நாட்டின் சிறைச்சாலை வரலாற்றை உற்றுநோக்கினால், அவை வெறும் சீர்திருத்தக் கூடங்களாக அல்லாமல், அவ்வப்போது இரத்தம் சிதறும் களறிகளாக மாறிய கொடூர வரலாறுகளையே அதிகம் காண முடிகிறது.
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை, 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், 2020 ஆம் ஆண்டு மகர சிறைச்சாலை கலவரம் எனத் தொடரும் கறைபடிந்த வரலாற்றின் புதியதொரு கோரப் பக்கமாக நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை இணைந்துள்ளது.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் வெடித்த வன்முறையானது, 8 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேரின் உயிர்களைப் பலிகொண்டு, நூற்றுக்கும் மேற்பட்டோரை காயமடையச் செய்து, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் நீதிக்கட்டமைப்பின் மீது விழுந்த பெரும் கறையாக மாறியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அரங்கேறிய இக்கொடூரச் சம்பவம், திடீரென உணர்ச்சிவசப்பட்டு ஏற்பட்ட ஒரு வன்முறை அல்ல் மாறாக, அது சிறைக்குள் இருந்தே இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் மிகத் திட்டமிட்ட சதி என்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முதற்கட்ட விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. 'சுரேஷ்' மற்றும் 'பூருமூனா' உள்ளிட்ட 13 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த வன்முறையின் பின்னணியில் மூளையாகச் செயற்பட்டுள்ளனர்.
மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கைகளுக்குப் பல அதிநவீன ஆயுதங்கள் கிடைத்துள்ளமையாகும்.
இந்த ஆயுதங்கள் எவ்வாறு பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலைக்குள் கடத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து பொலிஸார் தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், நீர்கொழும்பு சிறைச்சாலையின் சொந்த ஆயுதக் களஞ்சியசாலையில் உள்ள ஆயுதங்கள் குறித்தும், அங்கிருந்து ஏதேனும் முறைகேடாகக் கைதிகளின் கைகளுக்குச் சென்றதா என்பது குறித்தும் விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்காகச் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளைப் பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை சிறை வன்முறைகளின் வரலாற்றில், கலவரங்களில் ஈடுபடும் கைதிகள் மீது இவ்வளவு பாரிய அளவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை இதுவே முதல்முறையாக இருக்கலாம். இந்த வன்முறைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 200 கைதிகளுக்கு எதிராக 'மனிதப் படுகொலை' குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவாக்கு இது பற்றிக் குறிப்பிடுகையில், விசாரணைகளின் நிறைவில் இந்த வன்முறையுடன் தொடர்புடைய கைதிகள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மறுபுறம் நாட்டின் புலனாய்வு மற்றும் சட்ட அமுலாக்கல் கட்டமைப்புகளின் பலவீனமும் இங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடல் மார்க்கமாகப் போதைப்பொருட்களுடன் கடத்தி வரப்பட்ட 10,804 ஆயுதங்கள் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டாலும், இத்தகைய பாரிய ஆயுதப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ள போதாமையையே இச்சம்பவம் காட்டுகிறது.
மேலும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைக் கையாண்டு சான்றுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டிய அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் கடுமையான உத்தியோகத்தர் பற்றாக்குறையும், நீதியை நிலைநாட்டுவதில் உள்ள முட்டுக்கட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான மோதலில், தப்பியோட முயன்ற கைதிகளைத் தடுத்து, பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய முயன்ற போது 8 சிறைச்சாலை அதிகாரிகள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். மேலும் 7 அதிகாரிகள் படுகாயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கொடுப்பனவு மட்டுமே எனச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் தியாகத்தைக் கருத்திற்கொண்டும், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதியும், மேலும் 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நட்டஈட்டுத் தொகையை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன், உயிரிழந்த அதிகாரிகள் அனைவரதும் இறுதிக்கிரியைகள் அரசாங்கத்தின் முழுமையான செலவிலேயே நடத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்த அதிகாரிகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை சிறைச்சாலைகளில் தற்போதிருக்கும் பிரதான நெருக்கடி, அதன் கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதேயாகும். இந்த அதிகளவான நெரிசல் மற்றும் போதைப்பொருள் மாபியாவே இத்தகைய வன்முறைகளுக்கு அடிநாதமாக அமைகின்றன.
தற்போது நாட்டின் 16 பிரதான சிறைச்சாலைகளில் இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அந்தச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நீதியமைச்சிற்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த நெரிசலைக் குறைக்கும் முகமாக, சிறு குற்றங்கள் மற்றும் சிறிய அளவிலான போதைப்பொருள் பாவனைக்காகக் கைது செய்யப்படுபவர்களைச் சிறைகளில் அடைத்து வைப்பதற்குப் பதிலாக, அவர்களைப் புதிய தொழில்நுட்ப உத்திகளுடன் 'வீட்டுக்காவலில்' வைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இது போன்ற முற்போக்கான சட்டச் சீர்திருத்தங்கள் தசாப்தங்களாகக் கோரப்பட்டு வந்த போதிலும், அவை இன்னும் நடைமுறைக்கு வராததே இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணமாகும்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை என்பது வெறுமனே ஒரு சில கைதிகளின் வன்முறை குணம் சார்ந்த பிரச்சினையல்ல. அது இலங்கையின் சிறைச்சாலை நிர்வாகம், உளவுத்துறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீதித்துறையில் நிலவும் நீண்டகாலக் குறைபாடுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்.
200 கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றம் சுமத்துவதோ அல்லது தற்காலிகமாகப் பாதுகாப்பு வளையங்களை அதிகரிப்பதோ மட்டும் இதற்கான நிரந்தரத் தீர்வாகாது.
சிறைச்சாலைக்குள் ஆயுதங்களும் போதைப்பொருட்களும் எவ்வாறு தடையின்றி நுழைகின்றன என்ற வேர் வரை சென்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நட்டஈடு அவர்களின் இழப்பை ஈடுசெய்யப் போவதில்லை என்றாலும், இனிவரும் காலங்களில் இத்தகையதொரு கொடூரம் எந்தவொரு சிறைச்சாலையிலும் நிகழாமல் தடுப்பதே அந்த அதிகாரிகளின் தியாகத்திற்கு அரசு செய்யும் உண்மையான மரியாதையாகும்.
வீட்டுக்காவல் போன்ற மாற்றுச் தண்டனை முறைகளை உடனடியாகச் சட்டமாக்கி, சிறைகளின் நெரிசலைக் குறைத்து, சிறைத்துறையைத் தூய்மைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இலங்கையின் சிறை வரலாறு மேலும் பல குருதி படிந்த கறைகளைத் தன் மீது சுமக்க வேண்டியேற்படும்.
குறிப்பாக, கடந்த வாரம் வெலிக்கடையில் ஐந்து சிறைக்கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைநத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையானது சிறைகளுக்குள் இன்னமும் நிலைமைகள் சுமூகமாகவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!