தனது ஆட்சியில் 13 ஆவது திருத்தம் முற்றாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாணத்துக்கான தனது பயணத்தின்போது அறிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரான சஜித்.
அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும், சமயரீதியாகவும் மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள எங்களின் ஆட்சியில் எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் அறிவித்திருக்கின்றார்.
13 ஆவது திருத்தமென்பது பாலும் தேனும் பாய்ந்தோடும் தீர்வல்ல. இந்தப் புரிதலை தமிழர்கள் தமக்குள் வலுவாகவே கொண்டிருக்கின்றனர்.
1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டதே 13 ஆவது திருத்தம். அந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட இடைப்பட்ட 37 ஆண்டுகளில் பல விடயங்கள் கொழும்பால் தன்னிச்சையாக மீளப்பெறப்பட்டிருக் கின்றன.
ஒற்றையாட்சிக்கு உட்பட்டே 13 ஆவது திருத்தம் இருப்பதால் கொழும்பு அரசால் எந்தவொரு விடயத்தையும் தான்தோன்றித்தனமாகச் செயற்படுத்தமுடியும். இவ்வாறானதொரு நிலையில், தான் அரசதலைவரானால் 13 ஆவது திருத்தத்தை முற்றாக நடை முறைப்படுத்தி அதிகாரங்களை மாகாணங்களுக்கு முற்றாகப் பகிர்வதாக சஜித் தெரிவித்திருப்பதானது தமிழர்கள் மீது அவர் கொண்டிருக்கும் ‘குறைமதிப்பிடலின் வெளிப்பாடே.
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால், அதைத் தீர்வாகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் – அடங்கிவிடுவார்கள் என்று சஜித் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கை யின் பிரதிபலிப்பாகவும் கிளிநொச்சியில் வைத்து அவர் வெளிப்படுத்திய கூற்றுகள் அமைந்திருக்கின்றன.
அத்துடன் வரவிருக்கும் ஸ்ரீலங்கா அரசதலைவர் தேர்தலில் புதுடில்லியின் அரவணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு சஜித் கொண்டுள்ள முனைப்பாகவும் இந்த அறிவிப்பைக் கொள்ளலாம்.
ஆதலால் இந்தியா இனியும் 13ஆவது திருத்தம் என்று ஒற்றையாட்சிக்கு உட்பட்டதீர்வையே திரும்பத் திரும்ப ஒரே பல்லவி போன்று பாடிக்கொண்டிராமல் தனது கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.
36 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் தமது கண்முன்னாலே கொழும்பு அரசால் எவ்வாறு கறையான்புற்றுப் போன்று அரிக்கப்பட்டு எதுவுமில்லாது ஆக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தாவது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எதுவும் சாத்தியமில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு இந்தியா நகர வேண்டும்.
36 ஆண்டுகளாக மாறாத சிங்கள தேசத்தின் மன நிலை இனியும் மாறுமா என்பது கேள்விக்குறியே. சிங்கள தேசம் புறஅழுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கு எதை வழங்கினாலும் அதை அந்த அழுத்தம் நீங்கியதும் மீளப்பறித்துக்கொள்ளும் என்பதாலேயே தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப்போராடினார்கள்.
இப்போதும் சிங்கள தேசத்தால் மீளப்பறிக்க முடியாத அதிகாரத்தைக் கோருவதற்கும் அதுவே கார ணம். ஆதலால், 13 தொடர்பான எந்த அறிவிப்பும் தமிழர்களை மயக்காது. அந்த அறிவிப்பை தமிழ்ச் சமூகம் ஏற்காது. நோய் எதுவோ அதற்குத்தான் தீர்வு தேவை.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!