இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை பல்வேறு அரசியலமைப்பு மாற்றங்களைக் கண்டிருந்தாலும், ஒரு தேசமாக சகல மக்களையும் உள்வாங்கிய முழுமையான சமூக ஒப்பந்தத்தை எட்டுவதில் சவால்களை எதிர்கொண்டே வருகின்றது.

குறிப்பாக 2022ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் பின்னர், நாட்டின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் வேரூன்றியிருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை முன்னெப்பொழுதையும் விட தற்போது தீவிரமாக உணரப்படுகின்றது.

இத்தருணத்தில், புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்அமைப்பு தனது காத்திரமான தேசியச் செயற்திட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்' அமைப்பின் பணிப்பாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான, அமீர் ஃபாயிஸ், இலங்கையின் தற்போதைய நிலையை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான தருணம் என்று குறிப்பிட்டார்.

'அரசியலமைப்பு என்பது வெறுமனேயொரு சட்ட ஆவணம் அல்ல. அது ஒரு தேசத்தின் மக்கள் எவ்வாறு ஆளப்பட வேண்டும், அவர்களின் கௌரவம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பன்முகத்தன்மை எவ்வாறு உள்வாங்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்கும் கூட்டு உறுதிப்பாடாகும்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்பது குறித்து அவர் தனது உரையில் ஆழமாகப் பகுப்பாய்வு செய்தார்.

குறிப்பாக, அரசியல் இணக்கப்பாடின்மை, வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் பொதுமக்களின் அர்த்தமுள்ள பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டமை போன்ற காரணிகளே தோல்விக்கு வித்திட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டு மக்களிடையே நிறுவனங்கள் மீதான நம்பிக்கை தளர்ந்துள்ள சூழலில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது பிரிவினைகளைத் தூண்டுவதாக அமையாமல், கலந்துரையாடல் மூலம் சகலரையும் உள்வாங்குவதாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

'எமது நோக்கம் எமது அமைப்பு சார்ந்த அரசியலமைப்பு ஒன்றைத் தயாரிப்பதல்ல' மாறாக மக்கள் தமக்கான அரசியலமைப்பைத் தாங்களே உருவாக்கிக் கொள்வதற்கான தளத்தை வழங்குவதாகும் என்று அவர் தனது உரையில் உறுதிபடத்தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரும் பேராசிரியருமான தீபிகா உடகம, அரசியலமைப்பு என்பது கொழும்பில் உள்ள ஒரு சிறிய தரப்பினர் தீர்மானிக்கும் ஆவணமாக இருக்கக்கூடாது என்றார்.

'தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அரசியலமைப்புக்கும் மக்களுக்குமான உணர்வு ரீதியான பிணைப்பு ஏற்படும்,' என்று அவர் தெரிவித்தார்.

முறையான அதிகாரப்பகிர்வு, அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாப்பு, அரசியலமைப்புப் பேரவையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் போன்றவை புதிய அரசியலமைப்பில் கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படைக்கூறுகள் என்று அவர் விரிவாக விளக்கினார்.

இதேவேளை, அரசியலமைப்பு மறுசீரமைப்பு என்பது இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தவிர்க்க முடியாது என்று  சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி.குமாரவடிவேல் குருபரன் வலியுறுத்தினார்.

‘2022 அரகலய’ போராட்டத்தின் பின்னர் அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை மையப்படுத்தியே தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர் என்பதை அவர் நினைவூட்டினார்.

'தற்போது பேசப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அல்லது மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், கடந்தகாலங்களைப் போன்று ஒரு இனக்குழுமம் அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டிலிருந்து முற்றாக வெளித்தள்ளப்பட்டுவிடும் அபாயம் உள்ளது' என்று அவர் எச்சரித்தார்.

மேலும், இலங்கை ஒரு பல்லின நாடு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதன் மூலமே நிலையான தீர்வைக் காண முடியும் என்றும், 'ஒருமித்த நாடு' மற்றும் 'ஏக்கிய இராச்சிய' போன்ற சொற்களை வைத்து மக்களைக் குழப்பும் பழைய தந்திரோபாயங்கள் இனியும் பலனளிக்காது என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

தற்போது பலமான அதிகாரத்தைப் பெற்றுள்ள அரசாங்கம், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியமையும் விசேட அம்சமாகும்.

அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணரான கலாநிதி. ஜயம்பதி விக்ரமரத்ன உரையாற்றுகையில், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை நிறுவப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக் குறிப்பிட்டார்.

