இலங்கையில் தெற்கு அரசியல் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. இது தேர்தல் வருடம் என்பதால் அரசியல் கட்சிகளும் விழிப்பாகவே உள்ளன. எனினும், முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது.
அரசமைப்பின் பிரகாரம் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 இற்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாக வேண்டும். அதேபோல தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்கள் கடந்துள்ளதால் எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
இந்நிலையில் இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசுக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது.” – என்பதே கம்மன்பில வெளியிட்ட தகவலாகும்.
“ ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்வரை பொதுத்தேர்தலை நடத்தாதிருக்கும் திட்டத்திலேயே ஜனாதிபதி உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சிக்கு ஏற்படும் பின்னடைவை தவிர்த்துக்கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை பெற்றுக்கொள்வதற்கு பஸில் ராஜபக்ச முயற்சித்துவருகின்றார். ஜனாதிபதிக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
எனவே, இரு தரப்புக்கும் சிக்கல் இல்லாதவகையில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசுக்குள் தீவிரமாக பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. மிகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் கிடைத்தது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய வேட்புமனு தாக்கல் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் நாளிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தால் இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முடியும்.” என்ற சட்டவிளக்கத்தையும் கம்மன்பில வழங்கியுள்ளார்.
இவ்விரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதால் ஜனாதிபதிக்குபோலவே மொட்டு கட்சிக்கும் சாதகமாக அமையும். ஜனாதிபதி மற்றும் மொட்டு கட்சியினருக்கு எது சாதகம் என்பதைவிட நாட்டுக்கு எது நல்லது என்பது பற்றியே நாம் பார்க்கவேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைப்பதாக தெரியவில்லை. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். ஜனாதிபதியால் தனது பதவிகாலத்தில் இரண்டரை வருடங்கள் செல்லும்வரை நாடாளுமன்றத்தையும் கலைக்க முடியாது. இதனால் நாட்டில் அரசியல் ஸ்தீரமற்ற தன்மை உருவாகலாம்.
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்பட்டு, அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் நெருக்கடி நிலை ஏற்படாது.” – எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் கருத்து வெளியிட்டுள்ளார்.
“ இவ்வருடம் ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் என்பன நடத்தப்படும். இவ்விரு தேர்தல்களையும் முடிந்தால் ஒரே நாளில் நடத்துமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் கிட்டும்.
ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது நல்லம். அதன்மூலம் செலவுகளையும் குறைத்துக்கொள்ளலாம். எந்தவொரு கட்சிக்கும் அநீதியும் ஏற்படாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரை இவ்வாறு பிரதான இரு தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!