற்றப்படுகின்றது.
இந்தப் பின்புலத்தில்தான், அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழான பொலிஸ் அதிகாரத்தைத் தரவே முடியாது என்று அடம் பிடிக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அது மாத்திரமல்ல, அந்தத் திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத் துவதாயின், அதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று ஒரு புதிய அரசியல் பாடத்தையும் நாட்டு மக்களுக்கு அவர் படிப்பிக்கின்றார்.
அரசமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற தமது கருத்தின் மூலம் இந்த நாட்டு மக்களை முட்டாள்கள் என கருதுகின்றார் போலும் ஜனாதிபதி.
அது மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 13 இன் நடை முறையாக்கம் என்று கூறினாலும், அதிலும் பொலிஸ் அதிகாரப் பரவலாக்கல் இடம்பெறாது, அதை சஜித்திடமே உறுதிப்படுத்திப் பாருங்கள் என்று யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறிவிட்டுத் தான் சென்றிருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அதற்கே இப்போது சரியான பதிலை நேற்று இலங்கை தமிழரசுக் கட்சியி னருடன் நடைபெற்ற பேச்சுக்களின் பின்னர் செய்தியாளர்களிடம் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தி இருக்கின்றார் சஜித் பிரேமதாஸ.
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத் தில் உள்ளவற்றை அப்படியே நடை முறைப்படுத்த நான் தயார் – கொஞ்சமும் கூட்டாமலும் கொஞ்சமும் குறைக்காமலும்!’’ என்ற சஜித்தின் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையற்று சஜித் தொடர்பில் எழுப் பிய சந்தேகத்துக்கு நல்லதொரு பதில் விளக்கம் என்றும் கருதலாம்.
எது, எப்படி என்றாலும் தமிழரின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகத் தமது நிலைப்பாடு யாது என்பதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 2019 ஜனாதிபதி தேர்தலின் போதும், தமது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் சஜித் பிரேமதாஸ தெளிவுபடுத்தி இருந்தார்.
தமிழர் தாயகம் மட்டுமல்லாமல், சிறுபான்மையினர் வாழும் பிரதேசம் எங்கும் – வடக்குக் கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் வாழும் பகுதி எங்கும் அந்தத் தேர் தல் விஞ்ஞாபனத்திற்கு – வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் உட்பட சிறு பான்மை மக்கள் அனைவரும் – ஒன்று பட்டு அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.
அதுதான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறு. அந்தத் தேர்தலின் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கல் தொடர்பில் தான் குறிப்பிட்டவற்றுக்கு குறைந்தவையாக இந்தத் தடவை அவரின் தேர்தல் விஞ் ஞாபனம் அமைய முடியாது அமையக்கூடாது. அந்தப் பின்புலத்தில் 13வது திருத்தம் தொடர்பில் அவரின் தற்போதைய தெளிவுபடுத்தல் வரவேற்கத்தக்கது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!