ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்ட உரையில், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலர்கள் வரை வளர்ச்சியடையச் செய்யக்கூடிய இலக்குகளை முன்வைத்துள்ளார். டிஜிட்டல் மயமாக்கலானது பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கும் முக்கியமான மூலோபாயப் பிரவேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச ஆளுகை மற்றும் சேவைகளை வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் வழங்குவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்காற்றுவதாகவும், இதற்கென உறுதியான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியுதவிகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026ஆம் ஆண்டில் 25,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச முதலீடுகளை ஈட்டிக்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கணினி தரவுத்தளங்கள் உள்ளடங்கலாக அடுத்த தலைமுறை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரச நிறுவனங்களுக்கான கட்டணங்களை நிகழ்நிலை முறைமையினூடாகச் செலுத்தும் போது அறவிடப்படும் சேவைக் கட்டணத்தை 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்குதல், பணமற்ற சமூகத்தைப் பிரபலப்படுத்த 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு போன்ற பல கொள்கை சார்ந்த நிதி ஒதுக்கீடுகளையும் ஜனாதிபதி அநுரகுமார அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்புகள் அரசாங்கம் டிஜிட்டல் யுகத்தை உள்ளீர்த்துக்கொள்வதற்கான தீவிரமான நாட்டத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஜனாதிபதியின் இத்தகைய இலட்சியப் பிரகடனம் ஒருபுறமிருக்க, அண்மையில் லங்கா கவர்மன்ட் கிளவுட் (LGC) கிட்டத்தட்ட ஒரு வார காலமாகச் செயலிழந்த சம்பவம், டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் உள்ள ஆழமான அமைப்பு சார்ந்த பலவீனங்களை மிகக் கடுமையான விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் செயலிழப்பினால், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் முக்கியப் பதிவுகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மின்-வருவாய் அனுமதிப்பத்திர சேவை, பொலிஸ் அனுமதிச்சான்றிதழ் தளம், வானிலை அவதான நிலையம் போன்ற பொதுமக்களுக்கான பல முக்கிய இணையத்தளங்கள் முடங்கியிருந்தன. இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் சேவைகளை மீட்டெடுத்தாலும், நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பின் பின்னடைவுத் தன்மை, தொழில்நுட்ப நிர்வாகத் திறன் மற்றும் நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை குறித்து அழுத்தமான கேள்விகள் எழுந்துள்ளன.
டிஜிட்டல் ட்ரஸ்ட் அலையன்ஸ் (DTA) தலைவர் லக்மால் எம்புல்தெனிய போன்ற நிபுணர்கள், 'லங்கா கவர்மன்ட் கிளவுட்டின்' ஆரம்ப இலக்குகள் அரசியல் மற்றும் நிர்வாகக் குழப்பங்களால் சிதைக்கப்பட்டுவிட்டதாக விமர்சித்துள்ளனர். 'லங்கா கவர்மன்ட் கிளவுட்டின்' பரிணாம வளர்ச்சிக் கொள்கையில் காணப்படும் நிலையான தன்மையின்மை மோசமான நீண்ட கால திட்டமிடலால் பாதிக்கப்பட்டுள்ளமையை வெளிப்படுத்துகிறது.
தற்போது சுமார் 400 இணையத்தளங்களையும் சில முக்கியத் தரவுகளையும் மட்டுமே கொண்டுள்ள இந்த அமைப்புக்கு பல மில்லியன் ரூபா முதலீடு தேவையா என்ற கேள்வியும் காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு தேசிய தரவு மையமாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், முந்தைய 'லங்கா கவர்மன்ட் கிளவுட் 2.0' இன் மென்பொருள் உரிமத்தை உரிய நேரத்தில் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது போன்ற தொடர்ச்சியற்ற கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டது. இது டிஜிட்டல்மயமாக்கலை நிலையான தேசிய மூலோபாயமாக இல்லாமல், அரசியல் திட்டமாக மட்டுமே அணுகும் போக்கைக் காண்பிக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியில், தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்படும் முறைமை குறித்தும் வெளிப்படைத்தன்மை சார்ந்த கவலைகள் தொடர்ச்சியாகவே நிலவுகின்றன.
உட்கட்டமைப்புப் பிரச்சினைகளை விட, அரச நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணர்களின் பற்றாக்குறை ஒரு மிக முக்கியமான சவாலாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தும், அவர்களுக்குச் சந்தை நிலவரப்படி கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் தவறுவதால் (குறைந்தது மாதத்திற்கு 200,000 ரூபா தேவை), அவர்களை அரச சேவைக்கு ஈர்க்கவோ தக்கவைக்கவோ முடிவதில்லை.
இந்த நிபுணத்துவ இடைவெளி, ஒரு தொழில்நுட்பச் செயலிழப்பின்போது விரைவாகவும் வினைத்திறனுடனும் செயற்படுவதற்கான திறனைக் குறைக்கிறது. மேலும், நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்புகள் 'ஒற்றை மின் முறைமைக் கட்டமைப்பில்' முழுமையாகத் தங்கியிருப்பது தீவிரமான கட்டமைப்பு அபாயமாகும். முழுமையான டிஜிட்டல்மயமாக்கலின் போது, ஒரு பெரிய மின்தடை ஏற்பட்டால், நாட்டின் அத்தியாவசியச் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும் அபாயமுள்ளது. இதுபற்றிய கரிசனைகள் தற்போது வரையில் கொள்ளப்படவில்லை.
ஆகவே 'லங்கா அரச கிளவுட்டின் (LGC)' முடக்கம், இலங்கையின் டிஜிட்டல் ஆளுகைக்கான விழிப்புணர்வுக் குறியீடாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் இலட்சியம், வலுவான கொள்கை, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பு ஆகியவை உடனடியாகவே உள்ளீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் இணையப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக முன்மொழியப்பட்டுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் தற்போது அவசரமானதாக மாறியுள்ளது.
எனினும், இச்சட்டம், பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படாத 'நிகழ்நிலை காப்புச் சட்டம் 2023' உடன் பிணைந்திருப்பது, தனியுரிமை மற்றும் இராணுவத்தின் ஈடுபாடு குறித்து நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சட்டத்தின் வரைவில், 'முக்கிய தேசிய தகவல் உள்கட்டமைப்பு' (CNII) இனம் காணப்படுவதில் 'சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை' (CSRA) இற்குப் பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுவது, வெளிப்படைத்தன்மை குறித்த நியாயமான கவலைகளை ஏற்படுத்துகிறது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட உரையில், 'இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளம் (SLUID), தேசிய தரவுப் பரிமாற்றம் மற்றும் பணமற்ற சமூகத்தை (இணையவழிக் கொடுப்பனவுகள்) நோக்கிய நடவடிக்கைகள் போன்ற பல முக்கிய முன்முயற்சிகளை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், 'லங்கா அரச கிளவுட்' செயலிழப்பானது தெளிவான எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் இலட்சியம் பலனளிக்க வேண்டுமானால், நிதி முதலீட்டுடன் சேர்ந்து, கொள்கைத் தொடர்ச்சி, திறமையான மனிதவளத்தைத் தக்கவைத்தல், மற்றும் வலுவான, வெளிப்படையான சட்டக்கட்டமைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். இந்த அடிப்படைக்கட்டமைப்புப் பலவீனங்களுக்குத் தீர்வு காணாவிட்டால், ஜனாதிபதி அநுரவால் முன்மொழியப்பட்ட டிஜிட்டல் வளர்ச்சி இலக்குகளை அடைவது பெரும் சவாலாகவே இருக்கும்.

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!