இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில், காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம், சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து முதலில் தகவல்கள் வெளியானபோது, அது ஒரு சாதாரண விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்பதில் தெளிவற்ற நிலை காணப்பட்டது. இருப்பினும், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு மற்றும் ஈரானின் ஆவேசமான பதிலடி ஆகியன இச்சம்பவத்தை ஒரு சர்வதேச இராணுவ மோதலாக மாற்றியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை 5.08 மணியளவில், இலங்கை கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு முதன்முதலில் தகவல் கிடைத்தது. அப்பகுதியில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், மனித உடல்கள் கடலில் மிதப்பதாகவும் கிடைத்த தகவலையடுத்து, இலங்கை கடற்படை மற்றும் சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன இணைந்து ஒரு மணிநேரத்திற்குள் துரித மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தன.

இந்த ஆரம்ப கட்டத்தில், ஒரு தாக்குதல் நடந்ததா என்பதை ஆராய்வதை விட, மனிதாபிமான அடிப்படையில் கடலில் தத்தளிப்பவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதையே இலங்கை கடற்படை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. சர்வதேச கடல்சார் சட்டங்களின் பிரகாரம், தனது கடற்பரப்புக்கு அருகில் ஆபத்தில் சிக்கியுள்ள எவருக்கும் உதவி வழங்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.

இந்த மீட்புப் பணியின் போது, கப்பலில் இருந்தவர்களில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, இதுவரை 90 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உடல்களைப் பாதுகாத்து வைப்பதற்கான போதிய குளிரூட்டப்பட்ட வசதிகள் அரச வைத்தியசாலைகளில் இல்லாத காரணத்தால், தனியார் துறையிடமிருந்து குளிரூட்டப்பட்ட கொள்கலன்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஈரானிய கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் விடுத்த உத்தியோகபூர்வ அறிவிப்பு உலக நாடுகளை அதிரவைத்தது. பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஈரானின் 'ஐரிஸ் டெனா' போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களிலொன்றான 'மார்க்-48' 'டொர்பிடோ' ஏவுகணையைப் பயன்படுத்தித் தாக்கி அழித்ததை உறுதிப்படுத்தினார்.

இதனை 'அமைதியான மரணம்' என்று வர்ணித்த அவர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்த முதல் வரலாற்று நிகழ்வு இதுவென்றும் குறிப்பிட்டார். ஈரானின் முக்கியமான இந்தக் கப்பல், இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மிலான் 2026' சர்வதேச கடற்படை ஒத்திகையில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்கா தனது எல்லையிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தை இழைத்துள்ளதாகச் சாடியுள்ளார். இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

அதுமட்டுமன்றி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தத் தாக்குதலை 'கடல்சார் பயங்கரவாதம்' என்று வர்ணித்ததுடன், இதற்கான விலையை அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், இச்சம்பவத்தை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஆளும் தரப்பினர், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும், மத ரீதியான அல்லது அரசியல் ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் போலியான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தற்போது நிலவும் சர்வதேசப் பதற்றமான சூழலில், ஒரு சமூகத்தினரை ஆத்திரமூட்டும் வகையிலான கருத்துக்கள் தேவையற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெருக்கடிகளை உருவாக்கக்கூடும் என்பதால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.

இச்சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், 'ஐரிஸ் புஷேர்' என்ற மற்றொரு ஈரானிய கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி கோரியது. ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவிய போதிலும், மனிதாபிமான அடிப்படையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை குறித்து இலங்கை அரசாங்கம் அண்டை நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் தொடர்ந்து ஆலோசனைகளை முன்னெடுத்து நிலையில் அந்த அனுமதி வழங்கப்பட்டது. குறித்த கப்பலில் 208பேர் உள்ள நிலையில் அவர்கள் பாதுகாப்பாக கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஈரானியக் கப்பல் தகர்ப்பு என்பது சர்வதேச வல்லரசுகளின் மோதல் களமாக இந்தியப் பெருங்கடல் மாறி வருவதைக் காட்டுகிறது. இலங்கை தனது சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றி வரும் அதேவேளை, இப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பாரிய சவாலையும் எதிர்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள புவிசார் அரசியல் உண்மைகளை ஆராயும்போது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வல்லரசுகளின் அதிகாரப் போட்டி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளதை உணர முடிகிறது.

ஈரானியப் போர்க்கப்பல் மீதான இந்தத் தாக்குதலானது, வெறும் ஒரு கப்பலை அழிப்பது மட்டுமல்லாமல், சர்வதேச கடற்பரப்பில் ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் ஒரு நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் மிகக் கவனமான ஒரு 'நடுநிலை' இராஜதந்திரத்தைக் கையாண்டு வருகிறது. ஒருபுறம் மனிதாபிமான அடிப்படையில் உயிருடன் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்குச் சிகிச்சை அளிப்பதும், மறுபுறம் உயிரிழந்த 90 பேரின் உடல்களைத் தனது மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மத்தியிலும் கௌரவமாகப் பாதுகாப்பதும் இலங்கையின் மனிதாபிமான முகத்தைக் காட்டுகிறது.

அதேவேளை, இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ச்சியான ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஈரானின் கப்பல்கள் தொடர்பான இந்தச் சோகமான நிகழ்வு, சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு என்பது எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்தியுள்ளது. வல்லரசுகளின் மோதல் போக்கினால் அப்பாவி மாலுமிகள் உயிரிழப்பதும், சிறிய நாடுகள் அதன் விளைவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதும் கசப்பான உண்மையாகும்.

இலங்கை தனது கடற்பரப்பை அமைதி வலயமாகப் பேணுவதில் உறுதியாக இருந்தாலும், இத்தகைய உலகளாவிய மோதல்கள் அதன் வாசற்படி வரை வந்துள்ளமை, எதிர்காலத்தில் இன்னும் பலமான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர வியூகங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.