இலங்கையின் அண்மைய நாட்களில் வலுத்து வரும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் உலகளாவிய எரிசக்தி சந்தையின் பெரும் சக்தியாகத் திகழும் ரஷ்யாவுடன் இலங்கை மேற்கொண்டு வரும் புதிய இராஜதந்திர நகர்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
கொழும்புக்கு கடந்த வாரம் விஜயம் 11 ஆவது இலங்கை - ரஷ்ய இருதரப்பு அரசியல் கலந்தாராய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செய்த ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோவின் கருத்துக்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வெறும் வர்த்தக ரீதியானது மட்டுமல்ல, அதுவொரு நீண்டகால மூலோபாயப் பங்களிப்பை நோக்கியது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ரஷ்யாவைப் பொறுத்தவரை, இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு எரிபொருளை வழங்குவது என்பது தற்காலிக விற்பனை முயற்சி அல்ல. அதற்கான தேவைப்பாடும் ரஷ்ய அரசுக்கு கிடையாது.
மாறாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு மத்தியில் தனது பொருளாதாரச் செல்வாக்கை ஆசியப் பிராந்தியத்தில் நிலைநிறுத்திக்கொள்வதற்கான நீண்டகால வியூகமாகும்.
ரஷ்யாவிடம் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் அளவற்றவை அல்ல என்ற போதிலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் அந்த நாடு உறுதியாக உள்ளது.
குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் எரிபொருள் இறக்குமதியில் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றன.
இத்தகைய தருணத்தில் ரஷ்யாவிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதொரு தெரிவாக அமைகிறது. இருப்பினும், சர்வதேச அரசியல் சூழலில் அமெரிக்காவின் 'இரண்டாம் நிலைத் தடைகள்' குறித்த அச்சம் பல நாடுகளை ரஷ்யாவுடன் நெருங்குவதிலிருந்து தடுத்து வருகின்றன.
ஆனால், தற்போது அமெரிக்கா, ரஷ்ய எரிசக்தி மீதான சில தடைகளைத் தளர்த்தியுள்ள சூழலை இலங்கை போன்ற நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ரஷ்யாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரஷ்யா தனது எரிசக்தி விநியோகத்தை 'உடனடி சந்தை' விலையில் வழங்காமல், நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வழங்க விரும்புவது, இலங்கைக்கு எரிசக்தி விலைகளில் நிலையான தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க உதவும். இது உள்நாட்டுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தவிர்க்கவும் பேருதவியாக இருக்கும்.
இலங்கையின் நீண்டகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அணுசக்தி ஒரு சிறந்த மாற்றாக முன்வைக்கப்படுகிறது. ரஷ்யாவிடம் மட்டுமே உள்ள 'மிதக்கும் சிறிய அணுமின் நிலையம்' என்ற தனித்துவமான தொழில்நுட்பம் இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது.
பெரும் கப்பலில் பொருத்தப்பட்ட இந்த மின் நிலையம், நாட்டின் கடற்கரைக்கு அருகில் கொண்டு வரப்பட்டு தேவையேற்படும் போது மின்சாரத்தை வழங்க முடியும். நிலப்பரப்பில் அணுமின் நிலையங்களை அமைப்பதில் உள்ள இடப்பற்றாக்குறை மற்றும் சூழலியல் சார்ந்த எதிர்ப்புகளைத் தவிர்க்க இந்தத் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாகும்.
இலங்கை ஏற்கனவே ரஷ்யாவுடன் அணுசக்தித் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ள போதிலும், அவை இன்னும் நடைமுறைக்கு வராதது பெரிய குறைபாடாகும். இந்த விடயத்தில் இலங்கை மீது ரஷ்யாவுக்கு கடுமையான அதிருப்திகள் இன்னமும் நீடிக்கின்றன.
அதன் வெளிப்பாடகவே அண்மையில்,இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனை 'இலங்கையில் ரஷ்யா முதலீடுகளைச் செய்வதற்கு என்ன இருக்கின்றது?' என்ற கேள்வியை பகிரங்கமாகவே எழுப்ப வைத்திருந்தது.
இவ்வாறான நிலையில் ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோ, தற்போது தொழில்நுட்ப ரீதியாகவும் இயந்திர உபகரணங்கள் ரீதியாகவும் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறுதியளிப்பு நாட்டின் மின்சக்தித் துறையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காரணியாகும். இத்தகைய தொழில்நுட்பப் பரிமாற்றம் இலங்கையை பிராந்தியத்தின் சக்திவாய்ந்த பொருளாதார மையமாக மாற்ற உதவும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது.
எவ்வாறாயினும், குறித்த விடயங்கள் அடுத்தடுத்த கட்ட உரையாடல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்காலத்திட்டங்களாகவே உள்ளன. தற்போதைய நிலையில் இலங்கைக்கு அவசியமாகத் தேவைப்படுவது எரிசக்தியே.
அந்த விடயத்தில் ஆரம்பத்தில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனை நேரடியாக அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் எரிபொருள் விநியோக கோரிக்கையை பகிரங்கமாகவே விடுத்திருந்தார்.
உடனடியாகவே தகவல் மொஸ்கோவுக்கு வழங்கப்பட்ட நிலையில் தான், ரஷ்ய வலுசந்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் அவசரஅவசரமாக இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
அவரிடத்தில் நேரடியாகவே எரிபொருள் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா தயாராக இருக்கின்றபோதும் அதனை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கே தயாராக இருப்பதாக இலங்கைக்கு வெளிப்படுத்தப்பட்டது.
