சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற உன்னதமான பெயரின் கீழ், மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசு தன்னிச்சையாகத் தலையிடுவதானது, இலங்கையின் அடிப்படை அரசியலமைப்பிற்கு முரணானது மட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாக சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அதிகாரப்பகிர்வு கட்டமைப்பைத் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தும் ஆபத்தான அரசியல் நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 25ஆம் திகதி தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி சமர்ப்பித்து, அதனை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்றத்தின் அனுமதியைக் கோரியபோது, இச்சட்டமூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களுடன் நேரடியாக முரண்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி கடுமையாக எதிர்த்தன.

இச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் மாகாண சபைகளின் நிலைப்பாட்டைக் கேட்டிருக்க வேண்டும் என்றும், தற்போது அவை இயங்காத நிலையில் இருப்பதால் குறைந்தபட்சம் ஆளுநர்களிடமாவது வினவியிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சியினர், எதனையும் செய்யாது தன்னிச்சையாக அதிகாரங்களைப் பறிக்க அரசு முற்படுவதாகக் குற்றம் சாட்டினர்.

விவாதத்தின் முடிவில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வாக்கெடுப்பைக் கோரிய நிலையில், இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டு, 103 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் இதனை நிறைவேற்றியது.

இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்த நிலையில், எதிராக இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்களித்தன. அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மாகாண சபைகளுக்கு எதிராகவுள்ள விடயங்களை மட்டும் எதிர்ப்பதாகத் தெரிவித்துவிட்டு சபையிலிருந்து வெளியேறியதுடன், அர்ச்சுனா எம்.பி, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தொழிலாளர் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இயற்கை என்பது மனித வாழ்வுடன் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்தது என்பதும், எமது சுயநல அழிவுகளின் விளைவுகளை இன்று காலநிலை மாற்றங்களூடாக ஒட்டுமொத்த உலகமும், இலங்கை நாடும் நேரடியாக அனுபவித்து வருகின்றது என்பதும் மறுக்க முடியாத எதார்த்த உண்மையாகும்.

அதற்கமைய, எதிர்கால சந்ததிக்காக எமது இயற்கை வளங்களை நன்முறையில் கையாள வேண்டியதும், காடுகளைப் பாதுகாக்க வேண்டியதும் எமது கூட்டுப் பொறுப்பாகும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனினும், நாட்டின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பானது ஒன்பதாவது அட்டவணையின் முதலாம் நிரலான மாகாண சபை நிரலுடனும், மூன்றாம் நிரலான இணைந்த நிரலுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒரு விடயமாகும்.

குறிப்பாக, முதலாம் நிரலில் உள்ள உள்ளூராட்சி விடயப்பரப்பானது முற்றுமுழுதாக மாகாண சபைக்குரியதுடன், அதன் 37ஆவது விடயப்பரப்பின் கீழ் மாகாணத்தின் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணத்திற்கே உரியதாக சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இணைந்த நிரலிலும் அது இருதரப்புக்கும் சமமாகப் பகிரப்பட்ட அதிகாரமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு தெளிவான பின்னணியில், ஒன்பதாம் அட்டவணையைத் திருத்துவதற்கோ அல்லது நீக்குவதற்கோ ஏதேனும் சட்டமூலம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டுவரப்பட முன்னர், அரசியலமைப்பின் 154() 2 பிரிவின்படி மாகாண சபைகளின் கருத்துக்களைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அவர்கள் வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் போது அத்தகைய எந்தவொரு ஜனநாயக வழிமுறைகளும் பின்பற்றப்படாமல், சட்டமா அதிபரின் எழுத்துமூல அனுமதியைக் காட்டி மாகாண சபைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது சட்டரீதியான வடிவம் போலத் தோன்றினாலும், நாட்டின் அடிப்படை அரசியலமைப்பின் ஆன்மாவிற்கும், மாகாணங்களின் தன்னாட்சி உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு அப்பட்டமான செயலாகும்.

கடந்த காலத்தில் 'திவிநெகும' சட்டத்தின் மூலம் மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்டபோது கூட, மாகாண சபைகளுக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டே அச்செயல் அரங்கேறியது; ஆனால் இன்று அத்தகைய அறிவித்தல் கூட இன்றி, நடைமுறையில் உள்ள சட்டங்களைச் சரியாக அமல்படுத்த ஆவன செய்யாத மத்திய அரசு, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் தன்னிச்சையாகத் தன்வசப்படுத்தியுள்ளது.

இது அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை பகிரங்கமாக மீறுவதோடு, இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் மறைமுகமான வேலைத்திட்டமாகும். உண்மையில், இப்போதுள்ள சுற்றுச்சூழல் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தேவையான நிதி மற்றும் மனிதவள ஒதுக்கீடுகள் மாகாணங்களுக்கோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களுக்கோ வழங்கப்படவில்லை.

