தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இது விடயம் தொடர்பான எமது நிலைப்பாடு மாறாது – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இந்நாட்டுக்கு பொருத்தமற்றது என அந்த முறைமை கொண்டுவரப்படுவதற்கு முன்பில் இருந்தே நாம் வலியுறுத்தி வந்தோம். அது தற்போது உறுதியாகியுள்ளது.
எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாடு மாறாது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுரவின் நிலைப்பாடும் அதுவே.” – எனவும் அவர் கூறினார்.
” நாட்டில் பொருளாதாரம் மேம்படவும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பக்கபலமாக அமைந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்நாட்டில் பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காரணமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்தவர்தான் இந்நிலைமைக்கு காரணம் என நீதிமன்றம்கூட கூறியுள்ளது.
அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால்தான் 30 வருடகால போரும் மூண்டது.
1983 இல் நடைபெறவிருந்த தேர்தல் சர்வஜன வாக்கெடுப்புமூலம் ஒத்திவைக்கப்பட்டு, ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பயன்படுத்தியே இது செய்யப்பட்டது. வடக்கில் உள்ளவர்களுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியாமல்போனது. தெற்கில் எமக்கும் முடியாமல் இருந்தது.
வடக்கும், தெற்கும் பற்றி எரிவதற்கு இந்த நிறைவேற்று அதிகார முறைமையே காரணம் என்பதை ஜனாதிபதி மறந்துவிட்டார்போலும்.” – எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!