தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமைதான் சிறந்த தீர்வெனில் இந்நாட்டில் போர் மூண்டிருக்காது. இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச்சட்டம் தீர்வு அல்ல. எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு முன்வைக்கப்படும். அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படும்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார் .
“ தேசிய இனப்பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தீர்வு அல்ல. மாகாண அபிவிருத்தியும் அதன்மூலம் நடக்காது என நாம் கூறினோம். இது தொடர்பான எமது நிலைப்பாடு இன்னும் மாறவில்லை. மாகாணசபை முறைமை சிறந்த தீர்வு எனில் இந்நாட்டில் 30 வருடகாலம் போர் ஏற்பட்டிருக்காது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், எமது நாட்டின் அரசமைப்பின் ஓர் அங்கமாக 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளது. மாகாணசபை முறைமை தற்போதும் செயற்படுகின்றது. பொலிஸ், காணி அதிகாரங்கள் மட்டும்தான் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. எமது ஆட்சியில் புதிய அரசமைப்பு இயற்றப்படும்வரை தற்போதுள்ளவாறு மாகாணசபை முறைமை செயற்படும்.
அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளுடனும் இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக பேச்சு நடத்தி இணக்கப்பாடு எட்டப்படும். அதன்பின்னர் மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும். அதன்மூலம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி அமைக்கப்படும்.” – எனவும் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
13 குறித்து மொட்டு கட்சி கூறுவது என்ன?
புலிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் வழங்கி ரணசிங்க பிரேமதாச அன்று செய்த தவறின் இரண்டாம் பாகத்தை, 13 பிளஸ் எனக் கூறி இன்று செய்வதற்கு அவரின் மகனான சஜித் பிரேமதாச முற்படுகின்றார் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விமர்சித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் சஜித் டயஸ்போராக்களுக்கு அடிபணிந்துவிட்டார்போலும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கூறியவை வருமாறு,
“ புலிகள் அமைப்பால் பொலிஸார் கொலை செய்யப்பட்ட கொடூரமான நாள் இன்றாகும் (நேற்று). அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசவால் எடுக்கப்பட்ட சில தவறான முடிவுகளாலேயே இந்த அநியாயம் ஏற்பட்டது.
அன்டன் பாலசிங்கம் உள்ளிட்ட புலி உறுப்பினர்களை அன்று கொழும்புக்கு அழைத்துவந்து, பேச்சு நடத்தி ஆயுதங்கள் மற்றும் நிதி என்பன புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டன. இராணுவத்தினர் முகாம்களுக்கு அனுப்பட்டனர். அப்போதுதான் நிராயுதபாணியாக இருந்த 700 பொலிஸார் கொல்லப்பட்டனர்.
சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்துக்கு சென்று , 13 பிளஸ் அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 13 பிளஸ் என்றால் என்ன என்பது குறித்து அவருக்கு தெளிவு உள்ளதா என தெரியவில்லை.
ஜே.ஆர். ஜயவர்தன 13 ஐ கொண்டுவந்திருந்தாலும் 13 ஐ முழுமையாக அமுலாக்கவில்லை. அரச பிரதிநிதியாக ஆளுநர் செயற்பட்டார். அதன்பின்னர் பிரேமதாச, சந்திரிக்கா, டிபி விஜேதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு வந்திருந்தாலும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதில் உள்ள பாரதூரத்தன்மையால் அதனை செயற்படுத்தவில்லை.
ஆனால் சஜித் பிரேமதாச தற்போது 13 பிளஸ் எனக் கூறுகின்றார். மாகாணங்களில் பொலிஸ் கட்டமைப்பு உருவாகினால் என்ன நடக்கும்? சஜித் ஜனாதிபதியாகி அவர் கூறியதை செய்தால், அன்று ரணசிங்க பிரேமதாச படையினரை நிராயுதபாணியாக்கிய முடிவை விடவும் பயங்கரமானதாக அமையும்.
தேர்தலுக்கு முன்னரே இதை கூறியது நல்லம். அப்போது மக்களுக்கு முடிவொன்றை எடுக்க முடியும். பிரேமதாச நாட்டுக்கு பல நல்லவிடயங்களை செய்தார், ஆனால் அமைதி பேச்சுக்கு சென்று முழு நாட்டையும் நாசமாக்கினார். இறுதியில் குண்டு தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் புண்ணியத்தால் போர் முடிவுக்கு கொண்டுவர்படபட்டது. ஆனால் டயஸ்போராக்கள் இன்னும் உள்ளனர். தமது இலக்கை அடைவதற்கு உலகில் பல நாடுகளில் செயற்படுகின்றன. தேர்தல் நெருங்கும்வேளை அந்த குழுக்களுக்கு சஜித் அடிபணிந்துவிட்டார்போலும். எனவே, முக்கியத்துவமிக்க – நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற பிரச்சினைகளின்போது சஜித் சிந்தித்து செயற்பட வேண்டும்.” – என்றார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!