மனிதக் கழிவுகளை முறையாகக் கையாள்வதற்கும், ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கும் மிக நெருக்கமான அதிகார அமைப்பாக இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்த அரசாங்கம் எந்த காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கனிமங்கள் அகழ்வது, மணல் மற்றும் கருங்கல் அகழ்வு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்கள் முறையான ஒழுங்குபடுத்தலின்றி அரச அனுமதியுடனேயே தடையின்றி நடைபெற்றுப் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

உதாரணமாக, வவுனியாவின் வடகிழக்கில் குடியேற்றப்பட்ட மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய மாற்றுத் திட்டங்கள் சாத்தியமாக இருந்தபோதும், எந்தவிதமான சுற்றுச்சூழல் கரிசனையும் இல்லாது, 'கிவுலோயா நீர்ப்பாசன திட்டத்திற்காக' 2026ஆம் ஆண்டின் பாதீட்டில் பணத்தைதுக்கி, பல ஆயிரம் ஏக்கர் அடர்ந்த காட்டை அழிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல, வவுனியா பம்பைமடுவில் பல ஏக்கர் ஒதுக்குக் காடுகள் சில வியாபாரிகளால் வனவள திணைக்களத்தின் தார்மீக ஒத்துழைப்புடன் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களைத் தமது சொந்தக் காணிகளில் மீளக் குடியேற விடாது தடுக்கும் வனவள திணைக்களம், இவ்வளவு பாரிய காடழிப்பு மற்றும் மரக்கடத்தல்கள் நடைபெறும் போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக மௌனம் காப்பது ஏன் என்ற பலத்த கேள்வி எழுகிறது.

இதன் பின்னணியில் பாரிய பணப்பரிமாற்றங்கள் மறைந்துள்ளன என்பதுடன், பிரதான வீதிகளில் உள்ள நிழல் தரும் பெரிய மரங்கள் வெட்டி அகற்றப்படும்போது அதற்குப் பதிலாக புதிய மரங்களை நடுவதற்கு எந்தவொரு திணைக்களமும் பொறுப்புடன் முன்வருவதில்லை.

மேலும், புத்தளத்தில் இருந்து மன்னார் செல்லும் பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக 90 கிலோமீற்றர் தூரம் சுற்றிக்கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் வீணாக எரிக்கப்படும் எரிபொருளினால் சூழலுக்கு ஏற்படும் கார்பன் பாதிப்புகள் மற்றும் காற்று மாசு குறித்து மத்திய சுற்றாடல் அமைச்சு எந்தவொரு கரிசனையும் கொள்ளவில்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் போலிச் சாட்டில் உள்நோக்கங்கள் கொண்ட பல அரசியல் முடிவுகள் உள்ளூர் அதிகாரிகளுடனோ அல்லது அப்பகுதி மக்களோடு எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமலோ தன்னிச்சையாக எடுக்கப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாகப் பிரகடனப்படுத்தியதால், அங்கு வாழும் மக்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது தங்களின் சொந்தப் பகுதிக்குள் தொழில் செய்வதற்கு அனுமதிச் சீட்டு பெற வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.

அதேபோல, மடு பிரதேசத்தில் உள்ளுர் மக்களின் வாழ்வியலையும் கலாசார ஒழுங்குகளையும் கருத்தில் கொள்ளாது, வனவிலங்கு சரணாலயமாக இருந்த பிரதேசத்தை 'மடு தேசிய பூங்காவாக' அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இப்பிரகடனப் பகுதிக்குள் 200 கிலோமீற்றருக்கும் அதிகமான உள்ளுர் வீதிகளும், மக்களின் குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் அமைந்துள்ளதால், தற்போது வீதிப் பராமரிப்பு முதல் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை மக்கள் கடுமையான சட்ட நெருக்குவாரங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசு மேலும் மேலும் பறித்தெடுக்கக் கூடாது. புதிய சட்டங்களைத் திருத்துவதை விடுத்து ஏற்கனவே இருக்கும் சட்டங்களை முழுமையாகவும் நேர்மையாகவும் நடைமுறைப்படுத்த முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளுர் மக்களையும், மாகாண அமைப்புகளையும் முதன்மைப் பங்காளிகளாகக் கொண்ட ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கொள்கையே உண்மையான பாதுகாப்பையும், நிலையான அபிவிருத்தியையும், எதிர்கால சந்ததியினரின் நலனையும் ஒருசேர உறுதிப்படுத்தும் என்பதால், மாகாண சபை அதிகாரங்களை முடக்கும் மத்திய அரசின் இத்தகைய மத்தியமயமாக்கல் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது.

இவ்வாறான தொடர்ச்சியான அதிகாரப் பறிப்புகள் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை மேலும் பின்னோக்கித் தள்ளுவதுடன், மாகாணங்களுக்குரிய சுயநிர்ணய உரிமைகளை முழுமையாக மழுங்கடித்து, நாட்டை மீண்டும் ஒரு ஒற்றையாட்சி ஏதேச்சாதிகாரத்தை நோக்கியே இட்டுச் செல்லும் என்பதால், இந்தத் தன்னிச்சையான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முழுமையாக எதிர்க்க வேண்டியது அவசியமாகிறது.