ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான மொட்டு – யானை கூட்டரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு மேலதிக 41 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்ற உ றுப்பினர் சிவி விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, அநுரபிரியதர்சன யாப்பா உள்ளிட்டோரும் ஆதரவாக வாக்களித்தனர். வடிவேல் சுரேசும் ஆதரித்திருந்தார். அமைச்சு பதவி பறிக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க எதிர்த்து வாக்களித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளும், எதிரணி பக்கம் உள்ள முஸ்லிம் கட்சிகளும் எதிராக வாக்களித்தன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் (21) ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நவம்பர் 22 ஆம் திகதி ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.