இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் மற்றும் பரந்த குடிமக்கள் சமூகத்தின் மீது அரசு செலுத்தும் கட்டுப்பாடுகள் மற்றும் அணுகுமுறை தொடர்பான விவாதம் புதிதானதொன்றல்ல.

குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பல தசாப்த கால யுத்த சூழலிலிருந்தே இத்தகைய சமூக அமைப்புகள் தேசிய பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டுத் தலையீடு மற்றும் பயங்கரவாத மீளுருவாக்கம் போன்ற காரணங்களைக் காட்டியே அரசால் அணுகப்பட்டு வந்துள்ளன.

பேரழிவுகரமான யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணி உரிமைகள், நினைவுகூரல் உரிமை மற்றும் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் போன்ற உணர்வுமிக்க விடயங்களில் தீவிரமாகச் செயற்படும் பல அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு கண்காணிப்புகளையும், உளவுத்துறையின் மறைமுக அழுத்தங்களையும் எதிர்கொண்டே வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்கள், காணி மீளப்பெறுதலுக்காகச் குரல்கொடுக்கும் சமூக அமைப்புகள் மற்றும் நினைவுகூரல் உரிமை தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், ஒரு நாட்டின் சனநாயகப் கட்டமைப்பில் குடிமக்கள் சமூகத்தின் சுதந்திரமான செயற்பாடு ஏன் மிக அவசியமானது என்பதை உலகிற்குத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

எனவே, தற்போது அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள தன்னார்வ சமூக சேவை அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டம் தொடர்பான விவாதமானது, வெறும் நிர்வாக அல்லது நிதி முகாமைத்துவம் தொடர்பான சாதாரண சட்டத்திருத்தம் மட்டுமல்ல. அது அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான உறவை எவ்வாறு வரையறுப்பது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அரசு எவ்வாறு மதிக்கிறது என்ற அடிப்படை சனநாயகக் கேள்வியுடன் ஆழமாகத் தொடர்புடையது. 2022ஆம் ஆண்டு நாட்டில் வெடித்த மக்கள் போராட்டத்தின் ('அரகலய') பின்னர் ஏற்பட்ட பிரம்மாண்டமான அரசியல் மாற்றம், இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்திலும் ஆட்சிமுறையிலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்ப்பைப் பொதுமக்களிடையே உருவாக்கியது.

குறிப்பாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி மற்றும் குடிமக்களின் நேரடி பங்கேற்பு ஆகியவற்றை முதன்மை அமைப்பாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், குடிமக்கள் சமூகத்திற்கான சுயாட்சி வழிகளும் சுதந்திரமான இடமும் மேலும் விரிவடையும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பலரிடமும் இயல்பாகவே இருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையும் சனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், முடிவெடுக்கும் செயல்முறைகளில் மக்களின் பங்கேற்பை அதிகரித்தல் மற்றும் அரசின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் போன்ற முற்போக்கான விடயங்களையே தொடர்ச்சியாக வலியுறுத்தியது.

ஆனால், தற்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் சட்ட வரைவானது, தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட அந்த வாக்குறுதிகளுக்கும், தற்போதைய அரசின் அதிகாரத்துவ ஒழுங்குமுறை அணுகுமுறைக்கும் இடையில் உள்ள தெளிவான முரண்பாட்டையும் இடைவெளியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நிச்சயமாக, தன்னார்வ சமூக சேவை அமைப்புகளின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, நிதிப் பொறுப்புணர்வு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு சீரான சட்டக் கட்டமைப்பு அவசியமானது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அரச சார்பற்ற அமைப்புகள் பெறுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகள், அவற்றின் உள்ளக நிர்வாக நடைமுறைகள் மற்றும் களச்செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதும், பணமோசடி, மோசடியான நிதிச் சேகரிப்பு அல்லது சட்டவிரோத நிதி பரிமாற்றங்களைத் தடுப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே.

