வரிகளை விதித்து மக்களை வதைக்கும், கடுமையான சட்டங்களை இயற்றி ஜனநாயகத்தை ஒடுக்கும் ரணில் – ராஜபக்ச அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால பெரும் பதற்றம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கண்ணீர் புகை தாக்குதலுக்கு இலக்கானார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உட்பட போராட்டக்காரர்கள் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தெரிவித்தனர்.
மாற்றத்தை ஏற்படுத்தும் 2024 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் நாட்டில் பல பாகங்களில் இருந்து வந்து மக்கள் பங்கேற்றிருந்தனர்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் பேரணி இன்று முற்பகல் ஆரம்பமாகி, முன்னோக்கி நகர்வதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டவேளை, அவர்களை கலைப்பதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
பெருமளவான பொலிஸாரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை தாக்குதலுக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றனர். போராட்டக்காரர்கள் கொள்ளுபிட்டிய நோக்கி செல்வதை தடுக்க வீதித்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல தடவைகள் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை குண்டு தாக்குதல்களை நடத்தினர். இதனால் வீதியில் சென்ற மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அதேவேளை, கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. சில வீதிகளுக்கு உள் நுழைவதற்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகள் பொலிஸாரால் பெறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை மதித்தே செயற்பட்டதாகவும், தடை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு அழைப்பு
இப்போராட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, அரசை கடுமையாக விமர்சித்தார். அரச பயங்கரவாத செயற்பாடுகளைக் கண்டு அஞ்சப்போவதில்லை எனவும் முதுகெலும்பிருந்தால் தேர்தலை நடத்துமாறும் அரசுக்கு சவால் விடுத்தார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!