இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நோயல் பிரியந்த இராஜினாமா செய்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றின்போது இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அத்துடன், மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
குடும்பமொன்றுக்கு மின் கட்டணத்தை செலுத்த முடியாததால், அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்திருந்தது.
இந்நிலையில் தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்காக அயல் வீட்டில் இருந்து, அவர்களின் அனுமதியுடன் தமது வீட்டுக்கு மின்சாரம் எடுக்க முற்படுகையில் மின்சாரம் தாக்கி, தந்தை உயிரிழந்தார். கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர், பொறுப்பற்ற விதத்தில் பதில்களை வழங்கி இருந்தார்.
“ பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு கட்டாயம் மின்சாரம் தேவையில்லை , மண்ணெண்ணெய் விளக்குகளின் வெளிச்சம் போதுமானது, நாங்களும் அப்படிதான் கல்வி கற்றோம். அவர்களுக்கு ஏன் மின்சாரம் தேவை? அவர்கள் ஏன் ஆடைகளை அயர்ன் செய்ய வேண்டும்? கைத்தறி ஆடைகளை அணிய சொல்லுங்கள்…” என்று அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதேவேளை, மலையகத்தில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் அவர் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
“என்னுடன் தோட்டங்களுக்கு வாருங்கள். அந்த மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆண்டகள் இரண்டு மணிக்கு எல்லோரும் குடிபோதையில் இருக்கிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் அதிகார தொனியிலேயே பதில்களை வழங்கி இருந்தார். மனித நேயம் என்பதை காணமுடியவில்லை.
இந்நிலையில் அவரின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்தன. இவ்விவகாரம் அரசியல் களத்திலும் பேசுபொருளானது.
“ பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிட்டுள்ள மின்சார சபை ஊடகப்பேச்சாளரின் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்,
“ பிரியந்தவின் கூற்று அரசாங்கத்தின் அல்லது மின்சார சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை, அது அவரின் தனிப்பட்ட கருத்து. அதே நேரத்தில் அரசுக்கு சொந்தமான மின்சார விநியோக நிறுவனத்தின் நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
தான் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்ப்புகள் வலுத்ததால் , அது தொடர்பில் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பகிரங்க மன்னிப்பு கோரினார். அத்துடன், ஊடகப் பேச்சாளர் பதவியையும் துறந்தார்.
இது போதாது, எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியதுபோல் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதுவரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். மாறாக சமாளிப்பு தனத்துக்காக ஊடகப்பேச்சாளர் பதவியை துறந்து பயன் இல்லை.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!