ஆனால், ஒரு உண்மையான ஜனநாயக சமூகத்தில் 'ஒழுங்குமுறை' என்பது 'கட்டுப்பாட்டிற்கு' இணையான ஒன்றாக மாற்றப்பட முடியாது. ஒரு சட்டத்தின் முதன்மை நோக்கம் அமைப்புகளின் நிதி மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றின் சுயாதீனமான கொள்கைச் செயற்பாடுகளைக் முடக்குவதாகவோ அல்லது கட்டுப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது.

இங்கெழும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால்: இந்த புதிய சட்டம் குடிமக்கள் அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்க உருவாக்கப்படுகிறதா, அல்லது அவற்றை முழுமையாக அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முடக்குவதற்காக உருவாக்கப்படுகிறதா? என்பதுதான்.

2026ஆம் ஆண்டின் இந்த புதிய சட்டமூலத்தின் முகவுரையானது, நாட்டில் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற அமைப்புகளையும் அவற்றின் செயற்பாடுகளை 'மேலும் பயனுறுதியுடன் வசதிசெய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்' என்ற நோக்கத்திற்காக 'ஒரே அதிகாரத்தின் கீழ்' பதிவு செய்து மேற்பார்வையிடுவதை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது சட்டப் புத்தகத்தில் உள்ள உலர் சொற்களை மட்டுமல்ல் அந்தச் சொற்களின் பின்னணியில் ஒளிந்துள்ள அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறையையும் மனநிலையையுமே ஆகும். ஒரு முற்போக்கான ஜனநாயக அரசாங்கம்,

குடிமக்கள் சமூக அமைப்புகளைப் பொது நன்மையை அடையும் பயணத்தில் அரசின் சமமான பங்காளிகளாகவே நோக்கும். அத்தகைய அமைப்புகள் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் போது மட்டுமல்லாமல், தேவையான இடங்களில் அரசை விமரிசிக்கும் போதும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் போதும் அவை ஜனநாயகத்தின் ஆரோக்கியமான ஒரு பகுதியாகவே செயல்படுகின்றன.

அரச சார்பற்ற அமைப்புகள் என்பவை அரசாங்கத்தின் பிரச்சாரக் கருவிகளோ அல்லது அதன் அதிகாரத்துவ முகவர்களோ அல்ல. அவை அரசின் சேவைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் சுயாதீனமான சமூக அமைப்புகளாகும். அரசாங்கத்தின் கொள்கைகள் தவறானவையாக இருக்கலாம்; அவை மக்கள் நலனுக்கு எதிராக இருக்கும் போது கடுமையாக விமர்சிக்கப்படலாம் மற்றும் மாற்றப்படலாம். இதுவே ஆரோக்கியமான ஒரு சனநாயகத்தின் இயல்பான பண்பாகும்.

ஆனால், இந்த புதிய சட்டமூலத்தின் சட்ட மொழியானது குடிமக்கள் சமூகத்தை ஒரு சுயாதீன சனநாயகப் பங்காளியாகப் பார்க்கிறதா அல்லது தொடர்ந்து சந்தேகத்துடனும் கண்காணிப்புடனும் பார்க்கப்பட வேண்டிய ஒரு துறையாகப் பார்க்கிறதா என்ற பெரும் ஐயத்தை எழுப்புகிறது.

குறிப்பாக, இந்த சட்டமூலத்தின் மிகவும் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்று, பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளுடன் நேரொத்ததாக இருக்க வேண்டும் என்ற மறைமுகக் கட்டுப்பாட்டு அணுகுமுறையாகும்.

ஒரு ஜனநாயக சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம் என்பது அரசாங்கத்தின் கருத்துக்களை எப்போதும் ஆதரிக்கும் உரிமை மட்டும் அல்ல. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதற்கும், மாற்றுக் கருத்துக்களை தைரியமாக முன்வைப்பதற்கும், அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் முன் பொறுப்புக்கூறச் செய்வதற்காக குரல்கொடுப்பதற்குமான அடிப்படை உரிமையுமாகும்.

எந்தவொரு அரசாங்கத்தின் கொள்கையும் நாட்டின் அரசியலமைப்புக்கு மேலானது அல்ல. அரசாங்கங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தேர்தல்களின் மூலம் மாறுகின்றன் அவற்றிடம் இருக்கும் கொள்கைகளும் பொதுவிவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டவையே.