எனினும், பாராளுமன்றம் மேலாதிக்கம் பெறுவதை விட, அரசியலமைப்பே சகலவற்றிற்கும் மேலானதாக (Constitutional Supremacy) இருக்க வேண்டும் என்று அவர் திடமாக வலியுறுத்தினார்.

'கடந்த காலங்களில் பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களின் தீர்மானங்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருந்தபோதும் அவற்றைச் சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய அரசாங்கம் 2016-2018 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு பணிகளைத் தொடர்வதாகக் கூறியிருப்பதை அவர் வெகுவாக வரவேற்றிருந்தார்.

இதேநேரம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கடந்த காலங்களில் புதிய அரசியலைமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அத்தினை ஆவணங்களும் அலுமாரிகளில் ஆவணங்களாக சேகரிக்கப்பட்டுள்ள நிலைமையை வெளிப்படத்தினார்.

அத்துடன், தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மிகவும் அவசியமானது என்பதை ஏற்றுக்கொண்டு வலியுறுத்தியவர், குறித்த செயற்பாட்டில் அனைத்து மக்களின் பங்கேற்பும் அவசியம் என்பதை உறுதிபடத் தெரிவித்தார்.

விசேடமாக, டிஜிட்டல் தளங்கள் பெருகியுள்ள நவீன உலகத்தில் மக்களின் பங்கேற்பு என்பது மிகவும் உறுதியானதாக இருக்க வேண்டும். அப்போது தான் அரசியலமைப்பு ஒவ்வொரு பிரஜையின் விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கியதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கலாநிதி.ரமேஷ் ராமசாமி, 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலயப் போராட்டத்துடன் சமூக ஒப்பந்தம் முழுமையாக முறிந்துவிட்டது. அதனை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கை ஒரு இனத்துவ அரசு என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டின் ஆட்சியைத் தன்மையை மாற்றியமைப்பதற்கு தயாராக இருக்கிறோமாஎன்ற கேள்வி உள்ளது. சிறுபான்மையினர் ஆட்சியிலிருந்து புறந்தள்ளப்பட்டுள்ளனர். எனவே மறுசீரமைப்பு செயன்முறை அதிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

போரினால் இலங்கை தேசிய பாதுகாப்பை மையப்படுத்திய அரசாக மாறிவிட்டது இதனை எவ்வாறு மறுசீரமைக்கப்போகிறோம்? என்ற கேள்வியும் உள்ளது.

சிறுபான்மையினர் தமது உரிமைகளளையும் அபிலாஷைகளையும் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்

அதிகாரப்பகிர்வு என்றாலே அச்சமான நிலைமைகளே காணப்பட்டன. ஆனால் உலகளாவிய ரீதியில் இதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன நேபாளத்தில் ஒரு கட்டமைப்பு உண்டு. அதன்மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்து சிந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, கடந்த காலத் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்வது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

'தமிழர்கள் ஏன் போராடினார்கள் என்பது பற்றி பல ஆய்வுகள் உள்ளன, ஆனால் சிங்கள மக்கள் ஏன் சமஷ்டி முறையை எதிர்க்கிறார்கள் என்பது பற்றிப் போதிய புரிதல் இல்லை' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெரும்பான்மைச் சமூகத்தின் அச்சங்கள் மற்றும் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் ஒரு புதிய அரசியலமைப்பை முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்பது அவரது வாதமாக இருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த செயற்றிட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்பிரகாரம், 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்' அமைப்பின் ஆய்வுப் பிரிவுத் தலைமை அதிகாரியான ஹரிந்திர பி. தஸநாயக்க செயற்திட்டத்தின் பாதை வழிபடத்தினை விளக்கினார்.

2027ஆம் ஆண்டு அளவில் ஒரு முழுமையான மாதிரி அரசியலமைப்பு வரைவை வெளியிடுவதே எமது நிறுவனத்தின் இலக்கு என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட citizen's constitution.lk  என்ற இணையத்தளத்தில் உலகெங்கிலும் உள்ள இலங்கை மக்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்யவும், அரசியலமைப்பு சார்ந்த விவாதங்களில் பங்கேற்கவும் வழிவகுக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.

இறுதியான, இந்த அங்குராட்பண நிகழ்வானது இலங்கையின் அரசியலமைப்புப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. சகல இன, மத மற்றும் அரசியல் தரப்பினரையும் உள்ளடக்கிய திறந்த கலந்துரையாடல் மட்டுமே இலங்கையின் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்தும் என்ற செய்தி இம்மாநாட்டின் மூலம் உரக்கச் சொல்லப்பட்டது.