கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையானது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள், அரசாங்கத்தின் எதிர்காலக் கொள்கைகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட நம்பிக்கையான அழைப்பு ஆகியவற்றைத் தெளிவாக வெளிப்படுத்தியது.

'மாறிவரும் உலகப் பொருளாதாரத்திற்குள் இலங்கையை நிலைநிறுத்துதல்' என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இம்மாநாடு, போருக்குப் பிந்தைய மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டுவரும் இலங்கையின் வளர்ச்சிப் பாதையில் உள்ள அத்தியாவசியத் தேவைகளை அப்பட்டமாகப் படம் பிடித்துக்காட்டியது.

ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படையான நிர்வாக முறைமை, சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு உகந்த பாதுகாப்பான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக உறுதியளித்தாலும், நடைமுறையில் நாடு எதிர்கொள்ளும் மூலோபாயத் தடைகளும் சவால்களும் சாதாரணமானவை அல்ல என்பதை அவரது பதில்களும் புள்ளிவிபரங்களும் ஆழமாக உணர்த்துகின்றன.

இலங்கை முகங்கொடுக்கும் மிக முக்கியமான மற்றும் சவாலான மூலோபாயத் தடை கிராமப்புற வறுமையாகும். உலக வங்கி அறிக்கையின்படி 16.9 சதவீதமாக இருக்கும் கிராமப்புற வறுமையை ஒழிப்பது என்பது வெறும் கட்டிடங்களை எழுப்புவதோ அல்லது வீதிகளை அமைப்பதோ போன்ற குறுகிய கால இலக்கல்ல என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

பல தசாப்தங்களாக வணிகப் பொருளாதாரமாக மாற்றப்படாமல் வெறும் வாழ்வாதார மட்டத்திலேயே தேங்கி நிற்கும் இலங்கையின் விவசாயத்துறை, கிராம மக்களுக்குப் போதுமான புதிய பொருளாதார வாய்ப்புகளை வழங்கத் தவறியுள்ளது. கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பிணையற்ற கடன் திட்டங்கள், சிறிய குளங்கள் புனரமைப்பு மற்றும் 'பிரஜா சக்தி' வேலைத்திட்டம் போன்றவற்றுக்காக நூறு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியிருந்தாலும், மூலதனமும் புதிய தொழில்நுட்பமும் இல்லாத கிராமியச் சமூகத்தை நவீன பொருளாதார ஓட்டத்துடன் இணைப்பது நீண்டகாலப் போராட்டமாகும்.

அதுமட்டுமின்றி, அஸ்வெசும திட்டத்தின் கீழ் சுமார் 05 மில்லியன் மக்கள் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பில் தங்கியிருப்பதும், நேரடித் தரவு கட்டமைப்பு பலவீனமாக இருப்பதனால் மானியங்களை மிகத் துல்லியமாக உரிய இலக்கிற்கு வழங்க முடியாமல் போவதும் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் உள்ள பாரிய இடைவெளிகளை வெளிக்காட்டுகின்றன.

இரண்டாவதாக, முதலீடுகளை ஈர்ப்பதிலும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதிலும் உள்ள மூலோபாயத்தடை அரச கொள்முதல் நடைமுறைகளிலும் காலாவதியான சட்டக்கட்டமைப்புகளிலும் தங்கியுள்ளது.

கடந்த காலங்களில் ஊழலைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கடினமான சட்டங்கள் காரணமாக, இன்று எந்தவொரு அவசரமான பணியையும் அல்லது நவீன மென்பொருள் கட்டமைப்புத் தீர்வுகளையும் விரைவாகக்கொள்வனவு செய்ய முடியாத முடக்கம் ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, கடந்த காலங்களில் மூலதனச் செலவுகளில் முறையே 64சதவீதம் மற்றும் 54சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டமை இந்த நிருவாகத் தடையின் தீவிரத்தை விளக்குகிறது. எனினும், வரும் காலங்களில் இணைவழி கொள்முதல் முறைக்கு மாறுவது, திறமை வாய்ந்தவர்களை அரச சேவையில் தக்கவைப்பது மற்றும் ஜனவரி மாதமளவில் கேள்வி விலைமனுக்கோரல் பத்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றாலும், பல ஆண்டுகளாகத் தேங்கி நிற்கும் சுங்கச் சட்டங்கள், அரச நிறுவன சட்டங்கள் மற்றும் புதிய தொழில் சட்டங்கள் ஆகியவற்றைத் துரிதமாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிச் நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்திற்கு இருக்கும் உடனடிச்சவாலாகும்.

