இந்திய மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2026 ஜூலை 25 அன்று தனது பதவியை இராஜினாமா செய்த சம்பவம், இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்றும், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மாணவர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பணிந்தும் இந்த இராஜினாமா நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், இந்த அரசியல் நகர்வை நோக்கும் ஒரு முக்கியமான விவாதம் பல்வேறு தரப்பினர்களிடையேயும் மேலெழுந்துள்ளது. அதாவது குறித்த இராஜினாமா, எந்தவொரு அரசியல் பின்னணியும் இன்றி வீதியில் இறங்கிப் போராடிய மாணவர் சக்திக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியா?
அல்லது வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் சர்வதேசப் பின்னடைகளைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்த நுட்பமான தற்காப்பு அரசியல் வியூகமா?
அந்த வகையில் கல்வி அமைச்சரின் இராஜினாமாவை மேற்படி இரண்டு கோணங்களையும் மையப்படுத்தி ஆழமாக ஆராய்வது தற்போதைய இந்திய அரசியல் நிலைமையை புரிந்துகொள்வதற்கு வழிசமைக்கிறது.
அந்தவகையில் மாணவர்களின் பக்கத்திலிருந்து பார்க்கின்றபோது குறித்த இராஜினாமை முழுக்க முழுக்க மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க முடிகிறது.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து பணமதிப்பிழப்பு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் விவசாயத்துறைச் சட்டங்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
விவசாயத்துறை சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தவிர்த்து, எதிர்க்கட்சிகளோ அல்லது வெகுஜன அமைப்புகளோ கொடுத்த எந்தவொரு அழுத்தத்திற்காகவும் மத்திய அமைச்சரவையில் இருக்கும் மூத்த அமைச்சர் தனது பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டதில்லை.
'மோடி ஆட்சியில் இராஜினாமாக்கள் நடப்பதில்லை'என்ற பிம்பம் நிலவி வந்த சூழலில், வெறும் 36நாட்களில் ஒரு மத்திய அமைச்சரைப் பதவி விலக வைத்திருப்பது மாணவர் இயக்கத்தின் பேரலைக்குக் கிடைத்த அரிய வெற்றியாகும்.
1970களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் போராட்டத்திற்குக்கூட ஆட்சிய மாற்றத்தைக் கொண்டுவர மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன.
ஆனால், 2026இல் எந்தவொரு அரசியல் கட்சியின் நேரடி ஆதரவோ அல்லது மையப்பணித்தளமோ இன்றி, சமூக வலைதளங்கள் மற்றும் நியாயமான கோரிக்கைகளின் வழியே ஒன்றிணைந்த மாணவர்கள், அரசாங்கத்தைத் தங்களது கோரிக்கைக்குப் பணிய வைத்துள்ளனர்.
இப்போராட்டம் பெற்ற பிரம்மாண்டமான வடிவமும், அதற்கு நாடு முழுவதும் கிடைத்த ஆதரவும் தான் அரசை நிலைகுலைய வைத்தது. ஆரம்பத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம், ஜூலை 18 அன்று சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட பின்னரும், ஜூலை 20 அன்று பாராளுமன்றப் பேரணியில் பொலிஸார் நடத்திய தடியடிக்கு பின்னரும் காட்டுத்தீ போல பரவியது.
மும்பை, புனே, லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா போன்ற பெருநகரங்கள் மட்டுமன்றி, பிகாரின் சிவான், சப்ரா, ஜெஹானாபாத் போன்ற சிறிய நகரங்களிலும் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர்.
விளையாட்டு, கலை மற்றும் சினிமாத்துறை சார்ந்த பிரபலங்கள் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியதும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் 'புதிய தலைமுறை கேள்விகளை எழுப்புகிறது, அவர்களுக்கு நாம் தர்க்கரீதியான பதில்களை வழங்க வேண்டும்' என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டதும், இப்போராட்டம் வெறும் மாணவர் கோரிக்கையாக இல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுப் பிரச்சினையாக மாறியதை உணர்த்தியது.
இந்த மக்கள் அலைக்கு முன்னால் அரசால் தொடர்ந்து மௌனம் சாதிக்க முடியாமல் போனதே பிரதானின் விலகலுக்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்பது வெளிப்படையானது.
