அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முன்னெடுத்து வரும் சமகாலத்தில் அவர் வெளிப்படுத்தும் அதிரடி வெளியுறவுக் கொள்கைகள், சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ள 'டொன்ரோ கோட்பாடு' (Donroe Doctrine) உலக நாடுகளின் இறையாண்மைக்கு புதிய சவால்களை விடுத்துள்ளது.

இந்த வரிசையில் ட்ரம்பின் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய இலக்காக கிறீன்லாந்து உருவெடுத்துள்ளது. கிறீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் ட்ரம்ப் காட்டி வரும் தீவிரமான போக்கானது வெறும் பொருளாதார ஆர்வத்தை மட்டும் மையப்படுத்தியதல்ல. அதுவொரு நீண்டகால இராணுவ மற்றும் புவிசார் அரசியல் உத்தியின் பகுதியொன்றாகும்.

கிறீன்லாந்தில் பிறந்த பிரபல பழங்குடியின வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான ஆஜு பீற்றர் விடுத்துள்ள எச்சரிக்கை, இந்த விவகாரத்தின் தீவிரத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ட்ரம்ப் கிறீன்லாந்தை எவ்விதத்திலாவது கைப்பற்ற முயன்றால், அதன் அடுத்த கட்டமாக கனடாவே அவரது இலக்காக மாறும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆரம்பத்தில் ட்ரம்பின் இத்தகைய பேச்சுக்களை நகைச்சுவையாகப் பார்த்தவர்கள்கூட, தற்போது அவர் மேற்கொள்ளும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.

'ட்ரம்பின் தற்போதைய இலக்கு கிறீன்லாந்து என்றால், நாளை அவரது இலக்கு கனடாவாக இருக்கலாம்; எனவே ஜனநாயக உலகம் முழுவதும் கிறீன்லாந்துக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும்' என்றும் ஆஜு பீற்றர் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் செயற்பாடுகள் சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என்பதுடன், அண்டை நாடுகளின் பாதுகாப்பு வளையத்தைச் சிதைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.கிறீன்லாந்து ஏன் ட்ரம்பின் பார்வையில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, அங்குள்ள அபரிமிதமான இயற்கை வளங்கள். நவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் இராணுவத் தளவாடங்களுக்குத் தேவையான அரிய மண் தாதுக்கள் (Rare Earth Minerals) அங்கு கொட்டிக்கிடக்கின்றன. தற்போது இதில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில், அதை முறியடிக்க கிறீன்லாந்து அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது.

இரண்டாவதாக, புவி வெப்பமடைதலால் துருவப் பனிக்கட்டிகள் உருகுவது, எதிர்காலத்தில் ஆர்க்டிக் பகுதியில் புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை உருவாக்கும். இந்தப் பாதைகளைக் கட்டுப்படுத்துபவர்களே உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும். மேலும், இப்பகுதியில் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டுவது, அவரது ஆக்கிரமிப்பு எண்ணத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இராணுவ ரீதியாகப் பார்த்தால், கிறீன்லாந்து அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அமெரிக்காவின் மிக முக்கியமான விண்வெளித் தளமான 'பிடூஃபி' (Pituffik) ஏற்கனவே அங்குதான் அமைந்துள்ளது. வட அமெரிக்காவை நோக்கி வரும் ஏவுகணைகளைக் கண்டறிவதற்கும், செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பதற்கும் இந்தத் தளம் மிக அவசியமாகும்.

58,000 மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கிறீன்லாந்திற்குத் தனி இராணுவம் கிடையாது. அதன் பாதுகாப்புக்கு டென்மார்க்கே பொறுப்பாக உள்ளது. எனவே, அலஸ்காவைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் ஆர்க்டிக் படைப்பிரிவுகள் மூலம் ஒரு விரைவான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது அமெரிக்காவுக்கு எளிதான காரியமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இதுவொரு நேட்டோ உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலாகக் கருதப்படும் என்பதால், சர்வதேச அளவில் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது மிக முக்கியமான விடயமாகும்.

மறுபுறம், கிறீன்லாந்து மக்களும் அந்த நாட்டு அரசாங்கமும் அமெரிக்காவின் இந்த விருப்பத்தை முற்றிலும் நிராகரித்துள்ளனர். கிறீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன், ட்ரம்பின் இந்தக் கருத்தை ஒரு 'கற்பனை' என்று எள்ளி நகையாடியுள்ளார். கிறீன்லாந்து தற்போது டென்மார்க் அரசின் கீழ் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்தாலும், தனது சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை அதற்கு உண்டு.

கருத்துக்கணிப்புகளின்படி, 85சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. அவர்கள் டென்மார்க்கிடமிருந்து முழுமையான சுதந்திரத்தை விரும்புகிறார்களே தவிர, மற்றொரு நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் செல்லத் தயாராக இல்லை. மக்களின் இந்தச் சுயநிர்ணய உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் மதிக்கத் தவறுவதால் சர்வதேச சமூகத்தின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ட்ரம்பின் இந்த 'டொன்ரோ கோட்பாடு' கிறீன்லாந்துடன் மட்டும் நின்றுவிடவில்லை; இதுவொரு விரிவான ஆக்கிரமிப்புக் கொள்கையாக உருவெடுத்துள்ளது. மெக்சிகோ எல்லை வழியாக வரும் குடியேற்றங்களைத் தடுக்க அந்நாட்டின் மீது அழுத்தம் கொடுப்பது, மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' எனப் பெயர் மாற்ற ஆணையிடுவது உள்ளிட்ட அவரது அதிரடியான நகர்வகள் தொடரத்தான் செய்கின்றன.

ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அங்கிருந்து வரும் அச்சுறுத்தல்களை இராணுவ ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். கொலம்பியா மற்றும் கியூபா போன்ற நாடுகளின் மீதான அவரது பார்வையும் தற்போதைய பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொருளாதார ரீதியாகப் பலவீனமடைந்துள்ள கியூபா தானாகவே வீழ்ந்துவிடும் என்றும், அதற்கு இராணுவத் தலையீடு தேவையில்லை என்றும் ட்ரம்ப் கருதுகிறார்.

இந்தச் சூழலில், டென்மார்க் அரசு தனது பாதுகாப்பைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஒருகாலத்தில் வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையாகப் பார்க்கப்பட்ட கிறீன்லாந்து விவகாரம், தற்போது இராணுவ அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஒரு வல்லரசு நாடு தனது பொருளாதார மற்றும் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி, சிறிய நாடுகளின் இறையாண்மையைப் பறிக்க முயல்வது உலக அமைதிக்கு உகந்தது அல்ல. சமூக ஆர்வலர்கள் கூறுவது போல, தற்போது கிறீன்லாந்திற்கு இழைக்கப்படும் அநீதி நாளை கனடா போன்ற நாடுகளுக்கும் தொடரலாம்.

எனவே, சர்வதேச சட்டங்களையும், உடன்பாடுகளையும் மதித்து நடக்குமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுப்பது ஜனநாயக நாடுகளின் கடமையாகும். ட்ரம்பின் அடுத்தடுத்த நகர்வுகள் உலக வரைபடத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச சமூகம் மிகுந்த கவலையுடனே எதிர்பார்த்துள்ளது.