மூன்றாவதாக, நாட்டின் எரிசக்தி மற்றும் வலுசக்தித்துறையில் நிலவும் சவால்கள் பொருளாதார வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. மத்திய கிழக்குப் போர் போன்ற புவிசார் அரசியல் நெருக்கடிகளால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இலங்கையின் கடந்த ஆண்டு எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,042 மில்லியன் டொலர்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களிலேயே அது 4,082 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளமை மற்றும் ஆண்டின் இறுதியில் இது 6 பில்லியன் டொலர்களை எட்டக்கூடும் என்ற நிலைப்பாடு நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.

டீசல் மானியத்திற்காக பில்லியன் கணக்கில் செலவிடப்பட்டாலும், தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் முறையான விநியோகத்தைக் கட்டுப்படுத்திச் சந்தையில் நெருக்கடியை உருவாக்குவதை எதிர்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் புதிய நிரப்பு நிலையங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மறுபுறம், மின்சாரத் துறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 69 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ள போதிலும், பகல் நேரத்தில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்கான நவீன மின்கட்டமைப்பு மற்றும் பரிமாற்றக் கட்டமைப்பு வசதிகள் போதியளவில் இல்லாதது ஒரு தொழில்நுட்பத் தடையாகும்.

நான்காவதாக, துறைமுகத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்து இலங்கையின் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத மூலோபாய இடைவெளிகள் காணப்படுகின்றன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 3.2 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறன் இருந்தும், தற்போது வெறும் 0.5 மில்லியன் கொள்கலன்களே கையாளப்படுவதால் துறைமுக வளத்திலிருந்து பெறப்பட வேண்டிய உச்ச லாபம் கைநழுவிப் போகிறது.

இதன் முகாமைத்துவத்தைத் தனியார் துறைக்குப் பகிர்ந்தளிப்பதும், மேற்கு முனையத்தின் அலைதடுப்புப் பணிகளுக்கு நிதியொதுக்கீடு செய்வதும் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் நாட்டின் பிராந்திய வர்த்தக வாய்ப்புகள் வீணடிக்கப்படுகின்றன.

அதேபோல், தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டாலும், அவர்கள் நடுமட்டத் திறன்படைத்தவர்களாக இருப்பதும், அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய தரவு தொகுதி துறைகளுக்கான உலகளாவிய வாய்ப்புகளுக்கு ஏற்ப உயர்தரத் திறன்களை முழுமையாக வளர்த்தெடுக்கத் தவறியிருப்பதும் வேலைவாய்ப்பு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இறுதியாக, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் இறுதி ஆறு மாதக் காலப்பகுதியில் நுழைந்துள்ள இலங்கை, வெளிநாட்டுக் கையிருப்பை எதிர்பார்த்த மட்டத்திற்கு உயர்த்த வேண்டிய சவாலை எதிர்கொள்கிறது.

கடந்த காலங்களில் எஸ்-வெட் நீக்கப்பட்டதன் மூலம் மாதந்தோறும் ஏற்பட்ட 10 பில்லியன் ரூபா வருமானக் கசிவு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வெளிநாட்டுத் கடன்களைத் தாங்கும் திறன் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவது அவசியமானது.

சுருங்கக் கூறின், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுவது போல வெளிப்படையான நிருவாகமும் சட்டப் பாதுகாப்பும் முதலீடுகளுக்கு அவசியமான அடித்தளங்களாகும்; இருப்பினும், கிராமப்புற வறுமை ஒழிப்பு, கொள்முறைச் சீர்திருத்தங்கள், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகிய மூலோபாயச் சவால்களை உறுதியான நீண்டகாலத் திட்டமிடலுடன் எதிர்கொண்டால் மட்டுமே, இலங்கையை ஒரு வளமான பொருளாதார மையமாக மாற்றியமைக்க முடியும்.