இலங்கைப் பொருளாதாரம் 2026 பார்க்கையில்,  நோயாளி குணமடைந்தாலும் ஆபத்தான கட்டத்தை தாண்டாத நிலை நீடிக்கிறது. ஒரு நோயாளி தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தேறிவரும் போது மருத்துவர்கள் கூறும் 'நிலைமை சீராக உள்ளது, ஆனால் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை' என்ற வாசகத்தைப் போன்றே 2026ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார யதார்த்தம் காணப்படுகிறது.

2022இல் சந்தித்த வரலாறு காணாத வீழ்ச்சியிலிருந்து நாடு மீண்டு வந்துகொண்டிருந்தாலும், உலகளாவிய மற்றும் உள்ளுர் அதிர்வுகள் காரணமாக முழுமையான பொருளாதாரப் பாதுகாப்பு இன்னும் எட்டப்படவில்லை என்பதையே தற்போதைய களநிலவரங்கள் உணர்த்துகின்றன.

இவ்வாறானதொரு சூழலில், சர்வதேச நாணய நிதியத்தின் 'நீடிக்கப்பட்ட கடன்வசதித் திட்டத்தின்' கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது கூட்டு ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளமையானது  முக்கிய தொழில்நுட்ப மைல்கல்லாகும்.

இதன் பலனாக இலங்கைக்கு நேரடியாக 695மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 2022ஆம் ஆண்டின் கடன் மறுப்பிற்குப் பின்னர் இதுவரை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொண்ட மொத்த நிதியுதவி 2.4 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

அரசாங்கம் நாணய நிதியத்தின் கடினமான விதிகள், நிபந்தனைகள் மற்றும் உட்கட்டமைப்பு இலக்குகளைத் துல்லியமாகப் பின்பற்றியுள்ளதை இது காட்டினாலும், நாட்டின் பொருளாதாரம் வெளிப்புற அதிர்வுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே இன்னமும் உள்ளதாக நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை வருமானம், விறுவிறுப்பான கப்பல் போக்குவரத்து, உற்பத்தி உள்கட்டமைப்புகள் மற்றும் மோட்டார் வாகன இறக்குமதி மூலம் கிடைத்த தற்காலிக வரி வருமானம் காரணமாக இலங்கைப் பொருளாதாரம் எதிர்பாராத அளவிற்கு 5 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

இந்த நிலை வர்த்தக வட்டாரங்களில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள புதிய உலகளாவிய மற்றும் உள்ளுர் இடையூறுகள் காரணமாக 2026ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 3 சதவீத மிதமான அளவிற்கு நாணய நிதியம் குறைத்துள்ளது.

இந்த மந்தநிலையானது நாட்டின் விநியோகச் சங்கிலிகளையும் வங்கிச் கணக்குகளையும் ஒரே நேரத்தில் தாக்கிய இரு பெரும் வெளிப்புற அதிர்ச்சிகளின் நேரடி விளைவாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முதலாவது அதிர்வாக, மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ப்பதற்றங்கள் காரணமாக இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த டிசம்பரில் 152 மில்லியன் டொலர்களாக இருந்தது, இந்த ஆண்டு ஏப்ரலில் 886 மில்லியன் டொலர்களாக கட்டுக்கடங்காது சென்றுள்ளது. அதேவேளை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாத சுற்றுலா வருமானம் 38.8 சதவீதம் சரிவடைந்து வெறும் 157.1 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.

இரண்டாவது அதிர்வாக, உள்நாட்டில் ஏற்பட்ட 'தித்வா' இயற்கை பேரழிவு காரணமாக, அவசரகால நிவாரணம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பிற்காக அரசாங்கம் பொது நிதியைத்திட்டமிடாமல் செலவிட நேரிட்டது. இந்த இரட்டை அதிர்ச்சிகளால் நாட்டின் நிதிச் சமநிலை சீர்குலைந்து, கடந்த 18 மாதங்களாக நீடித்த நிலையான நடைமுறைக்கணக்கு மிகையானது, 2026இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீத பற்றாக்குறையாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025இல் வலுவாகக் காட்சியளித்த அரசாங்கத்தின் வரி வருமான நிலைத்தன்மையானது, மோட்டார் வாகன இறக்குமதியின் தற்காலிக ஒற்றை வரி வருவாயை மட்டுமே நம்பியிருந்த பலவீனமான கேடயமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது

அதேநேரம், இணையக் குற்றவாளிகள் நிதியமைச்சின் வலையமைப்பிற்குள் புகுந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அனுப்பவிருந்த 2.5 மில்லியன் டொலர் இறையாண்மைக் கடனைத் முடக்கியதால், தொழில்நுட்ப ரீதியாகக் கடனை மீளச் செலுத்தும் காலக்கெடு தவறிய அதிர்ச்சியூட்டும் விபரத்தையும் நாணய நிதியம் வெளிப்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொது நிதி முகாமை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பில் உள்ள கடுமையான பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த இரட்டை அதிர்ச்சியை இலங்கை தாங்குவதற்கு ஏதுவாக, தனது கடுமையான சிக்கன விதிகளிலிருந்து சற்றே விலகி, 2026இல் நிதித் தளர்வுகளைச் செய்ய நாணய நிதியம் அனுமதித்துள்ளது.

