இலங்கையில் பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல்களுக்கும் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி வந்த 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் 231 ஆம் பக்கத்தில், நாட்டின் அனைத்து மக்களின் குடிpயல் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடனடியாக நீக்குவதாகச் பிரமாண்டமான வாக்குறுதியை வழங்கியிருந்தது.
ஆனால், தற்போதைய அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பழைய சட்டத்தில் காணப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணான அடக்குமுறை ஏற்பாடுகளை முழுமையாக நீக்குவதற்குப் பதிலாக, நிர்வாகத்துறையின் அதீத அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் புதியதொரு சட்டக் கட்டமைப்பையே தற்பொழுது நாட்டுக்கு முன்வைத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத் தராதரங்களிலிருந்து முற்றிலும் விலகி அமைந்துள்ள இச்சட்டமூலத்தில், 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கு மிகவும் பரந்தளவிலான மற்றும் ஆபத்தான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது. 'பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்தல்,' 'ஒரு செயலைச் செய்யும்படி அல்லது செய்யாதிருக்கும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தல்,' 'பொதுச் சொத்துக்களுக்கு, தனியார் போக்குவரத்து முறைமைக்கு அல்லது ஏதேனும் உட்கட்டமைப்புக்குச் சேதம் ஏற்படுத்தல்,' 'சூழலுக்கான பாரதூரமான அல்லது நீண்டகாலச் சேதம்,' 'டிஜிட்டல் கட்டமைப்பைச் சீர்குலைத்தல்' மற்றும் 'பொதுச் சுகாதாரச் சீர்கேட்டினை ஏற்படுத்தல்' போன்ற பல்வேறு செயற்பாடுகள் இச்சட்ட வரைவின் கீழ் கடுமையான குற்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மிக அண்மையில், அதிகாரப்பகிர்வு, சமஷ்டி முறைமை மற்றும் காணி உரிமைகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்திருந்த கருத்துக்கள், நாட்டின் ஒருமைப்பாட்டைப் பிளவுபடுத்துவதாகவும் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தன எனப் பொலிஸாரில் முறைப்பாடு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையை இவ்விடத்தில் ஆழ்ந்து நினைவுபடுத்துவது அவசியமாகும்.
இலங்கையின் நீண்ட அரசியல் வரலாற்றில், சமஷ்டி, அதிகாரப்பகிர்வு, தன்னாட்சி மற்றும் பூர்வீக காணி உரிமைகள் போன்ற தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் தேசிய பாதுகாப்பு அல்லது நாட்டின் ஒருமைப்பாடு என்ற குறுகிய கண்ணோட்டத்தின் ஊடாகவே அணுகப்பட்டு வந்துள்ளன.
அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இச்சட்டத்தில் உள்ள பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணங்கள், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளையும் உரிமைக் குரல்களையும் கூட 'பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்' எனப் பொருள்கொள்ளும் பாரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், 'பொதுச்சொத்துக்களுக்கு அல்லது உட்கட்டமைப்புக்குச் சேதம் ஏற்படுத்தல்' போன்ற ஏற்கனவே சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் மிக எளிதாகக் கையாளப்படக்கூடிய குற்றச்செயல்கள் கூட, இச்சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய பயங்கரவாதக் குற்றங்களாக உயர்த்தப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் குறித்துப் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.
அடக்குமுறையான சட்டங்கள் ஆட்சியாளர்களின் அதிகார பலத்தையும் இருப்பினை உறுதிப்படுத்தும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவது இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிதல்ல. ஆனால், அவற்றின் நடைமுறை அமுலாக்கம் அனைத்துப் பிரஜைகளையும் சமமாகப் பாதித்ததில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
கடந்தகால வரலாற்று அனுபவங்கள், இத்தகைய கொடூரமான சட்டங்கள் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் தமிழ் மக்கள் மீதுதான் அதிகளவிலும் பாரபட்சமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் வெடுப்படுத்துகின்றன.
எனவே, இச்சட்டமும் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தமிழ் மக்கள் மீது விகிதாசாரமற்ற மற்றும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் முற்றிலும் ஆதாரமற்றதல்ல. தெற்கில் இடம்பெறும் வெகுஜனப் போராட்டங்கள் சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் ஜனநாயக முறையில் கையாளப்படும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் காணி ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சுவீரிப்பு அல்லது தீவிர இராணுவமயமாக்கலுக்கு எதிராகச் சமாதான முறையில் குரல் கொடுக்கும் சிவில் சமூகங்கள் மீது இத்தகைய பயங்கரவாதச் சட்டங்கள் ஏவப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் தொடர்கின்றன.