இரண்டாவதாக பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் நகர்வை மையப்படுத்தியதாக பார்க்கின்றபோது, இராஜினாமாவானது, மோடி அரசின் முதிர்ச்சியான அரசியல் வியூகம் மற்றும் 'சேதக் கட்டுப்பாடு' நடவடிக்கை என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.
அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்த போராட்டங்கள் எவ்வாறு ஆட்சியையே கவிழ்க்கும் அளவுக்குப் பெரும் கொந்தளிப்பாக மாறியது என்பதை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வந்தது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற இளைஞர் சார்ந்த பிரச்சினைகள் ஒன்றிணைந்து, நாட்டின் ஒட்டுமொத்தக் சட்டம்-ஒழுங்கிற்கும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக மாறுவதை அரசு விரும்பவில்லை.
இப்போராட்டம் மேலும் தீவிரமடைந்தால், அது கட்டுக்கடங்காத மக்கள் இயக்கமாக மாறி, ஆட்சியின் பிம்பத்தைச் சிதைத்துவிடும் என்பதை உணர்ந்த பிரதமர் மோடியும் அமித் ஷாவும், நிலைமையைச் சமாளிக்க பிரதானின் இராஜினாமாவை ஒரு தந்திரோபாயப் பலிகடாவாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
மேலும், வரவிருக்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களும் இந்த வியூகத்தின் பின்னணியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்களின் கொந்தளிப்புத் தொடருமானால், அது தேர்தல் முடிவுகளில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜக தலைமை கணக்கிட்டது.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இந்தப் போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நாடு தழுவிய அளவில் அரசை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்தன. அமைச்சரின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதன் மூலம், எதிர்க்கட்சிகளின் கைகளிலிருந்த முதன்மை அரசியல் ஆயுதத்தைப் பிடுங்கி எறிய அரசு முடிவெடுத்தது.
'நாங்கள் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்' என்ற செய்தியைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதன் மூலம், இழந்த நற்பெயரை மீட்டெடுக்கவும், வரவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு போன்ற முக்கிய பிரேரணைகளை எதிர்ப்பின்றி நிறைவேற்றவும் அரசுக்கு இந்த நகர்வு வாய்ப்பை வழங்கியுள்ளது.
அந்தவகையில், அமைச்சரின் இராஜினாமா என்பது மாணவர் போராட்டத்தின் உண்மையான வீரியத்தால் உந்தப்பட்டு, அரசின் அரசியல் சாதுரியத்தால் பூர்த்தி செய்யப்பட்ட நிகழ்வு என்பது தெளிவாகிறது.
மாணவர்களின் தடையற்ற எழுச்சியும், நாடு தழுவிய எதிர்ப்பும் இல்லையென்றால் மோடி அரசு நிச்சயமாக இந்த முடிவை எடுத்திருக்காது; அந்த வகையில் இது மாணவர் சமூகத்தின் வரலாற்று வெற்றியாகும்.
அதேநேரத்தில், போராட்டத்தின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, அது அரசாங்கத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் நிலைக்குச் செல்வதற்கு முன்பாகவே, ஒரு அமைச்சரின் இராஜினாமா மூலம் நிலைமையைத் தணித்தது மோடி அரசின் சமயோசிதமான அரசியல் வியூகமாகும்.
ஆகவே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது வெறுமொரு தனிநபரின் பதவி விலகல் மட்டுமல்ல. அது இந்திய ஜனநாயகத்தில் மக்கள் சக்தியும், ஆட்சியாளர்களின் தந்திரோபாய அரசியல் நகர்வுகளும் ஒன்றுக்கொன்று மோதித் தீர்த்துக்கொண்ட சமநிலைப் புள்ளியாகும்.
மாணவர்கள் தங்களது உரிமையை வென்றெடுத்ததாகக் கொண்டாடும் அதேவேளையில், மத்திய அரசு பெரும் அரசியல் நெருக்கடியிலிருந்து தந்திரமாகத் தப்பியுள்ளது. இந்த நிகழ்வு, வருங்காலங்களில் மக்கள் போராட்டங்களைக் கையாள்வதில் அரசாங்கங்களுக்கும், தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதில் இளைஞர் சமுதாயத்திற்கும் ஒரு புதிய வழிகாட்டியாகவும் பாடமாகவும் என்றும் நிலைத்து நிற்கும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!