உதாரணமாக, எதிர்காலத்தில் ஒரு அரசாங்கம் காணி கையகப்படுத்தல், சூழலியல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் அல்லது மனித உரிமைகள் தொடர்பில் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய கொள்கைகளை முன்னெடுத்தால், அதனை எதிர்க்கும் குடிமக்கள் அமைப்புகள் அரசாங்கக் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் கடந்தகால அனுபவம் இதற்குச் சிறந்த சான்றாகும். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள், காணி உரிமைகளுக்காகப் போராடும் குழுக்கள், நினைவுகூரல் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள் மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் மனித உரிமை அமைப்புகள் பல சந்தர்ப்பங்களில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளுடன் நேரடியாக முரண்பட்ட கருத்துக்களையே முன்வைத்துள்ளன.

ஆனால், அவை சனநாயகத்திற்கு எதிரானவை அல்ல் மாறாக, அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் சனநாயகத்தின் மிக முக்கியத் தூண்களாகும். மேலும், இந்த 2026 சட்டமூலத்தின் கீழ் 'அரச சார்பற்ற அமைப்பு' என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாகவும் தெளிவற்றதாகவும் உள்ளது.

சர்வதேச அளவில் இயங்கும் பெரிய தொண்டு நிறுவனங்கள் முதல் கிராம மட்டத்தில் இயங்கும் சிறிய சமூக அடிப்படையிலான குழுக்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ முயற்சிகளும் கூட இதில் வலுக்கட்டாயமாக உள்ளடக்கப்படுகின்றன. இங்குள்ள பிரதான பிரச்சினை ஒழுங்குமுறை அல்ல் மாறாக ஒரே மாதிரியான கடுமையான கட்டுப்பாட்டு அணுகுமுறையை அனைத்து அளவிலான அமைப்புகளுக்கும் ஒரேசியராகப் பயன்படுத்துவதாகும்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல கிராம மட்ட அமைப்புகள் எவ்வித முறையான நிறுவன வடிவமைப்பும் இன்றி, முற்றிலும் தற்காலிகச் சமூகத் தேவைகளுக்காகவே இயங்குகின்றன. இயற்கை அனர்த்தங்களின் போது வெள்ள நிவாரணம் வழங்கும் தற்காலிகக் குழுக்கள், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்கும் அமைப்புகள், கிராமப்புறப் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், சமூக நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் போன்றவை அந்தந்தச் சமூகங்களின் சுயமுயற்சி மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடுகளாகும்.

கோடிக்கணக்கான ரூபா நிதியை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தையும், கிராமத்தில் ஏழை மாணவனுக்கு உதவும் சிறிய குழுவையும் ஒரே கடுமையான நிர்வாகச் சுமை மற்றும் பதிவு நடைமுறைகளின் கீழ் கொண்டுவருவது நடைமுறை ரீதியாகவும் நியாய ரீதியாகவும் பெரிய கேள்விகளை எழுப்புகிறது. இந்த விவாதம் அரச சார்பற்ற அமைப்புகள் எவ்வித அரச கண்காணிப்பும் இன்றி தறிகெட்டு இயங்க வேண்டும் என்பதற்கானதல்ல. பொதுமக்களின் பெயரால் இயங்கும் எந்தவொரு அமைப்பும் நிதி வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் சட்டத்திற்கும், அமைப்புகளின் சுயாதீன செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பதிவு செய்யத் தவறுவதற்காக அளவுக்கு அதிகமான அபராதங்களை விதிப்பது, சிறிய நிர்வாகக் குறைபாடுகளை கடுமையான குற்றவியல் தண்டனை அடிப்படையில் அணுகுவது அல்லது பரந்த அதிகாரங்களை ஒரே அரச அதிகாரியிடம் வழங்குவது போன்ற அம்சங்கள், அடிமட்டச் சமூக அமைப்புகளை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் அபாயத்தைக் கொண்டுள்ளன.