வடக்கு-கிழக்கில் தொடரும் முப்படையினரின் இராணுவமயமாக்கல் மற்றும் உளவுத்துறை கண்காணிப்புச் சூழலில், இச்சட்டம் தனிநபர் உரிமைகளை மட்டுமன்றி, தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு தேசிய இனமாக, தமிழர்கள் தமது வரலாற்று நினைவுகளையும் தியாகங்களையும் இழப்புகளையும் கூட்டாக நினைவுகூரும் பாரம்பரிய உரிமை கொண்டவர்கள். இருப்பினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அல்லது மாவீரர் நாள் போன்ற உணர்வுபூர்வமான நிகழ்வுகள், இச்சட்டத்தின் பரந்த வரைவிலக்கணங்களின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களாகக் கருதப்பட்டுத்தடை செய்யப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
இதனால் நினைவுகூரல், அரசியல் வெளிப்பாடு மற்றும் பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றுக்கிடையேயான மெல்லிய எல்லைகள் மேலும் மங்கலாகும் அபாயம் நிலவுகிறது. அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வெளிநாடுகளில் நின்று செயற்படும் புலம்பெயர் தமிழர்களின் அல்லது சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஜனநாயகச் செயற்பாடுகளையும் இச்சட்டத்தின் எல்லை கடந்த அதிகார வரம்பு தொடர்பான பிரிவுகள் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
நிதி நடவடிக்கைகள் தொடர்பான பணிக்குழுவின் பரிந்துரை 8-ஐ தவறாக மேற்கோள்காட்டி, அரசு சாரா நிறுவனங்களையும் சிவில் சமூக அமைப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் புதிய சட்டமூலத்தின் வழிகாட்டல்கள் சிவில் சமூகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் இடர்-அடிப்படையிலான நடவடிக்கைகளையே வலியுறுத்துகின்றன் ஆனால் நடைமுறையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் நிதிக் கையாளுமைகள் அதிக கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும்.
இச்சட்டமூலம் பொலிஸார், முப்படையினர் மற்றும் கடலோரக் காவல் படையினருக்கு வரம்பற்ற தேடுதல் மற்றும் கைது அதிகாரங்களை வழங்குவதோடு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குத் தடுப்புக் காவல் கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஏகாதிபத்திய அதிகாரத்தையும் வழங்குகிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாலும், ஏற்கனவே தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அதனைச் கேள்விக்குட்படுத்தும் அடிப்படை அதிகாரம் நீதிவானுக்கே மறுக்கப்பட்டுள்ளது.
தடுத்துவைத்தற் கட்டளைகளை மறுஆய்வு செய்யும் 'சுயாதீன பரிசீலனைக் குழு' என்பது, அக்காட்டளையைப் பிறப்பிக்கும் அதே அமைச்சின் செயலாளரின் அமைச்சரால் நியமிக்கப்படுவதால், அங்கே எவ்வித நடுநிலையும் இருக்க முடியாது. மேலும், ஏதேனும் அமைப்பு ஒன்று இச்சட்டத்தின் கீழ் தவறு செய்வதாக ஜனாதிபதி நம்புவதற்கான 'நியாயமான ஏதுக்களை' கொண்டிருந்தால், எத்தகைய சட்டபூர்வமான ஆதாரங்களுமின்றி குறித்த அமைப்பைத் தடையுத்தரவு மூலம் உடனே முடக்க முடியும்.
சட்டங்களை உருவாக்கும் பிரதான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உரியது என்றபோதிலும், இச்சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான முக்கியமான விதிமுறைகளை வகுக்கும் ஏகபோக அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை, அதிகாரப்பகிர்வு, மக்களின் இறைமை மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக முழங்கிய அரசாங்கம், அதன் அடிப்படை அடக்குமுறைத் தத்துவத்தையே புதிய பெயரிலும் நவீனப்படுத்தப்பட்ட சட்டக் கட்டமைப்பிலும் தொடர முற்படுகிறது என்ற அச்சத்தை இச்சட்டமூலம் ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சட்டங்கள் எந்தவொரு இறையாண்மை கொண்ட அரசிற்கும் தேவைப்படலாம்; ஆனால் அவை எப்போதுமே சட்ட ஆட்சி, நீதித்துறை மேற்பார்வை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.
இல்லையெனில், அவை மக்களைப் பாதுகாக்கும் கேடயமாக அல்லாமல், அரசைத் தைரியமாக விமர்சிப்போரைக் கண்காணிக்கும் மற்றும் ஒடுக்கும் ஆயுதமாகவே மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!