நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி இடைநிறுத்தப்படவுள்ள நிலையில் புதிய கூட்டத்தொடருக்கான நாள் நிர்ணயிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத வகையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாக வேண்டும். அதற்கான திகதியும் குறித்தொகுக்கப்பட வேண்டும்.
இதன்படி புதிய கூட்டத்தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படும்.
ஜனவரி மாதத்துக்கான 2ஆவதுவார நாடாளுமன்ற கூட்டத்தொடர் 23 ஆம் திகதி கூடவுள்ளது. 24 ஆம் திகதியும் நாடாளுமன்றம் கூடும். அன்று இரவு நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படும்.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். அந்த கொள்கை விளக்க உரையின்போது ஜனாதிபதி தேர்தலுக்கான உரிய காலப்பகுதியை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால் தற்போது இயங்கும் கோப், கோபா உள்ளிட்ட குழுக்கள் செயலிழக்கும். புதிய கூட்டத்தொடரின் பின்னர் புதிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கோப் குழுவின் தலைவராக இருந்த ரஞ்சித் பண்டார, ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தபோது பக்கச்சார்பாக செயற்பட்டார். இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. இதனையடுத்து கோப் குழுவின் அமர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, ரஞ்சித் பண்டாரவை நீக்கினால் அரசியல் ரீதியிலான குழப்பம்வரும் (மொட்டு – யானை கூட்டணிக்குள்) வரும் என்பதால், நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினால், புதிய தலைவரை தெரிவு செய்யும் சூழ்நிலை வரும், மோதலும் தவிர்க்கப்படும் என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!