அத்தோடு ரூபிள் அல்லது யுவான் ஊடாகவே எரிபொருள் விநியோகத்துக்கான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு தயாராகவே இருப்பதாகவும் உறுதியாக வெளிப்படுத்தப்பட்டது.
ரஷ்யாவினுடைய வர்த்தகம் டொலர் அல்லது யூரோ போன்ற முக்கிய நாணயங்களிலிருந்து விலகி, மிக வேகமாக தேசிய நாணயங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
உலகளவில் டொலரின் ஆதிக்கம் குறைவதாக கருதும் ரஷ்யா சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தகத்தில் டொலரின் பங்கு சுமார் 67சதவீதமாக இருந்ததையும் தற்போது அது சுமார் 40சதவீதமாக குறைந்துள்ளமையுமை; சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே இலங்கையுடனான தனது வர்த்தகத்தை தேசிய நாணயங்களான ரூபிள் அல்லது யுவான் ஊடாக முன்னெடுப்பதிலிருந்து விலகி நிற்பதற்க ரஷ்யா தயாராக இல்லை.
இலங்கையைப் பொறுத்தவரை, டொலர் கையிருப்பு நெருக்கடிக்கு இதுவொரு சிறந்த தீர்வாக அமையும். ஆனால் இலங்கை டொலர், யுரோவில் தான் கொள்வனவுகளை எதிர்பார்க்கிறது.
அதேபோன்று 'அரசாங்கம் - அரசாங்கம்' என்ற அடிப்படையில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்க முடியும் என்றும் எதிர்பார்க்கின்றது.
ஆனால் ரஷ்யாவைப் பொறுத்தவரையில் ரூபிள் அல்லது யுவான் ஊடாக வர்த்தகம் இடம்பெறாது விட்டால் 'சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதற்காக தனியார் நிறுவனத்தின் ஊடாக வர்த்தகத்தை முன்னெடுத்தல்' என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதே திட்டமாக உள்ளது.
அதுகூட இன்னமும் உறுதியாகவில்லை. இலங்கையின் எரிபொருள் கோரிக்கையை மொஸ்கோ இன்னமும் பரிசீலனையிலேயே வைத்திருக்கின்றது. இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது குறித்து சாத்தியக்கூறுகளே அங்கு ஆராயப்படுகின்றன.
அத்தோடு, ரஷ்யாவின் எரிபொருட்களை தனியார் நிறுவனங்கள் ஊடாக முகவர்களை மையப்படுத்தியதாக கொள்வனவு செய்யப்படுகின்றபோது கொள்வனவு விலைகளில் கணிசமான அதிகரிப்பு காணப்படும். அது உள்நாட்டு எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது போகும்.
இத்தகைய சூழலில் இலங்கை அரசாங்கம் தற்போது வலுச்சக்தி அமைச்சு, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தொடர்பே இல்லாது போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ரஷ்யா எரிபொருளை வழங்கவுள்ளதாக ஊடக அறிவிப்புக்கள் மூலம் தீவிரமான பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால் யதார்த்தத்தினை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது, ரஷ்யாவைப் பொறுத்தவரையில் வலுச்சக்தி துறைக்கு பிரதான அமைச்சரை விடவும் நான்கு பிரதியமைச்சர்கள் காணப்படுகின்றார்கள். அதில் இலங்கைக்கு வருகை தந்திருந்த றோமன் மார்ஷவின் மூன்றாம் நிலையில் உள்ளவராவார்.
அதேபோன்று தான் ரஷ்யாவின் வெளிவிவகார துறைக்கு பிரதான அமைச்சரை விடவும் நான்கு பிரதியமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் இரண்டாம் நிலையில் உள்ள அன்ரே ருடென்கோவே இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
ஆகவே மேற்படி இரு அமைச்சர்களும் தீர்மானம் எடுக்கக்கூடிய 'தகைமை' உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இலங்கையில் நடைபெற்ற சந்திப்புக்களின் வெளிப்பாடுகளையும், கோரிக்கைகளையும் நேரடியாக மொஸ்கோவிடம் கொண்டு சேர்ப்பவர்கள் மட்டும் தான்.
அவ்விதமான நிலையில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கிடைப்பது உறுதியானது என்ற இலங்கை அரசாங்கத்தின் பிரசாரம் எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
இத்தகைய நிலையில் மொஸ்கோவுக்குச் சென்றிருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடுகின்றார். அவருடைய நோக்கமும் இலக்கும் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 'அரசாங்கம்-அரசாங்கம்' என்ற வகையில் எரிபொருள் கொள்வனவு உடன்பாட்டை எட்டுவதற்கான இணக்கப்பாட்டை அடைவது தான்.
ஆனால், பிமல் ரத்நாயக்கவைப் பொறுத்தவரையில் அவர் ஜே.வி.பியின் சீனப் பிரிவை கையாள்பவர்களில் முக்கியமான ஒருவர். ரஷ்யா, சீனா இடையே உறவுகள் சுமூகமாக காணப்பட்டாலும் சீன விவகாரங்களை கையாளும் ஒருவரை வைத்து ரஷ்யாவை நெருக்க முனைவது பிற்போக்கான இராஜதந்திர மூலோபாய அணுகுமுறையாகும்.
ஜே.வி.பியின் தலைமையகமான பெலவத்தையில் இருந்து ஒட்டுமொத்த கட்டமைப்பை நிர்வகிக்கும் முதிர்ச்சியான தோழர் ரில்வின் சில்வாவுக்கு மேற்படி அணுகுமுறை குறித்த புரிதல் கூட ஏற்படாது போனது என்பது ஆச்சரியம் தான்.

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!