கோப் எனப்படுகின்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இதுவரை எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, எஸ்.எம். மரிக்கார், ஹேசா விதானகே, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், சுதந்திர மக்கள் சபையின் எம்.பி. சரித ஹேரத், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, காமினி வலேகொட ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

கோப்குழுவில் உள்ள ஏனைய எதிரணி உறுப்பினர்களாக அநுரகுமார திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், அநுரபிரியதர்சன யாப்பா ஆகியோரும், கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு நியமனம் பெற்றுள்ளவர் தொடர்பில் அதிருப்தியிலேயே உள்ளனர். சம்பிக்க ரணவக்கவும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளார்.

இவர்கள் இதுவரை பதவி விலகாவிட்டாலும், கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு பொறுத்தமானவர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோப் குழுவானது நாடாளுமன்றக் கட்டமைப்பில் மிக முக்கிய குழுவாகும். அந்த குழுவில் தகுதியுள்ள – தமைமையுள்ள உறுப்பினர்களே இடம்பிடிப்பது வழமை.

ஆனால் தற்போதைய நாடாளுமன்றத்தில் இந்த குழுவும் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.
ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு முன்னர் கோப் குழுவின் தலைவராக இருந்த ரஞ்சித் பண்டார, பக்கச்சார்பாக செயற்பட்டார். அவரின் சைகைமூலம் இது அம்பலமானது. ஆனாலும் ரஞ்சித் பண்டார கல்வியில் தேர்ச்சி பெற்றவர். ஆனால் ரோஹித அபேகுணவர்தன பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விமர்சிக்கப்படுபவர்.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு பகிரப்பட்டுள்ள ஏனைய வணிகங்களின் கணக்குகளை ஆராய்வதே கோப்குழுவின் பிரதான பணியாகும். அரசுக்குரிய நிதி நிர்வாக அதிகாரம் என்பது நாடாளுமன்றத்துக்கு உரித்தானது. இப்படியான முக்கிய பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பே கோப் குழுவுக்கு உள்ளது.

இதற்கமைய எந்தவொரு நபரையும் தமது குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கும், எந்தவொரு ஆவணத்தையும், கணக்கறிக்கையையும் அல்லது ஏனைய ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரம் இந்த குழுவுக்கு உள்ளது. அதுமட்டுமல்ல அரச சொத்துகளை அணுகவும், அவற்றை பரிசோதனை செய்யவும், அவை தொடர்பில் சிற்சில நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்த குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

இப்படியானதொரு குழுவுக்கு எப்படியான ஒருவரை நியமிக்க வேண்டும்?
எனவே, இது விடயத்தில் ஜனாதிபதியும், சபாநாயகரும் தலையிட வேண்டும். நாடாளுமன்றம்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இப்படியான சம்பவங்கள் மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கலாம். எனவே, ரோஹித அபேகுணவர்தனவை பதவி விலக்க வைக்க வேண்டும். அல்லது அவர் தாமாக பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் போராட்டத்தில் இருந்து ஆட்சியாளர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்தும்.