அதன்படி வரவு,செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாகப் பேணவும், முதன்மை இருப்பு வரவு இலக்கை 1.4 சதவீதமாகக் குறைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிச் சுதந்திரம், புயலால் சேதமடைந்த கட்டமைப்புகளைப் பழுதுபார்ப்பதற்கும், மின்சாரக் கட்டணம் மற்றும் உணவு விலையுயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்குத் தற்காலிக நிதியுதவி வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு வழிவகுக்கிறது

ஆனால், இதனைப் பொறுப்பற்ற ஜனரஞ்சகச் செலவினங்களுக்கான திறந்த அழைப்பாகக் கருதக்கூடாது என்றும், தவறினால் நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் தேவை தற்போதைய 19.8 சதவீதத்திலிருந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரைப் பொறுத்தமட்டில், 2026இல் சராசரி பணவீக்கம் 5 சதவீதமாகவும், ஆண்டின் இறுதியில் முதன்மைப் பணவீக்கம் 6.1 சதவீதத்தைத் தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை ஸ்திரத்தன்மையைக் காக்க வட்டிவீதக் கொள்கை தரவுகள் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்று மத்திய வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரவு,செலவுத் திட்டப் பற்றாக்குறைக்காகப் பணம் அச்சிடுவதை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்றும், மத்திய வங்கியின் சட்டப்பூர்வ சுதந்திரம் அரசியல் தலைவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை தனது மொத்த உத்தியோகபூர்வ அந்நியச்செலாவணி கையிருப்பை 8,645 மில்லியன் டொலர்களாக (சுமார் 3.9 மாத இறக்குமதிச் செலவு) உயர்த்த வேண்டும் என்ற கடுமையான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை எட்ட ரூபாவின் மதிப்பைச் செயற்கையாகப் பாதுகாக்க முனையாமல், சந்தையின் தேவைக்கேற்ப நாணய மாற்று விகிதத்தை நெகிழ்வாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், நெருக்கடி காலத்தில் விதிக்கப்பட்ட எஞ்சிய இறக்குமதித் தடைகளையும் தற்காலிகக் கட்டுப்பாடுகளையும் படிப்படியாக நீக்குவது நீண்டகால முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் கட்டமைப்பு மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய சட்டங்களை இயற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவற்றை உண்மையாக அமுல்படுத்த வேண்டும் என்று நாணய நிதியம் வலியுறுத்துகிறது.

குறிப்பாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அரசியல் தலையீடற்ற முழுமையான தன்னாதிக்க அதிகாரங்களை வழங்குதல், போலி நிறுவனங்களின் பின்னால் ஊழல்வாதிகள் ஒளிந்துகொள்வதைத் தடுக்க நிறுவனங்களின் 'உண்மை உரிமையாளர் பதிவேட்டை' பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்தல் போன்ற நான்கு முக்கிய நிர்வாக முன்னுரிமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதோடு, அரச-தனியார் கூட்டாண்மைக்கான நவீன சட்டங்கள், உலக வர்த்தக தாராளமயமாக்கல், சிவப்பு நாடா முறையை ஒழிக்க டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழிலாளர் சட்டங்களை நவீனமயமாக்கல் போன்ற கட்டமைப்புச் சீர்திருத்தங்களும் அவசியமானவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியம் தனது 2026ஆம் ஆண்டு அறிக்கையை நிதி-கடன் நிலைத்தன்மை, நாணயம்-வெளிப்புற சமநிலை, மற்றும் கட்டமைப்பு-சமூக ஸ்திரத்தன்மை என மூன்று முக்கிய தூண்களாக வகுத்துள்ளது.

வாழ்க்கைச் செலவு உயர்வால் பொதுமக்களின் விரக்தி அதிகரித்துள்ள நிலையிலும், சிறிய நிதி நிறுவனங்கள் வாராக்கடன் அலையை எதிர்கொண்டுள்ள சூழலிலும், 'அஸ்வெசும' போன்ற குறைந்த வருமான நிவாரணத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு வலைகளை விரைவாக வலுப்படுத்த வேண்டும் என்பது இதில் மிக முக்கியப் பரிந்துரையாகும்.

சுருங்கக் கூறின், இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்களை ஐஆகு அங்கீகரித்தாலும், நாடு இன்னும் ஆபத்தான பாதையில்தான் பயணிக்கிறது என்பதை எச்சரித்துள்ளது. நாணய நிதியத்தின் பரிந்துரைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் அவசர மற்றும் பொறுப்பான சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டுமே நாட்டின் எதிர்காலப் பொருளாதாரத்தை ஆரோக்கியமானதாக மாற்றும்.